07.11.2008.
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்கப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் 40 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற இத் தாக்குதலில் மேலும் அதிகளவானோர் காயமடைந்துள்ள அதேவேளை, இத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிகாரிகள், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
வான் தாக்குதல்களுடன் இணைந்த பயங்கரவாதத்திற்கெதிரான போரில் எம்மால் வெற்றிபெற முடியாதென கர்சாய் தெரிவித்துள்ளார்.
தலிபான்களுக்கெதிரான நடவடிக்கையொன்றுக்காக உதவிக்கு அழைக்கப்பட்ட விமானங்கள் தவறுதலாக திருமண நிகழ்வொன்றின் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்கப் படையினரின் பேச்சாளர், நடந்த சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டு வரவதற்கான வேண்டுகோளை விடுத்துள்ள கர்சாய், அமெரிக்காவில் பதவியேற்கப் போகும் ஜனாதிபதியிடம் எனது முதலாவது வேண்டுகோள், ஆப்கானில் பொதுமக்களின் உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்பதாகும். அத்துடன், பயங்கரவாதிகளின் முகாம்களையும் அவர்களின் பயிற்சி நிலையங்களையும் இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் கர்சாய் நெருக்கமாக இருக்க விரும்புவதை வெளிப்படுத்துவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.