Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆயுத வினியோகமும் சமாதானமும் :இரட்டை வேடமாடும் இந்தியா

காலகண்டன்
கடந்த 20 ஆம் திகதி கொழும்பின் அரசியல் இராஜதந்திர வட்டாரங்களில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அரசாங்கத்தின் அவசர அறிவிப்போ அன்றி குண்டுத் தாக்குதல் புரளியோ இதற்குக் காரணம் அல்ல. விஷேட விமானம் மூலம் கொழும்புக்கு வந்திறங்கிய மூன்று அதியுயர் மட்ட இந்திய அதிகாரிகளின் அதிரடி வருகையே மேற்படி பரபரப்புக்குக் காரணமாகும். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜேயசிங் ஆகிய மூவரும் கொழும்பு வந்து இறங்கிய பின்பே அவர்களது திடீர் வருகை கசிந்து பரவத் தொடங்கியது.
இவர்கள் மூவரதும் வருகையை சம்பிரதாய பூர்வமானது என்றோ வழமையானது என்பதாகவோ கொள்ள முடியாது. ஏனெனில் இவர்கள் மூவரும் பதவி வழியாகவும் அனுபவ ரீதியாகவும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல் பொருளாதார இராணுவக் கொள்கை வகுப்புத் தளத்தில் முக்கியமானவர்களாகும். இலங்கையின் இனப்பிரச்சினையை வைத்து இந்திய, பிராந்திய மேலாதிக்கத்தின் காய் நகர்த்தல்களைச் செய்வதில் வல்லவர்களாவர். இதில் சுமார் கால் நூற்றாண்டு காலத் தொடர்பும் அனுபவமும் கொண்டவர்கள்.
இத்தகைய உயர்நிலை அதிகாரிகளின் திடீர்ப் பயண வருகை எல்லா மட்டங்களிலும் பலகோணக் கேள்விகளை எழுப்பியது. இப்போதும் அவற்றுக்கு உரிய விடையைத் தேடுவதில் அரசியல் ஆய்வாளர்கள் நெற்றியைச் சுருக்கியவாறே உள்ளனர். இருப்பினும் ஒவ்வொருவருடைய அரசியல் நோக்கிற்கு ஏற்ப எழுதிய வண்ணமே உள்ளனர். வருகை தந்து ஒன்றரை நாட்கள் தங்கியிருந்து ஜனாதிபதி அவரது இரண்டு சகோதரர்கள் உட்பட ஒரு சில குறிப்பிட்ட பிரமுகர்களை மட்டுமே இந்தியப் பிரம ரிஷிகள் சந்தித்துத் திரும்பினர்.
ஐக்கிய தேசியக் கட்சியினதும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரம சிங்காவையோ அன்றி ஜே.வி.பி.த் தலைமையையோ அவர்கள் சந்திக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவ்விரு கட்சித் தலைமைகளும் இவ் இந்திய அதிகாரிகளின் திடீர் வருகை பற்றி விளக்கக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருந்த போதிலும் இவ் இந்திய உயர்மட்ட மும்மூர்த்திகளின் வருகைக்கு எதிர்வரும் சார்க் மாநாட்டிற்கான முன் தயாரிப்பே காரணம் என்று கூறப்பட்டது. அதில் ஒரு சிறுபகுதி உண்மை இருப்பினும் அதற்கும் அப்பால் நாட்டின் இனப்பிரச்சினை காரணமான யுத்த நிலைமை பற்றி ஆராய்வதே அவர்களது முக்கிய நோக்காக இருந்தது என்றே கூறப்படுகின்றது. ஜனாதிபதியோடு ஒரு மணிநேரப் பேச்சுவார்த்தை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் ஆகிய சகோதரர்களுடனும் படைத்தளபதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதென செய்திகள் வடிந்துள்ளன. இச்சந்திப்புக்களுக்குப் பின்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனையும் தனியே சந்தித்துள்ளனர். ஏனைய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தனுடன் இணைந்து கலந்து கொள்வது இந்திய உயர் மட்டத்தினரால் விரும்பப்படவில்லை என்றும் அறிய முடிகிறது. அதேவேளை சமூக சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தனியே சந்தித்து காலை உணவுடன் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர். மேலும் தமக்குப் பிடித்த சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் கண்டு பேசியுள்ளனர்.
இவ்வாறு இலங்கை வந்து திரும்பிய இந்திய உயர்நிலை அதிகாரிகளின் திடீர் வருகை பற்றி இந்தியப் பத்திரிகைகள் மறைந்திருக்கும் சில உண்மைகளைத் தொட்டுக் காட்டியுள்ளன. இனிமேலும் இந்தியா இலங்கை விவகாரத்தில் அக்கறைப்படாது ஏனோதானோ என்று இருந்தால் மியன்மாரில் இந்தியா செய்த தவறை இரண்டாவது தடவை இழைத்ததாக ஆகிவிடும் எனச் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே அந்த அடிப்படையில் இலங்கையின் ஆயுதக் கோரிக்கை யாவற்றையும் இந்தியா பூர்த்தி செய்யும் நோக்கில் தனது இராஜதந்திர காய்நகர்த்தல்களைச் செய்யும் வகையிலேயே மூன்று உயர்நிலை அதிகாரிகளின் கொழும்புப் பயணம் அமைந்திருந்தது.
இதன் மூலம் சீனா, பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் வாங்கப்படுவதைத் தவிர்த்து இந்தியாவிடம் முழுமையாகக் கொழும்பு தங்கியிருப்பதையே இப்பேச்சுவார்த்தையில் வற்புறுத்தப்பட்டதாகவும் அறியப்படுகிறது. அதேவேளை இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்த இந்திய அதிகாரிகள் இன்றைய யுத்த நிலைமைகள் பற்றி ஆராய்ந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
இத்தனைக்கும் மத்தியில் இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு இராணுவ யுத்த வழிமுறை உரிய வழி அல்லவென்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்புப் பயணத்திற்குப் பின் கருத்து வெளியிட்டதாக இந்தியப் பத்திரிகைகள் கூறியுள்ளன. மேலும் இந்தியா வழங்கும் ஆயுதங்கள் தற்காப்பு வகை சார்ந்தவையே அன்றி தாக்குதல் திறன் கொண்டவை அல்லவென்ற கட்டுக் கதையையும் இந்தியப் பத்திரிகைகள் கட்டமிட்டுக் கூறியுள்ளன. அவ்வாறான ஆயுதங்கள் எவை என்பது தான் நமக்குப் புரியவில்லை. சீனாவினதும் பாகிஸ்தானினதும் ஆயுதங்கள் பயங்கரமானவை என்றால் இந்தியா வற்புறுத்தி வழங்கவுள்ள ஆயுதங்கள் உயிர் உடல் சேதம் விளைவிக்காத புதுவித ஆயதங்களாகவே இருக்க முடியும். இந்தியா அகிம்சையின் தாயகமாக இருப்பதாகக் கூறப்படுவதால் ஒருவேளை அகிம்சை போதிக்கப்பட்ட இந்திய ஆயுதத் தொழிற்சாலைகளில் செய்யப்பட்டவையாக இருக்குமோ என்ற ஒருவகைத் தடுமாற்றம் சிலருக்கு ஏற்படலாம். ஆனால் உண்மை யாதெனில் ஆயுதங்கள் யாவும் மோதல்களிலும் யுத்தங்களிலும் எதிரே நிற்போரைத் தாக்கி அழிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. இந்திய முனிவர்களினதும் அமெரிக்க ஜனநாயக சுதந்திர இரட்சகர்களினதும் ஆயுதங்கள் எவ்வகையிலும் அகிம்சைத்தனமோ இரக்க சுபாவமோ கொண்டவையல்ல. அவை உலக மேலாதிக்கம், பிராந்திய மேலாதிக்கம், ஆயுத வியாபார இலாபம் என்பவற்றையே கொண்டுள்ளன என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இந்திய உயர்நிலை கொள்கை வகுப்பு அதிகாரிகளின் அண்மைய திடீர்ப் பயணத்தின் ஊடாக இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை விவகாரத்தில் மற்றொரு காலடியை எடுத்து வைக்கத் தயாராக உள்ளது. இத்தகைய நகர்வு சீனா, பாகிஷ்தானுக்கு எதிரானது என்பதையே சில தமிழர் தரப்பு அரசியல் நோக்கர்கள் பரப்புரை செய்ய முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பாத ஒரு பக்கம் உள்ளது. அது இலங்கையில் அமெரிக்க மேற்குலகம் ஒரு புறமாகவும் இந்தியா மறுபுறமாகவும் தமது பொருளாதார அரசியல் இராணுவக் காய்களை நகர்த்தி வருகின்ற யதார்த்தத்தின் பக்கமாகும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினை என்ற வரையறைக்குள் இல்லை. அது இப்போது இந்தியாவினதும் அமெரிக்க மேற்குலக ஆதிக்க சக்திகளினதும் போட்டிக்குரிய பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. இந்தியா தலையீடு செய்து பெயரளவிலான தீர்வுக்கு முற்பட்டால் அமெரிக்க மேற்குலக சக்திகள் அதனைக் குழப்பியடிக்கத் திரை மறைவில் தீவிர செயற்பாட்டை முடுக்கிவிட்டுக் கொள்ளும். இதனால் களைப்படைந்து சற்று ஒதுங்கி இந்தியா ஓய்வெடுக்கும் தருணம் பார்த்து அமெரிக்க மேற்குலக சக்திகள் சமாதான மேசையைத் தயார்படுத்தி பேச்சுவார்த்தைக்கு அனுசரணை என்று முயற்சிப்பர். அவர்களது முயற்சிகளுக்குப் பின்னால் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய நலன்கள் படிந்திருக்கும். அச் சந்தர்ப்பத்தைக் குழப்ப இந்தியா தனது அஸ்திரங்களை ஏவிக் கொள்ளும்.
இத்தகைய போக்குகள் தான் கடந்த மூன்று தசாப்த காலத்தின் தேசிய இனப்பிரச்சினையின் பெயரால் இந்திய, அமெரிக்க சக்திகளின் உள்ளார்ந்த ஆதிக்கப் போட்டி இலங்கையில் இடம்பெற்று வந்துள்ளது. இலங்கையின் இன முரண்பாடு ஆளும் வர்க்க பேரினவாத சக்திகளால் ஒடுக்கு முறையாகவும் யுத்தமாகவும் வளர்க்கப்பட்டது என்பதில் இரண்டு கருத்திற்கு இடமில்லை. ஆனால் அத்தகைய நிலைக்கு அவ்வப்போது எண்ணெய் வார்த்து பெரும் யுத்த சுவாலையாக எரியவைத்ததில் இந்திய, அமெரிக்க மேலாதிக்கக் கரங்கள் ஒருபோதும் ஓய்ந்ததில்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அதேவேளை அனைத்து மக்களும் காண வேண்டிய மற்றொரு உண்மை மறைபொருளாகவே இருந்து வருகின்றது.
ஆளும் வர்க்கப் பேரினவாதத் தரப்பும் போராடும் தமிழர் தரப்பும் தத்தமது நிலைப்பாட்டிற்கு உதவுவதற்காக இந்தியாவும் அமெரிக்க மேற்குலகமும் ஓடோடி வரவேண்டும் என்பதையே எதிர்பார்த்து நிற்கின்றன. இத்தகைய சக்திகள் தத்தமது பொருளாதார அரசியல் இராணுவ மேலாதிக்க நலன்களை இலங்கையில் திணிக்க முயன்று வரும் அந்நிய சக்திகள் என்பதை இரு தரப்பினரும் மறந்துவிடுகின்றனர். அந்நியர் வந்தாலும் சரி சுதந்திரம் இறைமையை இழந்தாலும் பரவாயில்லை தத்தமது இருப்பும் ஆதிக்கமும் நிலைத்தால் போதும் என்று நிற்கும் குறுகிய நிலைப்பாடானது முழு நாட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் நாசங்களையே கொண்டு வந்து சேர்க்கவல்லதாகும்.
