உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்குள் இடம்பெற்ற முரண்பாடினால், தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தமிழத் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஆனந்தசங்கரியின் தலைமையிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துள்ளன.
இதனால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சி, தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அங்கத்துவக் கட்சிகளில், மக்களின் செல்வாக்கினைப் பெற்றுள்ள உறுப்பினர்களைத் தமிழரசுக் கட்சிக்குள் இணைப்பதற்கு வெளிப்படையாகவே பேரம்பேசி வருகின்றது.
இதற்குச் சான்றாக அண்மையில் ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்தவரும், முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தமிழரசுக் கட்சியின் சலுகைகளுக்கு விலைபோய் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
இந்த அற்ப சலுiகைகளை மறைப்பதற்காக ‘தலைவர் பிரபாகரன் கைகாட்டிய கட்சியைவிட்டு விலகுவதற்கு தான் தயாரில்லையெனவும் அறிக்கையும் விடுத்திருந்தார்.
இலங்கை அரசியலில் தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகளே பேசுபொருள். அதற்கமையவே ரவிகரனும் தனது சுயலாபத்துக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரiனை ஓர் ஆயுதமாகக் கையாண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எதேச்சதிகாரப் போக்குடன் செயற்படுவதாகவும், அக்கட்சியின் கொள்கையான வடக்குக் கிழக்கு இணைப்பு, சமஷ்டியாட்சி முறை என்பவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டு, அரசாங்கத்தின் நலனுக்காக செயற்படுகின்றது எனக் குற்றம சாட்டிய அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியின்கீழ் அணிதிரண்டுள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கையாக ஒற்றையாட்சியின்கீழ், 13ஆவது அரசியலமைப்பின்படி ஆட்சியமைப்பதே. இதனைத்தான் 1990ஆம் ஆண்டு இந்தியா தமிழ் மக்கள் மீது திணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் எந்த உரிமைக்காக காலம் காலமாகப் போராடினார்களோ, அவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டு, தற்போது ஆரம்ப கட்டத்திற்கே அரசியல்வாதிகள் மக்களை இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் ஆதாயமடைவது இந்தியாவும், சிறிலங்கா அரசுமேயொழிய, தமிழ் மக்கள் இல்லையென்பதை இந்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்வார்களா?