Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆதவன் தீட்சண்யா – பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு : டி.அருள் எழிலன்

nandikiram

அன்புள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கு,

நான் உங்களைப் போல போலி மார்க்ஸிய அடிமையல்ல. மாறாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக பழங்குடி மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டவனும், நந்திகிராமில் மார்க்ஸ்சிஸ்டுகளால் கொல்லப்பட்ட விவசாயத் தோழர்களின் மீதான படுகொலைகளுக்காகவும், மேற்குவங்க மார்க்சிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று வேட்டையாடப்படும் ஒரு இனமாக மாறியிருக்கிற பழங்குடி இனத்தின் இன்னொரு பிரிவில் பிறந்தவன் என்கிற முறையிலுமே இதை உங்களுக்கு எழுத நேர்ந்தது.

நீங்கள் தமிழ் நதிக்கு எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்தது. அவரைப் போட்டு காய்த்து எடுத்து விட்டீர்கள். இதற்கெல்லாம் அவரிடம் என்ன பதில் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்னும் நிலையில் என்னிடம் சில பதில்கள் இருக்கின்றன. அதைப் பதில்களாக நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லை வழக்கம் போல இதெல்லாம் புலிக் கோஷம் என்று நிராகரித்தாலும் சரி எமக்கு அது குறித்து கவலை இல்லை.

மதுரையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் காரசாரமான உரையாடலின் போது தமிழ்நதி ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்று உங்களைக் கேட்டதாகவும், நீங்கள் அதற்கு ‘‘நீங்கள் மலையக மக்களையும், தலித்துக்களையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்தினீர்கள்? ஏனைய அமைப்புகளைக் கொன்றீர்கள்? உங்களுக்காக ஏன் நாங்கள் பேச வேண்டும். அதை எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?’’ என்று பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள். சத்தியமாக தமிழ்நதி சொல்லவில்லை.

நீங்கள் பேசியது குறித்து தேவேந்திரபூபதியிடம் கேட்டபோது, அவர் தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமிடையிலான விவாதத்தில் வந்தது என்று சொல்லிவிட்டு பிஸியாக இருப்பதாகவும், அப்புறம் பேசுவதாகவும் சொன்னார். நான் அவரை விட பிஸியாக இருந்தேன் என்பதைத் தாண்டி இதை அவர் பேச விரும்புகிறாரோ இல்லையோ என்பதால் அதை விட்டு விட்டு இதை எழுதத் துவங்கிவிட்டேன்.

நீங்கள் பேசியது உண்மை என்றால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உங்கள் பேச்சு மிக ஆபாசமானது. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு, தினந்தோறும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படும் ஓர் இனம் குறித்த உங்களின் இந்தப் பேச்சு தலித் அரசியலின் பெயரால் நீங்கள் செய்த ஆபாசமான வன்முறை. புலிகளின் தவறுகளை மட்டுமே வைத்தும் ஈழத்தின் ஆதிக்க சாதி அமைப்பை வைத்தும் நிகழ்காலத்தில் நடந்துள்ள மாபெரும் இனவெறிக் கொலைகளை, கொடுமைகளை மறைப்பீர்கள் என்றால், நீங்கள் ஈழம் என்கிற கருத்துருவையே மறுக்கிற நிராகரிக்கிற பார்ப்பன தலைமையிலான உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் நின்று கொண்டு தலித் அரசியலை துணையாக்கி உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்று கூறுகிறேன்.

தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு தொடர்பாக வலதுகளுக்கும் இடதுகளுக்கும் ஏராளமான முரண்கள் உண்டு. புதிய தேசம் ஒன்று அதுவும் வலதுசாரிக் கொள்கை கொண்ட தேசம் ஒன்று உருவாவதை மார்க்ஸிஸ்டுகள் நீங்கள் விரும்பமாட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமை என்ற மார்க்ஸிய கோட்ப்பாட்டைக் கூட உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்கிற நிலையில், நாம் தேர்தல் பரபரப்பில் இருந்தபோது, அங்கே வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது சிங்களப் படைகள். ‘சண்டையை நிறுத்து; பேச்சுவார்த்தை நடத்து’ என்று இன்று லால்கரில் ஒலிக்கிற உங்கள் குரல் ஈழத்திற்காக ஒலிக்கவில்லை.

தமிழ் மக்களை புலிகள் பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். லால்கரில் ஐம்பது கிராமங்களை இராணுவம் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றி விட்டது. அந்த கிராமங்களின் பெரும்பங்கு மக்கள் மாவோயிஸ்டுகளோடு ஜார்க்கண்ட் காடுகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள். அந்த ஆதிவாசிகள் எப்படி மாவோயிஸ்டுகள் இல்லையோ – ஆனால் மார்க்ஸ்சிஸ்டுகள் செய்த துரோகம் எப்படி அவர்களை மாவோயிஸ்டுகளை நோக்கி நகர்த்தியதோ – இராணுவம் துரத்தும் போது சிக்கினால் சீரழிந்து விடுவோம் என்று எப்படி மாவோயிஸ்டுகளோடு சென்றார்களோ, அப்படியே வன்னி மக்களும் புலிகளுடன் போனார்கள். அதுதான் உண்மை. வன்னி மக்கள் எல்லாம் புலிகள் என்றோ ஈழ மக்கள் எல்லோருமே புலிகள் அமைப்பில் குப்பி சுமந்தவர்கள் என்றோ யாருமே சொல்லவில்லை. அவர்கள் சிங்களனை விட புலிகள்தான் தமக்கு பாதுகாப்பானவர்கள் என்று நம்பினார்கள். அதுதான் உண்மையும் கூட.

இந்தியா, கம்யூனிச சீனா, பாகிஸ்தான், ஈரான், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பிராந்திய, ஏகாதிபத்திய வல்லரசுகளின் கூட்டு இராணுவ பலத்துடன் மோதிய புலிகளால் அவர்களையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பதோடு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் அப்போரின் கசப்பான முடிவு. உண்மையில் இலங்கை அதன் உண்மையான இராணுவ பலத்தோடு புலிகளை எதிர்கொண்டிருந்தால் கிழக்கையும் மீட்டிருக்க முடியாது வடக்கையும் மீட்டிருக்க முடியாது என்பதோடு இந்தப் போரின் முடிவில் பெரும் அழிவை இலங்கை இராணுவம் சந்தித்திருக்கும் என்பதுதான் இராணுவ யதார்த்தம். ஆனால் அரசியல்? அது துளி கூட புலிகளிடம் இல்லையே? அழிவுக்குப் பிறகு இன்றைக்கு புலி ஆதரவாளர்கள் சொல்கிற அரசியல் போராட்டம் என்கிற கருத்தை மூன்று வருடங்களுக்கு முன்பே, செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலேயே நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இராணுவ வாதத்தால் எல்லாவற்றையும் வெல்லலாம் என்ற புலிகளின் மிதமிஞ்சிய நம்பிக்கையும் இந்த கசப்பான முடிவுக்கு ஒரு காரணம். இதை நாம் நெடுமாறன் அவர்களிடமிருந்தோ அல்லது சீமான் பேசியோ, அல்லது வரதராஜனிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் யதார்த்தம்.

இன்றைக்கு மாவோயிஸ்டுகளை அரசியல் ரீதியாக வெல்ல வேண்டுமே தவிர அதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியாது என்று மேற்குவங்கத்தில் சொல்ல வேண்டிய கசப்பான யதார்த்தத்துக்கு வந்திருக்கிற நீங்கள் ஈழம் என்று வந்தால், புலிகள் என்று வந்தால் புலி எதிர்ப்பின் பெயரால் சிங்கள வெறியர்களுக்கு காவடி தூக்குகிறீர்கள். சமீபத்தில் லீனாமணிமேகலை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பிரான்சில் இருந்து வந்திருந்த சுகன் சிங்களர்களின் தேசிய கீதத்தை பாடித்தான் தன் உரையை தொடங்கினார். (வாங்குன காசுக்கு ரொம்பத்தாண்டா கூவுறான் கொய்யால). ஆனால் அப்படி பாடுவதற்கு முன்னால் புலிகளையும் அவர்களுக்காக பாடல்கள் எழுதிய காசி ஆனந்தன் அவர்களையும் தன் அறிவால் உடைத்துத் தகர்த்து விட்டே இந்த மொள்ளமாரித்தனத்தை செய்தார் சுகன். மகாசேனனும், துட்டகைமுனுவும் பண்டாரவன்னியனையும், எல்லாளனையும் வென்றதைவிட கடினமான வெற்றி என்று தமிழ்மக்களை வென்றதை ஒரு வார விழாவாக கொண்டாடச் சொன்னான் பயங்கரவாத ராஜபட்சே. அதை சிங்கள தேசிய கீதத்தை சென்னையில் பாடி கொண்டாடிவிட்டுப் போனார் சுகன்.

