வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அழைப்பு நாளை வர்த்தமானி மூலம் விடப்படவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்வர். இக்கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது