Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அழிக்கப்படும் தமிழ்க் கலைகளை பாதுகாப்பதற்கான போராட்டம் – 26.07.2014 5 மணி

லைக்கா நிறுவனத்தின் ஆதரவில் 26.07.2014 அன்று நடைபெறும் நிகழ்வு ஒன்றின் முன்பாக பறை முரசம் அறைந்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை பறை- சுதந்திரத்தின் குரல்(PARAI – Voice Of Freedom) என்ற குழுவினர் அறிவித்துள்ளனர். இக்குழுவினரால் வெளியிடப்பட்ட போராட்ட அழைப்பு அறிக்கை கீழே:

இலங்கையில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனத்தின் புலம்பெயர் கூறுகள் நாங்கள்! சிங்கள பௌத்த இனவெறியர்களாலும் ஏகபோக அரசுகளாலும் சூறையாடப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் கூட வியாபாரமாக்கப்படும் அவமானகரமான சூழலில் நாங்கள் வாழ்கிறோம். அபகரிக்கப்படும் தமிழ் மண்ணில் உலகின் பல்தேசிய நிறுவனங்கள் தமது சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொள்கின்றன. ஒருபுறத்தில் சிங்கள பௌத்தக் குடியேற்றங்களும், மறுபுறத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் தமிழ் அடையாளத்தை அழித்து வருகின்றன.

இனச்சுத்திகரிப்பு தங்குதடையின்றித் தொடரும் மண்ணில் தமிழர்களின் கலையும், காலாச்சாரமும், பண்பாட்டுக்கூறுகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இனச்சுத்திகரிப்பின் இன்னொரு வடிவம் கலை-பண்பாட்டுக் கூறுகளை ஆக்கிரமித்து அகற்றுவது. தமிழ்ப் பேசும் மக்களின் கலை வடிவங்களுக்கு நீண்ட இறுக்கமான வரலாறைக் காணலாம். மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து செழுமை பெற்ற இக்கலை கலாச்சார விழுமியங்கள் பல்தேசியப் பெரு நிறுவனங்களின் பணபலத்தோடு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதிகளால் அழிக்கப்படுகின்றன. தென்னிந்தியாவின் வன்முறைக் கலாச்சாரமும் அரைகுறைத் தமிழ்க் கலை வியாபாரமும் பல்தேசிய நிறுவனங்களின் துணையோடு கொடிகட்டிப் பறக்கின்றன.

இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிக் கலைகளைக் காப்பதும் அவற்றை மக்களின் வாழ்வின் அவலங்களோடு இணைத்து நவீன வடிவங்களில் வெளிக்கொண்டு வருவதும் எமது கடமை.
இலங்கை அரசின் நட்பு நிறுவனமான லைக்கா கத்தி என்ற இரத்தம் தெறிக்கும் வன்முறைக் கலையை தமிழர்கள் மத்தியில் பரப்ப முயற்சிப்பதை நாம் அறிந்துள்ளோம். லைக்கா போன்ற நிறுவனங்களின் பண வெறி பேரினவாத ஒடுக்குமுறையோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ்க் கலைகளை அழித்துச் சிதைக்கிறது.

இதற்கு முன்னுரை சொல்வது போன்று தென்னிந்திய கோப்ரட் சினிமாக் கூத்தாடிகளின் துணையோடு ஹரோ லெஷர் சென்ரில் லைக்கா ஆதரவோடு ‘கலாச்சார’ நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தியின் தமிழ் இரத்ததிற்கு இந்த நிகழ்ச்சி முன்னுரையானால் நாமும் அதனைத் தமிழ்க் கலாச்சாரத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னுரையாகப் பயன்படுத்திக்கொள்வோம்.

நிகழ்ச்சி நடைபெறும் அதே நாளில்(26.07.2014) ஹரோ லெஷர் சென்ரரின் முன்பாக தமிழர்களின் பறை முரசத்தை அறைந்து நாம் தமிழ்க் கலாச்சாரத்தின் முன்னுரையை லண்டனில் எழுதவுள்ளோம். தமிழ்க் கலை ஆர்வலர்கள் புடைசூழ எமது பறை இசைக்குழு, லைக்காவின் நிகழ்ச்சி நடைபெறும் அதே வேளை மண்டபத்திற்கு வெளியில் பறை இசைத்து தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றவுள்ளது.

இதே நிகழ்வு, பல்தேசிய வியாபாரக் கூத்தாடிகளின் எதிர்ப்பு நிகழ்வாகவும் அமையும்.இங்கு லைக்கா என்பது ஒரு குறியீடே தவிர, டாட்டா, வேதாந்தா முதல் தமிழர்களை வியாபாரப் பொறிக்குள் அமிழ்த்திச் சிதைக்கும் தொலைக்காட்சிகள் வரை எமது மக்களின் நண்பர்கள் அல்ல.

இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்படும் தமிழ்க் கலைகளையும் பாதுகாக்க பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை ஹரோ லெஷர் சென்ரரின் முன்னால் 26.07.2014 அன்று 5 மணிக்கு கூடுமாறு அழைப்புவிடுக்கிறோம். எமது மண்ணின் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது கடமை என்று கருதும் சமூக உணர்வுள்ளவர்களும் சீரழிந்த கலைகளை ஊடறுத்து தமிழர்களின் தேசியக் கலைகள் முகிழ்த்தெழ வேண்டும் எனக் கருதுபவர்களும் எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்.

-பறை : சுகந்திரத்தின் குரல்
-(PARAI – Voice Of Freedom)

Exit mobile version