ஈசன் அல்லது சோமசுந்தரம் புவனேஸ்வரன் என்பவர் 2009 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார். அங்கு நீண்ட விசாரணைகளின் பின்னர் அவுஸ்திரேலிய அரசால் அகதியாக அங்கீகரிக்கப்பட்டு நிரந்தர வதிவிட விசாவைப் பெற்றுக்கொண்டார். இன்று ஈசன் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இலங்கையில் அவரது உயிரிற்குப் அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் கருதப்படுகின்றது.
உலகம் முழுவதும் தமிழ் அகதிகளில் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களை இனம்கண்டு அழிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. பிரான்ஸ்,பிரித்தானியா,கனடா,அவுஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் தமிழ் அகதிகள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. புலிகள் என அடையாளப்படுத்தியே இத்தாக்குதல்களும் கைதுகளும் இடம்பெறுகின்றன.
இந்த அடையாளப்படுத்தலின் பின்னணியில் உலகம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இயங்கும் உளவு நிறுவனங்களின் முகவர்கள் செயற்படுகின்றனர். அமைப்புக்களையும், நிகழ்வுகளையும் மனிதர்களையும் புலி என அடையாளப்படுத்துவதன் ஊடாக இவ்வாறான அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இலங்கை அரசு சார்பாகச் செயற்படும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களான Madison Group, Beltway Government Strategies போன்றவற்றிற்கும் காட்டிக்கொடுப்பாளர்களின் தலைமைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன.