Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அழகர் சாமியின் கடிதங்கள்…. :டி.அருள் எழிலன்

அன்புள்ள என் அருமை மனைவிக்கு
உன் அன்புக்கணவன் எழுதிக் கொண்டது நான் இங்கு நலம்.இது போல் நீயும் என் மகனும் மற்றும் நம் பந்துக்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
சில வாரங்களுக்கு முன்னர் சரவணக்குமார் லெட்டர் போட்டான்.அதை படித்துப் பார்த்த உடன் என் மனம் மிகவும் வேதனையடைந்தது.யாரோ ஒருத்தி வந்து என்னைக் கேட்டாள் என் மீது சந்தேகப்பட்டு இப்படி லெட்டர் எழுதலாமா?எழுதக் கூடாது மகன் சிறுபயல் அவனுக்கு விபரம் தெரியாது.நீ சந்தேகப்பட வேண்டாம்.நான் எந்தப் பெண்ணையும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.வீண் சந்தேகம் வேண்டாம்.அப்படி யாராவது வந்து கேட்டால் திட்டி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.நான் லீவு எடுத்துப் போட்டு லீவு வந்து விட்டது.உசிலம்பட்டிக்கு சென்று பி.ஓ வைப் பார்த்து லீவுக்கு ஏற்பாடு செய்யவும்.நான் வந்து விபரம் சொல்கிறேன்.
இப்படிக்கு,
உன் அன்புக்கணவன்,
நீஜீ/3782 ராஜா என்ற அழகர்சாமி.

நாம் சேமித்து வைத்திருக்கிற பணம்,நகைகளையும் தாண்டி ஏதேனும் ஒருவரின் வாழ்வைப் போற்றும் வகையில் எதையாவது ஒன்றை நமது இதயத்தில் பூட்டி பத்திரப்படுத்தியிருக்கிறோமா?நமது அசையும் அசையாச் சொத்துக்களையும் தாண்டி நமக்கு யாரோ எழுதிய கடிதங்களை அவர்களின் நினைவாக சேமித்திருக்கிறோமா?எத்தனை மஞ்சள் பாரித்த பழைய கடிதங்கள் உங்களின் அந்தரங்க அலமாறிகளில் பூட்டி வைத்திருக்கிறீர்கள்.உள்ளங்கைக்குள் உலகம் வந்த பிறகு ஒரு இன்லாண்ட் லெட்ட்ரை வாங்கி யாருக்காவது ஒரு கடிதம் எழுதியிருப்போமா?நாம்
ஆனால், இரண்டு இதயங்களை பல முறை கீறிக்கிழித்த கடிதங்களானாலும் இந்த சிறைக்கடிதங்கள் சேமிக்கப்படுகின்றன லஷ்மி சரவணக்குமாரால்,
‘‘மதுரை மத்திய சிறையில் இருந்து என்னோட அப்பா எனது அம்மா லெட்சுமிக்கு எழுதிய எவளவோ கடிதங்களில் இதுவும் ஒன்று.எங்கப்பா பண்ணின தப்பு என்ன தெரியுமா?எங்கம்மாவை கல்யாணம் பண்ணினதுதான்.அப்புறம் என்னை பெத்தெடுத்தது.

எனக்கு நினைவு தெரிந்து அப்பா என்றொரு மனிதர் எனக்கு இருந்ததாகவே நினைவில் இல்லை.இவர்தான் அப்பா எனத் தெரிந்த போது அவர் ஜெயிலுக்குப் போய் விட்டார்.சிறைச்சாலையில் சில முறை சந்தித்த போது பேசிக் கொணடதை விட அவர் கடிதங்களில் எழுதியவை அதிகம்.அம்மாதான் என்னை வளர்த்தாங்க.ராஜா என்கிற அழகர் சாமி என்றழைக்கப்பட்ட எனது தகப்பனார் ஒரு ப்ளேபாய்.என் அம்மாவின் உறவைத்தாண்டி அவருக்கு பல பெண்களுடன் தொடுப்பு இருந்திருக்கக் கூடும்.சில பேர் என்னிடம் கேட்டார்கள் ஏன் உங்க அப்பாவுக்கு அம்மாவை பிடிக்காமல் போனது.இதே கேள்வியை அம்மா என்னிடம் திருப்பிக்கேட்டார்.‘‘ஏண்டா உங்கப்பாவுக்கு என்னை பிடிக்காமல் போனதென்று?ஒருவரை பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் என்ன காரணங்கள் இருக்க முடியும்.அவர் அம்மாவை,என்னை, எங்களது வீட்டை என எல்லாவற்றையுமே புறக்கணித்தார் எப்போதாவது வருபவர் எப்போது வீட்டிலிருந்து செல்வார் எனத்தெரியாது.ஆரமபகாலத்தில் அப்பாவிடம் கொட்ட அமமவிடம் இருந்தது கண்ணீர் மட்டுமே!பின்னர் அதுவும் தீர்ந்து போக அம்மா வேலைக்கு போனார்.அம்மா நாலு வீடுகளுக்குப் போய் பாத்திரம் தேய்த்து அதில் கிடைக்கும் வருமானத்தில் என்னை படிக்க வைத்தார்.ஒரு நாள் ஸ்கூலில் நான்காம் வகுப்பு பாஸாகி ஐந்தாம் வகுப்புக்கு போனேன்.புது வகுப்பறை புது ஆசிரியர்கள் வந்ததும் எல்லா மாணவர்களும் வணக்கம் சொன்ன பிறகு வாத்தியார் கேட்டார்.‘‘நீங்களெல்லாம் எதிர்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் ஒவ்வொருவராக சொல்லுங்கள்’’என்று கேட்ட போது.டாக்டர்,என்ஜினியர்,போலீஸ்,ஐ.ஏ.எஸ் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க வரிசை ஊர்ந்து என்னிடம் வருகிறது என் மனதில் அம்மா வீடு வீடாகப் போய் பாத்திரம் தேய்ப்பதும்,துணிதுவைப்பதும் ஞாபகத்துக்கு வந்தது.நான் எழுந்து சொன்னேன்.‘‘நான் திருடன் ஆவேன்’’என்று எல்லா மாணர்வர்களும் கொல்லெனச் சிரித்தார்கள்.‘‘ஏம்பா இப்படி’’ என வாத்தியார் கேட்ட போது‘‘ஆமா சார் எங்கம்மா வீடு வீடா போய் பாத்திரம் தேய்ச்சு நான் டாக்டர் ஆவதற்கு திருடன் ஆகி பணக்காரங்களை எல்லாம் கொள்ளையடிச்சு எங்கம்மாவை சந்தோசமா பாத்துப்பேன் சார்’’என்றேன்.ஒரு விதமான போதாமையை அந்த வயதிலேயே உணர்ந்தேன்.அடாவடியான குணம் வந்த போது அமம என்னைக் கொண்டு போய் திருமங்கலத்தில் இருக்கும் ஒரு அநாதை ஆஸ்ரமத்தில் கொண்டு போய் விட்டாங்க,அங்குதான் நான் வளர்ந்தேன்.அம்மா அப்பப்போ எனக்கு ஏதாவாது வாங்கிட்டு வந்து பாத்துக்கிட்டுப் போகும்.பின்னர் அதுவும் சரிவாராமல் திருமங்கலத்துகே அம்மாவுடன் சென்று விட்டேன்.’’என்று சொல்கிற லஷ்மி சரவணக்குமார் திருடனாகவில்லை எழுத்தாளராகி இருக்கிறார்.தாயின் தனிமை,எழுதப்படிக்கத்தெரியாத தன் தகப்பானிரின் சிறைவாசம்,என சரவணக்குமார் எழுத்தின் மையம் இவைகள்தான்.

