Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அவளும் அலரி மாளிகை விருந்தும்…! : எஸ்.ஹமீத்

women4

பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து
நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை
சுதந்திரப்
பசியெழுந்தது பெரிதாய்…!

*****

அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால்
ஆயுதங்களுடன் உறவாடி-
ஆவேசத்துடன் போராடி-
இரத்தத்தில் நீராடி-
எதிரிகளைப் பந்தாடி
ஈற்றில்…
இலட்சியக் கோட்டை இடிந்துவிழ-
தோற்றுத் துவண்டு சரணடைந்து-
இன்றோர் மொட்டைத் திரியாய்-
பட்ட கொடியாய்
கெட்ட குடியாய்-
ஓலைக் குடிலுள் ஒடுங்கிய வாழ்வு…!

*****

சீராட்டி வளர்த்த சின்னக்கா,
சிறு வயதிருந்தே சேர்ந்து வாழ்ந்த
சினேகிதிகள்,
அப்பாவின் அண்ணன்மார் தம்பிமார்
அவர்தம் குடும்பத்து அங்கத்தவர்கள்
இன்னும்…
உற்றார் உறவினர் ஊராரென
அத்தனை பேரும் விட்டோட-
அவளை விட்டும் வெருண்டோட-
அபலையாய்…அனாதையாய்…!

*****

கண்காணிப்புப் போர்வை போர்த்துக் காரிருளில்
கதவு தட்டும் கருநாகங்கள்
விசாரணைப் போதுகளில்
விஷம் பாய்ச்சி வெளியேறும்!

*****

ஒரு பசியும் இல்லாப் போது கூட
‘உண்ணுக…பருகுக’ என்றுபசரித்த கடைக்காரரெல்லாம்
உறு பசியென வந்தின்று உதவி கேட்டால்
‘ஓடிப்போ’ வென விரட்டுகின்றார்…!

*****

இவள் முதுகுத் துப்பாக்கி கண்டு
எச்சில் கூட்டி விழுங்கியோரெல்லாமின்று
முகத்தின் முன்னாலேயே
துப்புகின்றார் தைரியமாய்…!

*****

நடு வகிடெடுத்த இரட்டைப் பின்னலில்
நடுநடுங்கியோரெல்லாம் இன்றிவளின்
பரட்டைத் தலை பார்த்துப்
பரிகாசம் புரிகின்றார்…!

*****

முன்னொரு போதிலிவள்
சீருடை தந்த அச்சத்தில்
சிறுநீர் கழித்த
கள்ளுத் தவறணைக் கண்ணுச்சாமியின்று
கண்ணடித்து சைகை காட்டும்
கர்மமும்தான் நடக்கிறது…!

*****

புனர் வாழ்வு தருவதாய்த்தான் சொன்னார்கள்..
சில அதிகாரிகளோவதனைப்
புணர் வாழ்வெனப் புரிந்து கொண்டு
இவளையணுகும்
புதிரும்தான் நிகழ்கிறது….!

*****

ஒரு கவளச் சோற்றுக்காய்
ஊர் முழுதும் இவள் அலைய…
அலறி மாளிகையின் விருந்துக்காய்
அலைமோதும் நம்மவர்கள்…!

*****

அட-காதலிலும் போரினிலும் மட்டுமல்ல-
அரசியலிலும் எல்லாமே
அழகுதானோ…?

Exit mobile version