தேசத்துரோகிகளும், மறுத்தோடிகளும் எப்படி ஒரு தேசத்தின் அதுவும் பாசிச பயங்கரவாத தேசத்தின் கீதத்தை பாட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்ப்பற்று என்று தாங்கள் நம்புகிற ஒன்றிற்காக, தமிழர், தமிழினம் என்று உணர்வுப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிற ஒன்றிற்காக ஆவேசமாகப் பேசும் தமிழகத்து ஈழ ஆதரவாளர்களை வைத்தே நீங்கள் ஈழ விடுதலையை அணுகுறீர்கள். புலிகளின் தோல்வியில் ஒட்டு மொத்தமாக சிதைக்கப்பட்டுக் கிடக்கும் மக்களின் பிணங்களின் மீது நின்று சிங்கள தேசியகீதத்தைப் பாடும் சுகன் போன்றோருக்கும், உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் எனக் கேட்கும் உங்களைப் போன்ற தலித்தியப் பார்வை கொண்ட மார்க்ஸ்சிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?

புலி எதிர்ப்பு குறித்தும் இலங்கை இறையாண்மை குறித்தும் இன்றைய சூழலில் பேசுவதில் தான் ஆதாயம் அதிகம். புலி எதிர்ப்பு என்கிற கருத்துக்காக இலங்கை அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை புலத்தில் கொட்டுகிறது. சிங்கள தேசிய கீதத்தை பௌத்த மரபுக்குள் நின்று பாடுகிற சுகன்கள்தான் இன்றைய இலங்கைச் சூழலில் ஆயிரம் கருணாக்களுக்கு சமம். ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு புலிகள் காசு கொடுப்பார்கள் என்பதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை. அவர்கள் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வார்களே தவிர அவர்கள் யாருக்கும் கொடுத்தார்கள் என்பதை நான் நம்பவில்லை.

ஆனால் புலத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் இங்கு புலிகளை எதிர்ப்போர், ஆதரிப்போர் என இருசாராரையுமே அங்கு அழைத்து விருந்து வைப்பதும் கவனிப்பதும் இருந்தது. அந்த வகையில் சிலர் புலத்திற்கு அழைத்தவர்களுக்கு நன்றியாக செயல்படுகிறார்கள். காப்பி கோப்பை கழுவியும், கார்பெட் துடைத்தும், டாய்லெட் க்ளீன் பண்ணியும் சம்பாதித்த காசில் இங்கிருந்து போய் வந்த சில புலி ஆதரவாளார்கள் இந்தத் தேர்தலின்போது புலிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தார்கள் என்பதைக் குறிப்பிடுவதோடு புலி ஆதரவாளர்களை விட புலி எதிர்ப்பாளார்களுக்கு கிடைக்கிற அனுகூலம் அதிகம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னார்வக்குழுக்கள், இலங்கை அரசு என பலதரப்பிலும் பணம் கொடுக்கிற ஒரு துறைதான் புலி எதிர்ப்பு.

புலிகளின் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டத்தையோ, சகோதரப் படுகொலைகளையோ, சிறுபான்மை முஸ்லீம்களை துரத்தி விட்டதையோ – மாற்றுக்கருத்தோ கண்டனமோ இல்லாமல் நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என நினைக்கிறீர்களா? (புலிகளுக்கு மட்டுமல்ல அங்கு ஆயுதம் தூக்கிய எல்லா போராளிக் குழுக்களுக்குமே தெளிவான விடுதலைப் பார்வை இருந்ததில்லை.) இந்தியாவை நம்பியே ஈழப் போரை துவங்கினார்கள். சகோதரப்படுகொலையில் புலிகள் நடந்து கொண்ட விதத்தைத் தவிர, ஏனைய அமைப்புகளை விட புலிகள் சிறந்தவர்கள்தான். என்னைக் கேட்டால் நான் பார்த்த தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவரும், என்னில் நிறைந்திருப்பவரும் பிரபாகரன்தான். நீங்கள் ஆசியாவின் சேகுவேரா என்று பிரபாவை நக்கல் செய்தாலும் உண்மை அதுதான். தன்னையும் தன் பிள்ளைகளையும் களத்தில் பலியாக்கி வீரமரணமடைந்த பிரபாகரன், (பிரபாகரன் சரணடைந்து கெஞ்சினார்; உயிர்ப்பிச்சை கேட்டார் என்றெல்லாம் புலி எதிர்ப்பு சகோதரக் குழுக்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது தனி) – இலங்கைக்கு எதிராக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்த க்யூபாவின் முன்னாள் போராளியான சேவோடு பிரபாகரனை ஒப்பிடுவதல்ல விஷயம் – உண்மையில் பிரபாகரன் என்கிற பிம்பம் ‘சே’வை தமிழக இளைஞர்களிடம் காலியாக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் யதார்த்தம்.

புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. காரணம் எமது மக்களை கொன்றொழித்தவர்களை நாம் எப்படி நண்பர்களாகக் கொள்ள முடியும்? இந்தப் போருக்குப் பிறகு ஒரு பேரினவாத, பயங்கரவாத அரசாகவே நான் ராஜபட்சேயையும் இலங்கை அரசையும் பார்க்கிறேன். இனி எப்போதும் தமிழ் மக்கள் சிங்களர்களுடன் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் இல்லை. ஆனால் இங்குள்ள சி.பி.எம் வரதாராஜனும், பிரகாஷ்காரத்துக்களும் இலங்கையின் இறையாண்மை குறித்தே கவலைப்படுகிறார்கள். விளைவு மேற்குவங்கத்திலும், கேரளத்திலும் உங்களின் கட்சி இறையாண்மை களவு போனது. மேற்கு வங்கத்தில் வரக்கூடிய காலங்களில் உங்கள் கட்சி அப்புறப்படுத்தப்படும்.

பட்டாச்சார்யாக்களும், நாயனார்களும், யெச்சூரிகளும், நம்பூதிரிகளும், பிரகாஷ்காரத்துக்களும், பாப்பா உமாநாத்துக்களும், வாசுகிகளுமான பார்ப்பன தலைமையே மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலைமை. கேரளத்தில் அச்சுதானந்தன் தலித் என்று நீங்கள் சொல்லலாம். பாவம் என்ன செய்வது? மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் அச்சுதானந்தனுக்கு கட்சியில் செல்வாக்கில்லை. கட்சி ஊழல் மன்னன் பிரணாய் விஜயனையே கொண்டாடுகிறது. விளைவு அச்சுதானந்தன் தனிக்கட்சி துவங்கும் ஆலோசனை கூட நடத்தினார்.

நீங்களும் நானும் நம்பக் கூடிய தலித் அரசியலின் உரையாடலை நீங்கள் ஈழத்துக்கு எதிராக, புலிகளுக்கு எதிராக, எளிய தமிழ் மக்களின் இந்துக் கதையாடலுக்கு எதிராக வைத்து தமிழ் அரசியலை உடைத்தெறிகிறீர்கள். சிங்களப் பேரினவாதத்திற்கு மாறாக தமிழ்ப் பேரினவாதம் என்ற ஒன்றை முன்வைக்கிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். புலிகளின் ஜனநாயக மறுப்பை முன்னிட்டு வைக்கும் இந்த தமிழ்ப் பேரினவாதம் என்கிற அயோக்கியத்தனத்தை உங்களால் நிறுவ முடியுமா? மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் வன்னிப் போர் வடக்கில் மட்டும் ஐம்பதாயிரம் விதவைகளை உருவாக்கி இருக்கிறதாம். நான்காயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தவர்களாக, அன்றாடம் பாலியல் கொடுமை, கொலைகளுக்குள் வாழ்கிறார்கள். இவர்களா தமிழ்ப் பேரினவாதிகள்.

தமிழர் உரிமைக் கோரிக்கையை உடைக்க நீங்கள் பயன்படுத்தும் தலித் அரசியலை உங்கள் கட்சிக்குள் ஒரு விவாதமாகவாவது வைக்க முடியுமா? நானும் உத்தபுரத்திற்காக எழுதினேன், சட்டக்கல்லூரி நிகழ்விற்காக எழுதினேன். ஆனால் உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் உத்தபுரத்திற்காக எழுதிய அளவுக்கு பிறபடுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியின் பிடியில் இருந்து வதைக்கப்பட்ட சட்டக்கல்லூரி தலித் மாணவர்கள் குறித்து எழுதவில்லையே ஏன்? அதற்காக போராடவில்லையே ஏன்? சங்கரன்கோவிலில் கொல்லப்பட்ட இரண்டு தலித் சிறுவர்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை இங்கே தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் இட்டுக் கட்டி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஜெர்மனியில் அகதிகளுக்கு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்தும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை பார்த்தும் இலங்கை அரசின் அனுசரணையோடும் வாழும் சுசீந்திரனை பொறுக்கி எடுத்து புது விசையில் நேர்காணலாக வெளியிட்டிருந்தீர்களே? அந்த நேர்காணலில் பதில்கள் மட்டுமல்ல, நீங்களும் யவனிகாவும் கேட்ட கேள்விகளுமே நக்கலாகத்தான் இருந்தது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி மரியாதைக்குரிய முத்துக்குமார் குறித்த கேள்விகள் எல்லாமே கிண்டல் தொனியில்தான் இருந்தது. புலி எதிர்ப்பின் பெயரால் பௌத்த மரபுக்குள் ஒழிந்து மக்கள் அழிவை ரசிக்கிற மனோநிலையில் இருக்கும் உங்கள் நண்பர்களும் நீங்களும் பேசுவதுதான் மார்க்ஸியமா? இது மார்க்சிய இனவாதம் இல்லையா? சமணக்காட்டை அழிக்க அன்றைய பார்ப்பான் சமணர்களைக் கழுவுவேற்றியதைப் போல இன்று பௌத்த மரபுக்குள் ஒழிந்து கொண்டு புலி எதிர்ப்பின் பெயரால் தமிழ் மக்களைக் கழுவேற்றுகிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். இதையே நீங்களும் செய்கிறீர்கள். இந்த சுசீந்திரனை அம்பலப்படுத்தி இணையம் வழியே ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது அதையும் உங்களுக்குத் தருகிறேன்.

தமிழ்நதிக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், அவர்கள் ஊர் திரும்பிச் செல்வது குறித்து எழுதியிருந்தீர்கள். எந்தத் தமிழனும் வாழ்வதற்குரிய சூழலோ சுதந்திரமாக சென்று வரும் சூழலோ இலங்கையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைய இலங்கைச் சூழலில் ஷோபாசக்தியோ, சுகனோ, நீங்களோ கொழும்பு சென்றால் உங்களுக்கு இலங்கை அரசின் சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் உங்கள் பௌத்த மரபுதான் அங்கே இப்போது ரத்த வெறியோடு தமிழ் மக்களை வீழ்த்தியதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ந்தியோ, புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த என்னை மாதிரி நபர்களோ இல்லை ஏனைய ஈழ ஆதரவாளர்களோ இலங்கைக்கு அல்ல இராமேஸ்வரத்துக்கே செல்ல முடியாத தமிழர் அரசியல் வீழ்ச்சியுற்ற இந்த நிலையைத்தான் சுகன் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்.

தமிழ்நதியால் தற்போது அங்கு செல்ல முடியாது என்பது தெரிந்திருந்தும் அவர் தமிழகத்தில் இருப்பது குறித்து கிண்டல் செய்கிறீர்கள். நீங்களோ நானோ நமக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறது. மனைவி குழந்தையோடு சந்தோசமாக வாழ்கிறோம். ஒரு அரங்கக் கூட்டம் என்பதும் மாற்றுக்கருத்து என்பதும் இந்த வாழ்வில் நாம் செலவிடுகிற மிகக் குறைவான இன்னொரு பகுதிதான். ஆனால் அவர்களுக்கு அப்படியல்ல. காலம் முழுக்க அவர்கள் இழப்புகளினூடே வாழ்கிறார்கள். இந்தியாவில் இருந்து இந்த அரசால் எப்போது துரத்தப்படுவோம் என்று அஞ்சி வாழ்கிறார்கள். அவர்கள் சகஜமான வாழ்வை இங்கு வாழ முடியவில்லை. ஆனாலும் தமிழகச் சூழல் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.

தமிழ்நதிக்கும் உங்களுக்கும் இடையிலான இலக்கிய, அரசியல் விவாதங்களை முன்னெடுக்கும்போதே அவரது உயிர்வாழ்வோடு தொடர்புடைய தமிழக இருத்தல் குறித்து நக்கல் செய்கிறீர்களே? புலத்தில் இருந்து வருகிற தமிழ்நதி ஆனாலும் சுகன் ஆனாலும் ஷோபாசக்தியானாலும் அவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை இலங்கையில் இருந்து கள்ளத்தோணி வழியாக முகாம்களுக்கு வருகிற ஏழைத் தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை. அகதி என்றால் மேற்குலகில் இருந்து வருவோரே என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருந்தாலும் அவர்கள் இங்கு சந்தோசமாக இல்லை. அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. போவதற்கு இடம் இருந்தால் போவார்கள். ஆகவே அவர்களை ‘‘இப்போ உங்க நாட்டுக்கு போங்களேன் பாப்போம்’’ என்று வெவ்வே காட்டாதீர்கள். அது அசிங்கமானது.