‘‘நாங்கள் திருமங்கலத்தில் இருந்த போதுதான் அந்த பரிதாபகரமான சம்பவம் நடந்தது.அப்பாவின் தொடுப்பாக இருந்த ஒரு பெண் எங்கள் வீட்டுக்கு வந்தார்.எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் போய் மண்ணெண்ணையை விட்டு தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார்.மூன்றாம் நாள் அந்த பெண் மரித்துப் போவதற்கு முன் திருமங்கலம் நீதிபதியிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என் தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையை அளித்தது,அதே தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்ய அவரது ஜீவிதம் இப்போது மதுரைச் சிறையில் கழிகிறது.தீவைத்துக் கொண்ட அந்தப் பெண் இறந்து போனார்.அப்பா ஜெயிலுக்குப் போய் விட்டார் என் அம்மா தினம் தினம் வறுமைத் தீயில் வெந்து கொண்டு இருக்கிறார்.அப்பா ஜெயிலுக்குப் போன காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்பதே பெருங்கனவாய் இருந்தது.ஒரு திருடனாக மாறும் எல்லா சாத்தியங்களுடனும்தான் நான் வளர்ந்தேன்.அம்மா வீட்டு வேலைக்கு போவாங்க நான் பகலில் பள்ளிக்கூடம் போவேன்.இரவில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைக்குப் போவேன்.அப்புறம் அந்த வேலையை விட்டு விட்டு ஒயின்ஷாப்பில் ஏவல் பையனாக சில காலமிருந்தேன்.பின்னர் இரவு நேர இட்லிக் கடைகள் என பதினாறு இடங்களுக்கு மாறி மாறி வேலை பார்த்தேன்.இது எதுவும் பிடிக்காமால் பாலியல் தொழிலில் ஒரு புரோக்கராகவும் இருந்திருக்கிறேன்.எத்தனை வேலைகள் எந்த வேலையிலும் நிரந்தரமாக ஒட்ட முடியவில்லை ஏன் தெரியுமா?வேலை செய்யும் இடத்தில் என்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத காரணம்தான்.நான் ஒரு ஆயுள்தண்டனை கைதியின் மகன் என்பதைக் கூட என்னால் வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.மதுரையில் ஷாஜகான் என்கிற எழுத்தாளர் வீட்டில் அம்மா வீட்டு வேலைக்குப் போனாங்க.அம்மா அங்க வேலை பார்த்ததால் நானும் அங்கே போவேன்.அப்போதான் இலக்கியமும் எழுத்தும் பரிச்சயமானது.அம்மாவைப் பற்றி.அப்பாவைப் பற்றி, சிறைவாசிகள் பற்றி,பெண்கள் பற்றி எழுத வேண்டும் எனத் தோன்றியது.ஆனால் இது எதுவும் வாழ்க்கைக்கு பயன் படவில்லை.ஏனென்றால் என்னால் பதினொன்றாம் வகுப்பை தாண்ட முடியவில்லை.அம்மா சித்தாள் வேலைக்குப் போனார்.நானும் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போனேன்.இருவருக்கும் மிகக் குறைவான வருமானமே வந்த போதும் அபபாவின் செலவுகளுக்கு குறை ஒன்றும் வைத்ததில்லை.’’

‘‘சிறையில் இருக்கிற அப்பாவுக்கு என்ன செலவு என்றுதான் நான் முதலில் அம்மாவிடம் கேட்டேன்.அந்தக் கதையையும் சொல்கிறேன்.அப்பாவைப் பார்க்கப் சிறைக்குப் போவோம் பிரதான வாசலைத் தாண்டி உள்ளே போனால் ஒவ்வொரு வாசலிலும் நிற்கும் காவலருக்கும் பத்து ரூபாயிலிருந்து இருபது ரூபாய் வரை தட்சணை வைத்து முன்னேறிப் போய்தான் கைதிகளை சந்திக்க முடியும்.கைதிகளும் அவர்களை பார்க்க வருபவர்களும் சிறைக்குள் சந்திக்கிற இடத்துக்குப் பெயர் கச்சேரி.ஏன் இந்த இடத்துக்குப் பெயர் கச்சேரி என்று பெயர் வந்தது என்று பல முறை யோசித்த பிறகு அனுபவமே அதன் பொருளையும் கற்றுக் கொடுத்தது கம்பி வலைகளுக்கு மத்தியில் மொத்த பார்வையாளர்களும் ஒரே நேரத்தில் கைதிகளோடு பேசும் போது நானும் அப்பவிடம் பேசுவேன்.இல்லை கத்துவேன் கச்சேரி முடிந்து வெளியில் வந்தால் இரண்டு நாட்களுக்கு குரல் உடைந்து தொண்டை கம்மியிருக்கும்.நீண்ட கனமான கம்பி வலை ஒன்று சில அடி தூரத்தில் சிறைவாசிகளையும் சந்திக்க வருபவர்களையும் பிரித்திருக்கும்.இவர்களுக்கு நடுவில் கண்காணிக்கவும் காவல் காக்கவும் ஒரு கான்ஸ்டபிள் இருப்பார்.சிறைவாசிகளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால் நடுவில் நிற்கும் காவலர் மூலம்தான் கொடுக்க முடியும்.நூறு ரூபாய் கொடுத்தால் இருபது ரூபாய் அவருக்கு இரண்டு பழம் கொடுத்தால் ஒன்று அவருக்கு.எவளவு பணம் கொடுக்கிறோமோ அதில் இருபது சதம் காவல் தெய்வங்களுக்குப் போய் விடும்.குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறையாக நமக்கெல்லாம் அது தோன்றினாலும் அதற்குள்ளும் ஒரு தனி சந்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஒரு தீப்பெட்டியின் விலை ஐந்து ரூபாய்,ஒரு துண்டு பீடி மூன்று ரூபாய் கணேஷ் புகையிலை ஒரு பாக்கெட் முப்பது ரூபாய்.தேவைகளைப் பொறுத்து இங்கிருக்கிற வசதியான கைதிகளும் சில காவல் தெய்வங்களும் ஜெட் வட்டி,மீட்டர்வட்டி என கந்து வட்டித் தொழிலிலும் ஈடு படுகிறார்கள்.அப்பா எங்களுக்கு எழுதும் கடிதங்கள் கூட இலவசமாய் வழங்கப்படுபவை அல்ல.ஒரு இன்லேண்ட் கவர் ஆறு ரூபாய் போஸ்ட் கார்ட் நான்கு ரூபாய் என எல்லாம் வியாபாரம்தான்.இதை எல்லாம் விடக் கொடுமை என்ன வென்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறைத்துறையோடு தொடர்புடைய நன்னடத்தை அதிகாரி என்றொருவர் இருப்பார்.சிறைவாசிகளுக்கு இவர்தான் நிஜமான கடவுள் .இவர் பார்த்து நன்னடத்தை சான்றிதழ் கொடுத்தால்தான் சிறையில் இருந்து வெளியில் வரமுடியும்.தவிறவும் கைதி பரோலில் வெளியில் வருவதும்.சிக்கலிம்மாமல் சிறை வாழ்க்கையை கழிப்பதும் இந்த அதிகாரியின் கையில்தான் இருக்கிறது.அதனால் சிறைவாசிகள் மட்டுமல்ல வெளியிலிருக்கும் அவர்களின் உறவினர்கள் கூட இவர்களிடம் பதமாக நடந்து கொள்ள வேண்டும்.