இந்தியா இப்பொழுது ஒரு புதிய அணுகு முறைக்கு வந்துள்ளது போன்றே தென்படுகிறது. அதாவது தான் ஏற்கனவே கொண்டு வந்த பதின்மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு எல்லா இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் தீர்வாக அமைய வேண்டும் எனக் கூற ஆரம்பித்திருக்கிறது. இதற்கான அழுத்தம் அண்மைய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் இந்திய மும் மூர்த்திகளால் வற்புறுத்தியிருக்கக் கூடும் என்றே நம்பப்படுகிறது. இதற்கு இலங்கை ஜனாதிபதி எத்தகைய பிரதிபலிப்பை வெளியிட்டார் என்பது இதுவரை வெளிவரவில்லை. அதேவேளை தனது கிழக்கு மாகாண சபை அணுகு முறைக்கு இந்தியா வரவேற்புத் தெரிவித்துள்ளதாகவே ஜனாதிபதி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியாவின் நெருக்கமான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆயுத விநியோகம் ஒருபுறம் நடந்தேற அரசியல் தீர்வு வற்புறுத்தல் மறுபுறம் நிகழ ஆரம்பித்து இருப்பதாகவே அரசியல் அவதானிகள் எழுதுகிறார்கள். இத்தகைய செயற்பாடுகள் அமெரிக்க மேற்குலக சக்திகளுக்கு உள்ளூர தாங்கிக்கொள்ள முடியாத அதிர்வுகளாகவே அமைந்து கொள்ளும். ஏனெனில் இனப்பிரச்சினைத்தீர்வு பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளாது வெறுமனே அரசியல் தீர்வு என வாய்களை மெல்லிக் கொண்டு அதேவேளை மனித உரிமை மீறல்கள் பற்றியே அமெரிக்க மேற்குலக சக்திகள் உரத்து வாசித்து வந்தன. அதன் ஊடான ஆரம்பத் தலையீடுகளை ஐ.நா.மூலம் செய்து கொள்ளலாம் என நம்பிச் செயற்பட்டன. ஆனால், அண்மையில் இந்தியாவின் திடீர் அணுகுமுறை அமெரிக்க மேற்குல சக்திகளுக்கு ஆழ்ந்த யோசனைகளை மட்டுமன்றி ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் மறைபொருளாக இருந்து வந்த அமெரிக்க இந்தியப் போட்டியானது இலங்கையை மையமாக வைத்து மேலும் விரிவடையவும் முரண்பாடு வளர்ச்சி பெறவும் கூடிய புதிய சூழல் உருவாகி உள்ளது.
அதனை அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாத அம்சத்துடனும் இணைத்துப் பார்ப்பது அவசியம். இந்தியாவின் இடதுசாரிகளினதும் ஜனநாயக சக்திகளினதும் தீவிர எதிர்ப்பால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாது போனால் அமெரிக்கா கடும் விசனத்திற்கு ஆளாகும் என்பதில் ஐயமில்லை. அதன் ஆத்திரத்தை இலங்கை இனப்பிரச்சினை ஊடாக தீர்த்துக்கொள்ள எத்தனிக்கவே செய்யும். அமெரிக்க ஆதரவு சக்திகளை இலங்கையில் உசிப்பி உதவி செய்து யுத்தத்தை மும்முரமாக்கி இந்தியாவின் அணுகுமுறையினையும் முயற்சிகளையும் முறியடிக்கப் பாடுபடும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படையான உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க முடியாத மகிந்த சிந்தனை அரசாங்கம் முழு நாட்டையும் நாசத்திற்குள் அமிழ்த்தும் யுத்தத்தையே மேற்கொண்டு நிற்கிறது. இதனை இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கவாதிகளும் அமெரிக்க உலக மேலாதிக்க முன்னெடுப்பாளர்களும் தமக்குரியதாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றனர். இதனால், எவ்வித ஒளிக்கீற்றும் தெரியாத இருட்குகையின் வாசலில் இலங்கை நிறுத்தப்பட்டுள்ளது.
நீளம் தெரியாத அந்த இருண்ட குகையின் மறுபக்கத்தில் தான் நாட்டிற்கும் மக்களுக்குமுரிய தீர்வு இருக்க முடியும். அவ்வாறாயின் அந்த மறுபக்கத்திற்கு யார் ஒளியேற்றி நாட்டையும் மக்களையும் அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்பதே எழுந்து நிற்கும் பெரும் கேள்வியாகும்.

Exit mobile version