தமிழக தமிழ்த் தேசியவாதிகள் குறித்து…

பொதுவாக புலி ஆதரவாளர்கள் என்றும் தமிழ் தேசியவாதிகள் என்றும் அழைக்கப்படுகிற தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. சாதி ஒழிந்த தமிழ் தேசியம் பேசும் குழுக்கள், சுயநிர்ணய உரிமை பேசும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற இடது அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம் போன்ற தீவிர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள், அப்புறம் நெடுமாறன், சீமான் போன்றவர்கள். இதை விட ஆர்.எஸ்.எஸ். நகைமுகன் போன்றோர் கூட தமிழர் விடுதலை குறித்துப் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் நமக்கு பிடித்தவர்களாகவும் பிடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். தலித் அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே ஈழ விடுதலையை எறிந்து விடுவீர்களா என்ன?

தலித் மக்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை, அருந்ததியினரின் உள் ஒதுக்கீடு கோரிக்கை, சட்டக்கல்லூரி, உத்தபுரம் போன்ற விவகாரங்களில் தமிழ் தேசியவாதிகளின் கள்ள மவுனத்தை நான் வெளிப்படையாக தீவீரமாக கண்டித்திருக்கிறேன். ஆனால் சீமான் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார் என்கிறீர்கள். ஈழம் தவிர இட ஒதுக்கீடு, பார்ப்பன எதிர்ப்பு தொடர்பாகவும் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவரது ஈழக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு. உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத, காலியாக உள்ள இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன போது அதை வரவேற்று அறிக்கை விட்ட ஒரே தமிழ் தலைவன் யார் தெரியுமா? சி.பி.ஐ.எம் வரதராஜன்தான். பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் முலாயம் சிங் யாதவ் உள் ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்கிறார். மார்க்ஸ்சிஸ்டுகள் குதியோ குதி என்று குதிக்கிறார்கள். எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது பத்து பார்ப்பனர்கள் தலைவர்களாக வந்தார்கள் என்கிற பழைய டயலாக் இன்றைய சி.பி.ஐ.எம் -க்கும் பொருந்தும்.

வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்கள்

பெருந்தன்மை, அன்பு, கருணை, கரிசனம் இந்த வார்த்தைகளை எல்லாம் இப்போது நான் அதிகமாகக் கேட்கிறேன். சுகன் கூட இப்படி ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகளை அன்றைக்குப் பேசினார். கேட்பதற்கு ‘திவ்யமாக’ இருந்தது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்ப்பணிப்பு உங்களிடம் இருக்கிறதா? வெறுப்புணர்வுக்கு எதிரான முகமென்றால் உங்களுக்கு உடனே தெரிவது இந்து ராமைத்தான். ஆமாம் கொலைகார ஜெயேந்திரனின் சிஷ்யப் பிள்ளையும் குட்டி காமுகனுமான விஜயேந்திரனை தன் காரில் வைத்து ஹைதராபாத்தில் இருந்து அழைத்து வந்த மார்க்சிய முகமூடியான இந்து ராமிடம் இருந்தே தற்காலத்தில் வெறுப்புணர்வுக்கு எதிரான முகமும் இந்த வார்த்தைகளும் பிறக்கின்றன. சந்திரிகாவிடம் எப்போது அவர் சிங்கள கேல் விருது பெற்றுக் கொண்டாரோ அப்போதே அவரது வெறுப்புக்கு எதிரான முகமூடி கழண்டு அம்மணமாகிவிட்டது. ஆனால் அதே இந்து ராமுடன் கூட்டு சேர்ந்துதான் சிபிஐஎம் ஈழப் பிரச்சனையில் நிலைப்பாடு எடுக்கிறது; வெறுப்புணர்வுக்கு எதிரான கூட்டம் நடத்துகிறது. சிங்கள பாசிஸ்ட் கட்சியும் இனவெறிக் கட்சியுமான ஜே.வி.பி-க்கும் மார்க்ஸ்சிஸ்டுகளுக்குமான தொடர்பு ஆழமாக நோக்கப்பட வேண்டியது. சென்னையில் நடக்கும் இவர்களின் மாநாட்டுக்கு அவர்கள் கொழும்பில் இருந்து வருவதும் கொழும்பில் நடக்கும் அவர்களின் மாநாட்டிற்கு இவர்கள் செல்வதுமாக இந்து ராம், ஜே.வி.பி, மார்க்ஸ்சிஸ்ட் கூட்டுதான் ஈழத்தின் மீதான் கொலை வெறிக் கொள்கையை கொண்டிருக்கிறது. ஆதவனின் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டை தலித்திய அரசியலில் இருந்து அணுகுவதென்பது ஷோபா சக்தியின் சிந்தனை. அவருடைய இன்னொரு கூந்தல் நடிகன்தான் சுகன். ஒருவர் பௌத்தமரபு, ஒருவர் மறுத்தோடி, இன்னொருவர் தலித் அரசியல் நிலைப்பாடு கொண்டவர். புலி எதிர்ப்புக்கு ஒன்று சிங்கள் அரசு ஆதரவிற்கு ஒன்று என்று மிகத் துல்லியமான அமைக்கப்பட்டிருக்கும் குழு.

