ஆதிவாசிப் பெண்கள் மானபங்கப்படுத்தல்:உண்மைகளை வெளிக்கொணர விசாரணை வேண்டும்.
இனியொரு...
சோலன்நகரில் விடுதி யொன்றில் பெண்கள் மான பங்கத்துக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பெண் நீதிபதி ஒருவர் விசாரணை நடத்த வேண்டுமென்று இமாச்சலப்பிரதேச ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சோலன்நகரில் “பாரதிய ஆதிம் ஜதி சேவக்சங்” என்னும் அமைப்பு ஒரு மகளிர் விடுதியை நடத்தி வருகிறது. அங்கு தங்கியுள்ள கின்னாவூர் மற்றும் ஜார்கண்ட் ஆதிவாசிப் பெண்கள் மான பங்கப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து இமாச்சலப்பிர தேச ஜனநாயக மாதர் சங்கம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
சேவக் சங் அமைப்பில் பெண்கள் மானபங்கம் அடைவது குறித்து உண்மைகளை வெளிக்கொணர ஒரு பெண் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் பால்மா சவுகான் கோரிக்கை வைத்துள்ளார். இந்த புகாரை மாநில அரசு தீவிரமாக விசாரிப்பதுடன் விரைவான விசாரணை நடப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அது மாநில அரசைக் கேட்டுள்ளது.
இதுபோன்ற வழக்குகளில் ஏற்படும் காலதாமதத்தால் வழக்குகள் நீர்த்துப்போவதுடன் குற்றவாளிகள் தப்பித்து விடுவதும் வழக்கமாகிவிட்டது என்றும் பால்மா சவுகான் குறிப்பிட் டார். சிம்லாவின் டோட்டு பகுதியின் டாவியில் வாய் பேசா, காது கேளா பெண்கள் குறித்த வழக்குகளிலிருந்து மாநில அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் அது குற்றம் சாட்டியது. சம்பவம் நடந்து ஒரு வருடமான பின்னும் அரசு சாரா அமைப்புகள் நடத்தும் ஆசிரமங்கள், சங்கங்கள் மற்றும் விடுதிகளில் பெண் கள் மானபங்கம் அடைவது தொடர்கிறது என்றும் ஜனநாயக மாதர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆதிவாசி பாலிகா கல்வி வளாக விடுதியின் தற்காலிக விடுதிக்காப்பாளர் பவன் கோயலை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதும் 24 விடுதிகளை நடத்தி வருகிறது. கோயல் மீது 13 வயது ஆதிவாசிப் பெண் கல்பா அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.