இன்று காலை 10 மணியளவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பளம் போதாது என்றும் அந்த சம்பள உயர்வை எதிர்த்து கொட்டக்கலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துக்கொண்டனர்.
இதேவேளை, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இரண்டு பிரிவினரும் தங்களுடைய ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்தே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில். அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுத்ததாக மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தங்களுடைய ஆதரவானவர்களை பஸ்களில் இருந்து இறங்கவிடாமல் தடுத்ததாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவானவர்களை மட்டுமே பஸ்களில் இருந்து இறங்குவதற்கு அனுமதித்ததாகவும் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையிலேயே மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தாக்குதலிலேயே மனோ கணேசன் காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிபிசி செய்தி
இலங்கையில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்ட 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மீது சிலர் நடத்திய தாக்குதலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.
கொட்டகலை நகரில் இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான அண்மைய சம்பள ஒப்பந்தத்தை எதிர்த்து, 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்த நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால் இந்தக் கூட்டமைப்புக்கு எதிராக இன்னொரு குழுவொன்று கொட்டகலை நகரில் போராட்டம் நடத்த முனைந்ததாகவும், அந்தக் குழுவினர் தம்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் காயமடைந்த தான் உள்ளிட்ட மூன்று பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் மனோ கணேசன் கூறினார்.
இதேவேளை, கொட்டகலையில் நடந்த தாக்குதல் காரணமாக தமது போராட்டம் இறுதியில் பத்தனை நகரில் நடத்தப்பட்டதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.