அதனால் இவர்கள் எப்போதுமே கொஞ்சம் தலைதெரிக்க ஆடுவார்கள்.ஆண் குற்றவாளிகள் சிறையில் இருந்தால் அந்த கைதியின் வீட்டுக்கு இரவு பதினோரு மணிக்கு மேல் சென்று விசாரணை என்ற பெயரில் நோட்டம் விடுவது.தேவைப்பட்டால் பாலியல் சில்மிஷம் என இவர்களால் தொல்லைகள் அதிகம்.என அப்பாவைப் பார்க்கப் போய் நான் சிறைவாசிகளிடம் கற்றுக் கொண்டவைகள் ஏராளம்.திருடர்கள்,கொலைகாரர்கள்,பெண்மோகிகள்,சாராயவியாபாரிகள் என சிறை அனைவரையும் உள்வாங்கி செரித்துக் கொண்டே இருக்கிறது.என்னிடம் இப்போது இருக்கும் கேள்விகள் எல்லாம் எனது அப்பா உட்பட இவர்கள் அனைவரையும் சிறைச்சாலை மாற்றுகிறதா என்பதுதான்.வெளியில் வந்த பிறகு மீண்டும் இந்த சமூகத்தை என் அம்மாவை என்னை என் தகப்பனாரால் காதலிக்கப்பட்ட ஏதோ ஒரு பெண்ணை இவர்களை எல்லாம் அவர் எப்படி எதிர் கொள்வார் என்பது மட்டுமே.’’என்று பேசுகிற லஷ்மிசரவணக்குமார் ‘‘சொற்களிலிருந்து ஒலிக்கும் குரல்’’என்கிற தன்வரலாற்றுத் தொடரை ‘‘புதுவிசை’’இதழில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘‘துயரமான நாட்களை பெருங் கடலை நீந்திக் கடப்பதைப் போல நான் துன்பங்களை தாண்டி வந்திருக்கிறேன்.ஒரு வேளை உயர்நீதிமன்றத்தில் என் தகப்பனார் மீதான தண்டனை உறுதி செய்யப்படாமல் இருந்து அவர் விடுதலையாகியிருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.நிரூபிக்கப்பட்ட தண்டனை அவரை எங்களோடு கடிதங்களில் வாழ வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சிதான்.அப்பா சிறைக்குப்போன இந்த ஏழு வருடத்தில் ஒரு பெண்ணின் தனிமையை என் தாயின் வேதனைகளை நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன்.இரண்டு வருடங்களுக்கு முன்னால் அப்பா எழுதிய கடிதத்தில் என்னை சிறுபயல் விபரம் போதாது என எழுதினார்.ஆனால் நான் இப்போது சிறுபயல் இல்லை.கொஞ்சம் உலக ஞானமும் புத்தியும் பெற்றிருக்கிறேன்.அந்த அனுபவங்கள்தான் அப்பா மீதான பார்வையைக் கூட மாற்றியிருக்கிறது எல்லா மனிதர்களைப் போல அப்பாவும் ஒரு சராசரி பலவீனமுள்ள ஆள் அவளவுதான்.வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அருகில் வருகிற போது முக்கால் வாசி மனிதன் மிருகமாகத்தான் முயர்ச்சிக்கிறான் என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.அப்பாவால் இந்த சமூகத்தின் முன்னால் நானும் அம்மாவும் பரீகசிக்கப்பட்ட போது அப்பா மீது கோபம் இருந்தது.ஆனால் எத்தனையோ அழகர்சாமிகளுள் அப்பாவும் ஒருவர் என்பதை காலம் நிரூபித்திருக்கிறது’’என்கிறார் லஷ்மி சரவணக்குமார்.

ஆமாம்! சிறைகளில் வாழும் ஏதோ ஒரு அழகர்சாமி தன் மனைவிக்கோ,மகளுக்கோ,மகனுக்கோ கடிதம் எழுதிக் கொண்டுதானே இருப்பார்கள்.அழகர்சாமிகள் இந்த கடிதங்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Exit mobile version