ஊடகங்களுக்கான அறிக்கை. 18.10.2011
அதேவேளை இத்தாக்குதலானது ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருத முடிகிறது. எனவே தொடரும் இது போன்ற ஆயுதம் தாங்கிய அராஜக குண்டர்களின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என மக்களோடு இணைந்து நின்று எமது கட்சி உரத்துக் குரல் கொடுக்கின்றது.
வடக்குக் கிழக்கில் ஜனநாயகம், சுதந்திரம் இயல்பு வாழ்வு, இல்லாத சூழலை அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அதன் மத்தியிலேயே பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், கொள்ளைகள் மற்றும் கொலைகளை ஆயுததாரிகள் அரங்கேற்றி வந்திருக்கிறார்கள். இன்றும் அதே நிலை தான் தொடர்கிறது. மக்கள் அச்சம் பீதியுடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். அதேவேளை மாற்றுக் கருத்துக்களைகக் கொண்டவர்களும் ஊடகவியலாளர்களும் திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டு வருகின்றார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு உதயன் ஊடகவியலாளர் குகநாதன் ஆயுதக் குண்டர்களால் தாக்கப்பட்டு தலையில் படுகாயமடைந்தார். அதிலிருந்து இன்னும் அவர் பூரண குணமடைவதற்கு முன்பாகவே நேற்று முன்தினம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரான தவபாலன் கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வாறான தொடர் தாக்குதல்கள் மூலம் ஆயுதக் குண்டர்களை வழிநடாத்துவோர் தமக்குப் பிடிக்காதோரை பழிவாங்கிக் கொள்வதுடன் மக்கள் மத்தியில் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அச்சம் பீதியை தோற்றுவிக்கவும் முயலுகிறார்கள். இதன் மூலம் ஜனநாயகம் சுதந்திரம் இயல்பு வாழ்வு மீட்கப்படுவதைத் தடுத்து அடக்குமுறைச் சூழலை வைத்திருக்கவே விரும்புகிறார்கள். எனவே ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் பொதுக் கோரிக்கைகளின் அடிப்படையில் ஐக்கியப்பட்டு முன்நிற்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதை எமது கட்சி இவ்வேளை சுட்டிக் காட்டுகின்றது.
சி.கா. செந்திவேல்.
பொதுச் செயலாளர்.