Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆப்கானில் 8 அப்பாவி சிறுவர்கள் வெளிநாட்டு துருப்புகளால் படுகொலை!

ஆப்கானிஸ்தான் வீடொன்றில் தூக்கத்திலிருந்த சிறுவர்கள் உட்பட 10 பேரை வெளியே இழுத்து வந்து ஒரு அறைக்குள் வைத்து சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 8 பேர் பாடசாலை சிறுவர்களென அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கொல்லப்படுவதற்கு முன்னர் சிலருக்கு கைவிலங்கு இடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய வெடிமருந்துகளை தயாரிக்கும் பணிகளுக்குப் பொறுப்பான பயங்கரவாதக் குழுவொன்றின் உறுப்பினர்களே கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இக் கொலைக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து 10 வயது சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காபூல் மற்றும் ஜலலாபாத்தில் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப் படுகொலைச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து இப் படுகொலை இடம்பெற்ற கிழக்கு மாகாணமான குனாரின் நராங்க் மாவட்டத்திற்கு ஜனாதிபதி ஹமீட் கர்சாய் விசாரணைக் குழுவொன்றை அனுப்பி வைத்தார்.

இங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானமொன்றிலிருந்து இறங்கிய சர்வதேச படைப்பிரிவு ஆறு, ஒன்பது மற்றும் 10 ஆம் தரங்களில் கல்வி கற்கும் 8 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேரை மூன்று வீடுகளிலிருந்து அழைத்து வந்து சுட்டுக் கொன்றுள்ளமை தெரியவந்துள்ளது.

காபூலிலிருந்து குனாருக்கு விமானத்தில் வந்ததன் மூலம் இவர்கள் விசேட படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக விசாரணைகளுக்கு தலைமை வகித்த அசாதுல்லா வபா தெரிவித்துள்ளார்.

மேலும் நள்ளிரவு ஒரு மணியளவில் இரு அறைகளிலிருந்து சிறுவர்களை ஒரு அறைக்குள் அழைத்து சுட்டுக் கொன்றிருப்பதாகத் தெரிவித்துள்ள இவ் அதிகாரி;

இவர்கள் அல்ஹைடா உறுப்பினர்களாக இருப்பது சாத்தியமற்றது. இவர்கள் அனைவரும் அப்பாவி சிறுவர்கள் இத் தாக்குதலை நான் கண்டிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட சிறுவர்கள் அனைவரும் 11 தொடக்கம் 17 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்று கூறப்படும் அதேவேளை, இவர்களின் புத்தகப் பைகள் யாவும் இரத்தத்தில் தோய்ந்திருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version