இது குறித்து குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் சமத்துவமாக வசிக்க வேண்டும் என்ற நோக்கில் மாநிலம் முழுவதும் முதல்வர் கருணாநிதி சமத்துவபுரங்களை அமைத்து வருகிறார். இதை இந்திய குடியரசுக் கட்சி வரவேற்கிறது.
ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்டித் தர மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு பல்வேறு தரப்பினருக்கான சமத்துவபுரம் திட்டத்திற்கு பயன்படுத்துவது கண்டனத்திற்கு உரியது. ஆதிதிராவிடர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் தாட்கோ மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் வீடு கட்டித்தர வேண்டும். வேறு எந்தத் திட்டத்திற்கும் இந் நிதியை பயன்படுத்தக் கூடாது. சமத்துவபுரங்களுக்கு தமிழக அரசே நிதி ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
3 ஆண்டுகளில் பலமுறை அமைச்சரவை, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்திய முதல்வர், மத்திய, மாநில அரசுகள் தலித் மக்களுக்கு ஒதுக்கும் நிதி அவர்களை சென்றடைகிறதா, அதில் ஏதேனும் குளறுபடிகள் நடக்கிறதா என மறுஆய்வு செய்ததுண்டா.
இலங்கை அகதிகளுக்கு இங்கேயே குடியுரிமை அளிப்பதோ, வாக்குரிமை அளிப்பதோ ஆரோக்கியமானதல்ல. அவர்களை இலங்கைக்கு அனுப்பி குடியமர்த்த போராடுவதுதான் முதல்வரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
அம்பேத்கரின் நினைவு நாளை இந்திய குடியரசுக் கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் உறுதி ஏற்பு நாளாக கடைபிடித்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் 13-ம் தேதி அம்பேத்கரின் 53-வது ஆண்டு நினைவு நாள். இதையொட்டி வேலூரில் மாநில அளவில் மாநாடு நடைபெற உள்ளது என்றார் தமிழரசன்.
கட்சியின் மாவட்டத் தலைவர் ரா.சி. தலித்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.