Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் தொடர் குண்டு பலர் பலி

hyderabad_blast_sl_21-02-20ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகளில், 20 பேர் பலியாயினர்; 60 பேர் காயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரில் உள்ளது, தில்சுக் நகர் பஸ் நிலையம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும், ஆந்திர மாநில போக்குவரத்து கழக பஸ்கள், இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன. இதையொட்டி நிறைய வணிக வளாகங்களும் உள்ளன.
தில்சுக் நகர் பஸ் நிலையம் எதிரே, கோனார்க் மற்றும் வெங்கடாத்ரி என்ற பெயரில், திரையரங்குகள் அடுத்தடுத்து உள்ளன. இதில், கோனார்க் திரையரங்கத்திற்கு வெளியே உள்ள சாலையோர உணவகம் அருகே, நேற்று இரவு, 7:01 மணிக்கு, பயங்கர குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த ஐந்து நிமிட இடைவெளியில், வெங்கடாத்ரி தியேட்டர் அருகே, மற்றொரு குண்டும், 15 நிமிட இடைவெளியில், தில்சுக் நகர் பஸ் நிலையம் அருகே, மூன்றாவது குண்டும் வெடித்தது. இந்த மூன்று குண்டு வெடிப்புகளிலும், 20 பேர் பலியாயினர்; 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும், ஏராளமானோர், பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியதால், கடும் நெரிசலும் ஏற்பட்டது. இதனாலும், சிலர் இறந்திருக்கலாம் மற்றும் காயமடைந்திருக்கலாம் என, நம்பப்படுகிறது.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை, ஆம்புலன்ஸ்களில் ஏற்றி, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில், வேறு ஏதாவது குண்டுகள் உள்ளனவா என, வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் தேடினர்.
கோனார்க் தியேட்டரில் வெடித்த குண்டை, டிபன் பாக்சில் வைத்து இருந்திருக்கலாம் என்றும், வெங்கடாத்திரி தியேட்டர் அருகே வெடித்த குண்டை, சைக்கிளில் வைத்து இருந்திருக்கலாம் என்றும், முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.குண்டு வெடிப்பை அடுத்து, டில்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட, பல மாநிலங்களில், போலீசார்
உஷார் படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களிலும், தீவிர கண்காணிப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஐதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவனத்தினர்,
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதோடு, டில்லியில் உள்ள இந்த அமைப்பினர், எல்லை
பாதுகாப்பு படை சிறப்பு விமானம் மூலம், ஐதராபாத் விரைந்துள்ளனர்.
மத்திய,
மாநில அரசுகள் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக, சமீபத்திய சில
மாதங்களாக, பெரிய அளவிலான குண்டு வெடிப்புகள் எதுவும், எங்கும் நிகழவில்லை.
இந்நிலையில், ஐதராபாத்தில், குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது, மத்திய
அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்புக்கு, ஆந்திராவில் நீண்ட காலமாக செயல்பட்டுவரும், நக்சலைட் அமைப்பினர் காரணமா அல்லது பயங்கரவாதிகள் காரணமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஐதராபாத்தில், இதற்கு முன், 2007 ஆகஸ்ட், 25ல், இதேபோல், இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. முதல் குண்டு பூங்கா ஒன்றிலும், இரண்டாவது குண்டு உணவகம் ஒன்றில் வெடித்தது. அதற்கு பின், தற்போது, இந்நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் ஆவேசம் ஐதராபாத் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்திற்கு, தலா, 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும், என, பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.ஐதராபாத்தில், நேற்று இரவு அடுத்தடுத்து, மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
கொடூரமான முறையில் நடத்தப்பட்ட, இந்த குண்டு வெடிப்பு தாக்குதல், கண்டனத்திற்குரியது. குற்றவாளிகள் யாராக
இருந்தாலும், அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. பொதுமக்கள் இந்த
நேரத்தில் அமைதி காக்க வேண்டும். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண
உதவியாக, தலா, 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம்
ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு
மன்மோகன் சிங் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது, அவர் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ஐதராபாத் தில்சுக் நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 119 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு பற்றி விசாரணை நடத்த மாநில அரசு தனிப்படை அமைத்துள்ளது. மேலும் குண்டுவெடிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுவரைக்கும் உலகம் முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களில் பல அரச பயங்கரவாதிகளாலும் மேலும் பல மத மற்றும் ஏனைய அடிப்படைவாத சமூக விரோதிகளாலும் நடத்தப்பட்டுள்ளது. யார் யாரைத் தண்டிப்பது?

Exit mobile version