Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்! : எஸ்.ஹமீத்

GOTA_BBSகடந்த ஞாயிறு நடுநிசியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது யாழ்ப்பாணம்-கண்டி A9 வீதியில் அமைந்திருந்த மகா பத்ரகாளி அம்மன் ஆலயம். பெரும் இயந்திரங்களைக் கொண்டு இந்த ஆலயம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது.

ஓர் இனத்தின் மத தாற்பரியத்தின் மீது புல்டோசர்கள் பேயாட்டம் ஆடியிருக்கின்றன. ஒரு சமூகத்தின் இரத்த நாள-நாடிகளுடன் இரண்டறக் கலந்த நம்பிக்கைகளின் மீது அராஜகம் மீண்டும் தனது கோரத்தைப் பதிவு செய்திருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களும் வழிபாட்டுத் தளங்களும் . சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் புனிதமானவை; உயர்ந்தவை. அவற்றை மதித்து வாழ்வது மனித பண்பாடாகும். அதுமட்டுமன்றி, மாற்று மதங்களை இழித்துரைப்பதே குற்றமென்றிருக்கையில் அவற்றை அழித்தொழிப்பதென்பது அநியாயமும் அநாகரீகமும் ஆகும். ஆனால், இவ்வாறான அக்கிரமங்கள் அண்மைக் காலங்களாக இலங்கையில் அதிகரித்தே வருகின்றன.

தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இஸ்லாமிய மக்களின் பள்ளிவாசல்களின் மீதான தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டோர் திருப்தியடைந்து விடவில்லை. தேவாலயங்கள், கோவில்கள் மீதான தாக்குதல்களையும் அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது தம்புள்ள அம்மன் ஆலயம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதி முடிப்பதற்குள் இன்னொரு கோயிலோ, பள்ளிவாசலோ, தேவாலயமோ தாக்குதலுக்குள்ளாகியிருக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை.

தம்புள்ள ஆலயம் நிர்மூலமாக்கப்பட்ட விடயம் அடுத்த ஒரு விடயத்தைச் சொல்லாமல் சொல்கிறது. அதனைப் பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு அது நன்கு தெரியும்.

அம்மன் ஆலய அழிப்புக்கெதிராக அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். பள்ளிவாசல்கள் உடைப்புகளுக்கெதிராக தமிழ்த் தலைவர்களும் முற்போக்கு அரசியல்வாதிகளும் மற்றும் நேர்மையும் மனிதமும் நிறைந்த தமிழ்-சிங்கள மக்களும் கண்டனக் குரலெழுப்பியதைப் போல, இந்த விடயத்திலும் முஸ்லிம் அரசியற் தலைமைகளும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் உரத்த தொனியில் பதிவு செய்ய வேண்டும்.

அரசியல் ரீதியாகத் தமக்குள்ளிருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது இன்றைய சூழலில் மிக இன்றியமையாதது. ஐக்கியப்பட்ட மக்களின் எதிர்ப்பலைகளானது உடனடியாக இல்லாவிட்டாலும் காலவோட்டத்தில் அதிசயிக்கத்தக்க நன்மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும்.

Exit mobile version