அவிசாவளை என்பது எங்கள் கொழும்பு மாவட்டம். இங்கு பென்ரித் தோட்டத்தில் வாழும் நமது மக்கள் பிச்சைகாரர்களோ, அகதிகளோ அல்ல. இந்த மக்களுக்கு உணவு பார்சல்களை கொண்டு வந்து தர வேண்டாம். இந்த மக்களுக்கு வேண்டியது, உயிர் வாழும் உரிமை. இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தூரத்தில் அமைந்துள்ள ஒரு இடத்தில் உடனடியாக மாற்று காணி வழங்கி அங்கே இந்த மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரேயொரு கோரிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அவிசாவளை பென்ரித் தோட்ட வாயு கசிவு தொடர்பாக, மனோ கணேசன் தலைமையில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் உட்பட ஜனநாயக மக்கள் முன்னணி குழு இன்று மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையீடு செய்தது. முறையீட்டையடுத்து ஊடகவியலாளர்களிடம் பேசிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நாங்கள் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி, எதிர் கட்சியில் இருந்தாலும் சரி, எங்கள் மக்கள் இந்த நாட்டின் எந்த மூலையிலும் சாகடிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துகொண்டு இருக்க மாட்டோம். அந்த கொடுமையை தடுத்து நிறுத்தவும், இதுபற்றி உலகறிய செய்யவும் எங்களால் முடிந்த அனைத்தையும் நாம் செய்வோம். இது தான் பொறுப்புள்ள எதிர்க்கட்சி செய்யும் வேலை. தங்கள் பெருந்தலைவரின் கால்களை பிடித்தாவது கெஞ்சி மன்றாடி இந்த மக்களுக்கு வீடுகட்டி கொடுப்பது ஆளும்கட்சி வேலை.
கடந்த மாதம் 9ம் திகதி இந்த சம்பவம் நடந்த உடனேயே நமது கட்சி குழுவினர் ஸ்தலத்துக்கு விரைந்து சென்று வந்து என்னிடம் அறிக்கை சமர்பித்தார்கள்.அதன் பிறகு நானும் அங்கு சென்று வந்தேன். இந்த முறை பெரிய வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் சிறிய அளவில் நீண்ட காலமாக வாயு கசிவு இருப்பதை நாம் தற்போது அறிந்துள்ளோம். ஆகவே இந்த மக்கள் இன்று மெல்ல, மெல்ல சாகின்றார்கள் என்பது உண்மை.
இது தொடர்பாக நான் 13ம் திகதி இந்த விடயத்தில் பொறுப்பு கூறவேண்டிய தேசிய நீர் வளங்கள் சபை, சுற்று சூழல் அதிகாரசபை, கொழும்பு மாவட்ட செயலகம், ஹன்வலை பிரதேச செயலகம், சீதாவாக்கபுர நகரசபை, புசல்லாவை பெருந்தோட்ட நிறுவனம் ஆகிய அனைத்துக்கும் எழுத்து மூலம் கடிதம் எழுதிவிட்டு கடந்த இரண்டு வாரகால அவகாசம் தந்தேன்.
பிரதானமாக பொறுப்பு கூற வேண்டிய தேசிய நீர் வளங்கள் சபை, சுற்று சூழல் அதிகாரசபை ஆகிய இரண்டு அரசாங்க நிறுவனங்களும் எனக்கு பதில் கூறவில்லை. அவர்களை விசாரித்தால் தாங்கள் பொதுநலவாய மாநாட்டு வேலைகளில் மூழ்கி உள்ளதாகவும் இது பற்றி கலைப்பட நேரமில்லை என்றும் தகவல் வருகிறது.
மக்கள் செத்து ஒழிந்தாலும் பரவாயில்லை, நாங்கள் மாநாட்டை நடத்தியே தீருவோம் என இந்த அரசு ஒற்றை காலில் நிற்கிறது. மாநாடு நடக்கட்டும். ஆனால், அதற்காக நாட்டில் அனைத்து செயற்பாடுகளும் இடை நிறுத்தப்படுவதா? இந்த மாநாடு நடந்து முடிவதற்கு முன்னர் இன்னொரு அசம்பாவிதம் பென்ரித் தோட்டத்தில் நடக்க கூடாது என நான் பிராத்திக்கின்றேன். ஏனென்றால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துமனைக்கு கொண்டு செல்ல அம்புலன்ஸ் வருவதற்கும்கூட மாநாடு முடிய வேண்டும் என்பார்கள்.
இந்த விடயத்தில் தொடர்புள்ளதாக, நாங்கள் குறிப்பிட்ட அனைத்து அரசு நிறுவனங்களையும் அழைத்து உடன் பொது விசாரணை ஒன்றை நடத்துவதாக இன்று மனித உரிமை ஆணையாளர் எமக்கு உறுதியளித்துள்ளார். அந்த அடிப்படையில் 4147/13 என்ற முறையீட்டை நாம் இன்று செய்துள்ளோம். மாற்று காணியில் வீடு கட்டி கொடுக்கப்பட வேண்டும் என்பதுவே எமது ஒரே கோரிக்கை. இது நியாயமான கோரிக்கை. எமது எதிர்பார்ப்பின்படி காரியம் நடக்காவிட்டால், ஜனநாயக மக்கள் முன்னணியும், தோழமை கட்சிகளும் கூடி முடிவெடுத்து இந்த விடயம் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்போம்.