சிபிஐஎம்-என் அறிவிக்கப்படாத லோக குரு இந்துராம். இந்துராமின் அயலுறவுக் கொள்கைதான் சிபிஐஎம்-ன் அயலுறவுக் கொள்கை. கட்சி வளர்த்துவிட்ட செக்குமாட்டு சிந்தனைகளின் வார்ப்புதான் ஆதவன் போன்றவர்களின் ஈழப்பிரச்சினை நிலைப்பாடு. தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்களை சுசீந்திரன் போன்ற புலியெதிர்ப்பு குழுவினரிடமிருந்து உருவியெடுத்து தலித் அரசியல் நிலைபாட்டில் இருந்து ஈழத்தை அணுகுகிறார் தோழர்.

ஈழத்தில் இந்து மதமும் சாதியும் இருக்கிறது என்ற உலக மகா கண்டுபிடிப்பு ஒன்றை இவர்கள் பிரான்சுக்கும் ஜெர்மனுக்கும் போய் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று வரை இந்துப் பாசிச பார்ப்பனக் கருத்தியல் குறித்து மார்க்ஸ்சிஸ்டுகளுக்கு தெளிவான பார்வையே கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை தந்தை பெரியாரை இழிவுபடுத்தி காந்தியை வைத்து ஜல்லி அடித்துக் கொண்டிருந்தவர்கள்தான் இவர்கள். இங்குள்ள மார்க்ஸ்சிஸ்ட் கட்சியில் தலித்தியத்திற்கோ, பெரியார் சிந்தனைகளுக்கோ துளியும் இடம் கிடையாது. நிலைமை இப்படி இருக்க ஆதவன் பேசுகிற நம்புகிற கொள்கைகளை குறைந்த பட்சம் கட்சியின் மாநிலக் குழுவிலாவது வைக்க முடியுமா? என்ன செய்ய? பில்டிங்கு ஸ்டிராங்கு! பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு!!

சாதி எங்கே இருக்கிறது? இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சாதி இருக்கிறது. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஐஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏனோ? எல்லா இடத்திலும் இருக்கிறது ஆகவே அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. இனவாதமும் இனக் கொலைகளுமே ஒரு நாட்டின் கடந்த கால நிகழ்வாக இருக்கும் போது அதை எதிர்கொள்ளத் துணியாமல் புலிகளையிட்டு தலித்தியத்தின் பெயரால் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா? கட்சியின் அடுத்த விசாரணையை அவர் சந்திக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாக பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்.

ஆதவன் நீங்கள் தலித் அரசியலில் இருந்தால் மார்க்ஸ்சிஸ்டாக இருக்க முடியாது. நான் தலித் அரசியலில் இருந்து கொண்டே தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது இதுதான் யதார்த்தம். தமிழகத்தில் தமிழ், தமிழன், தமிழினம். திராவிடர் என்கிற ஒற்றை அடையாளத்தின் கீழ் இணைவதை நான் எதிர்க்கிறேன் காரணம், தலித் அரசியல் நிலைப்பாடுதான். ஆனால் ஈழத்தில் அப்படியல்ல. அது சாதீய சமூகமாக இருந்தாலும் இனப்படுகொலையும் இன முரணுமே அங்கு பிரதானம். எப்படி ‘‘வர்க்கப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும்’’ என்று உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் சொல்கிறார்களோ அது போல ஈழத்திலே தமிழ் தேசியப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும் என்று நான் சொல்லவில்லை. அந்த முட்டாள்தனமும் எனக்கில்லை. ஆனால் அந்த தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் செயல்படாதன்மையை பயன்படுத்தி தலித்தியம் என்கிற அரசியலை உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு இனியும் பயன்படுத்தாதீர்கள். அதிலிருந்து உங்களுக்கு ஆதாயமாக பொய் பிரச்சாரம் செய்யாதீர்கள். “ஆமாம் ஆதவன் ஒரு மநு விரோதி எப்படி மநுவின் நிழலில் அரசியல் செய்ய முடியும்?”

குறிப்பு:

(ஈழ நிலைப்பாடு ஒன்றை மட்டுமே வைத்து, ஆதவனின் தலித் அரசியல் – இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடுகளில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. மாறாக இவற்றிலெல்லாம், அவரது கட்சி நிலைப்பாடே அவருக்கு எதிராக இருக்கும்போது ஏன் ஷோபா சக்தியின் ஸ்பீக்கரை இங்கே ஒலிக்க வேண்டும்? ஷோபாவே நேரடியாக இங்கே பேசலாம். அதற்குத் தடை ஒன்றும் இல்லை.)

இந்து ராமின் மார்க்ஸ்சிஸ்ட் முகமூடி

கட்டுரையை எழுதி முடித்து, ‘அப்பாடா’ என்று கீற்றிற்கு அனுப்ப இணைய தளத்தில் உலாவியபோது இந்தச் செய்தி கண்ணில்பட்டது.

மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்காணிப்பு முகாம்கள் என்று இலங்கை அரசாலும் இந்து ராமாலும் அழைக்கப்படும் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அன்றாடம் பாலியல் கொடுமைகள் அதன் விளைவாய் தற்கொலைகள் என்று ஓர் இனமே அழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு பாசிச கொடூர மிருகங்களிடம் சிக்கியிருக்கிறது. முகாம்கள் குறித்து அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை மனித உரிமை அமைப்புகளையோ தொண்டு நிறுவனங்களையோ முகாம்களுக்குள் அனுமதிக்க மறுக்கிற இலங்கை அரசாங்கம் அங்கு அன்றாடம் கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் கேள்விக்கிடமின்றியும் சாட்சியங்களின்றியும் நடத்தி வருகிறது.

உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்களை அனுமதிக்காத இலங்கை அரசு முகாம்களைப் பார்க்க அழைத்துச் சென்றது யாரைத் தெரியுமா? மார்க்சிஸ்ட் முகமூடியை அணிந்து முற்போக்கு பேசிவரும் இந்து ராமை… பார்ப்பன வெறி பிடித்த இந்து ராம் இப்போது முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு இலங்கை அரசிற்கும் ராஜபட்சேவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். தோழர் ஆதவன் அவர்களே வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்களின் யோக்கியதை இப்போதாவது தெரிகிறதா? அது மட்டுமல்ல இலங்கைக்கு இப்போது ராஜமரியாதையோடு செல்லத் தகுதியானர்கள் யார் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.

அந்த செய்தி இதோ,

சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன – இந்து ராம் கூறியதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது:

இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன என்பதை இதன்போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் முகாம்களுக்கு சென்று உண்மை நிலைமையை அறிக்கையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக முகாம்களில் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மக்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றுவார் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்து பத்திரிகையின் ஆசிரியர் கடந்த காலம் முதல் இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமான முனைப்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை ஆட்சியாளர்களுடன் நெருங்கி தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.

நன்றி- http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=11424&cat=1

வாங்குன காசுக்கு sorry சந்திரிகாவிடம் வாங்குன விருதுக்கு ரொம்பதாண்டா கூவுறான்…கொய்யா…ல. என்று போய் விடலாம். ஆனால் நம் மௌனம் அப்படி அமைதியடைய மறுக்கிறது.

ஒரு இனமே அழிந்து கண்ணீரிலும் இயலாமையிலும் தவித்துக் கொண்டிருக்கும் போது கொலைகார இராணுவத்துக்கும் கொடூர ராஜபட்சேவிற்கும் சான்றிதழ் கொடுக்கும் இம்மாதிரி மநுவாதிகளை மக்கள் விரோதிகளை, ஆதவன், முடிந்தால் அம்பலப்படுத்துங்கள்.

– டி.அருள் எழிலன் (arulezhiland@gmail.com)

ந்ன்றி : கீற்று http://keetru.com/literature/essays/arul_ezhlilan_4.php

Exit mobile version