கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக வறிய நாடுகளை ஆக்கிரமித்து வரும் அமரிக்க அரசு சிரியாவை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ள வேளையில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள அமரிக்கப் படைகள் மீது மிகப் பெரும் தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராடிவரும் குழுக்களில் ஒன்றே இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலுள்ள அமரிக்க இராணுவ முகாமை நோக்கியே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமரிக்கப் படைகளுக்குச் சொந்தமான பல வாகனங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் மூன்று தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
தாக்குதலின் காரணமாக நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளுக்கு உணவு வினியோகத்தை வழங்கும் பிரதான பாதை மூடப்பட்டுள்ளது என்றும் பல மணி நேரமாக துப்பாக்கிச் சத்தங்களும் குண்டு வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வழமைக்கு மாறாக நேட்டோ படைப் பேச்சாளர் வெளியிட்டுள்ள ‘குறுகிய’ அறிக்கையில் தமது தரப்பில் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கின்றன. வழமை போல பொய்களை செய்தியாக்கும் அமரிக்க சார்பு ஊடகங்கள் நேட்டோப் படைகளின் அறிக்கையை விஞ்சி பல்வேறு தற்கொலைப் படைகளே இத்தாக்குதலை நடத்தின என்று பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன.