Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அற்பத்தனத்தின் அடி பாதாளத்தை தொட்டுவிட்டீர்கள்-எல்.ஆர்.ஜெகதீசன்

தன் மீது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்குக்கூட ஆ ராசா மன்னிப்பு கேட்டுவிட்டார். பொதுநன்மைக்காக. அது அவரது முதிர்ச்சியை, பெருந்தன்மையை, சமூகப்பொறுப்புணர்வை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது. “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்பதற்கான உதாரணமாக. இதற்குமேல் இதற்குள் இப்போதைக்கு விரிவாக செல்லாமல் தவிர்ப்பதே சரி.
ஆனால் இந்த பதிவு தமிழ்நாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றியது. தேர்தல் நேரத்தில் ஜாதி/மதவெறியாளர்கள் தெரிந்தே திட்டமிட்டுப்பரப்பிய ஒரு அபாண்டமான பொய்யை, புனைசுருட்டை, இறந்துபோன ஒரு மூதாட்டியை கொச்சைப்படுத்தும் பொறுக்கிகளின் ஈனத்தனத்தை அவர்களோடு சேர்ந்து நீங்களும் ஊதிப்பெரிதாக்கி அவர்களின் ஊதுகுழல்களாக செயல்பட்டீர்களே உங்களுக்கு அதில் கொஞ்சமேனும் குற்ற உணர்வு ஏற்படவில்லையா? ஊடகத்தின் அடிப்படை அறத்தை இவ்வளவு கேவலமாகவா நீங்கள் கூட்டாகத்தொலைப்பீர்கள்? அற்பத்தனத்தின் அடி பாதாளத்தை தொட்டுவிட்டீர்கள்.
ஒரு சமீபத்திய ஒப்பீடு இங்கே நீங்கள் துணைபோன மிகப்பெரிய அயோக்கியத்தனத்தை உங்களுக்கு உணர்த்தக்கூடும். அதாவது உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இன்னமும் மிச்சமிருந்தால். அடிப்படை ஊடக அறம் என்பது இன்னும் உங்களிடம் ஒட்டியிருந்தால். சுயசிந்தனை இன்னமும் உங்களிடம் சுரக்குமானால்.
சமீபத்தில் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் அன்றைய அதிபர் ட்ரம்பை எதிர்த்த பிரதான வேட்பாளரும் இன்றைய அமெரிக்க அதிபருமான பைடனின் மகன் தொடர்பான மிகவும் பாரதூரமான பாலியல் காணொளிகள் இணையத்தில் வெளியாயின. மிக மோசமான அந்தரங்க காணொளிகள். அவை பொதுப்பார்வைக்கு வந்தால் பொதுவிவாதப்பொருளாக தேர்தலில் மாறினால் பைடனுக்கு அவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அப்போது அஞ்சப்பட்டது. அவ்வளவுக்கு மோசமான காணொளிகள் அவை.
ஆனால் அமெரிக்க ஊடகங்கள் அவற்றைத் தொடவில்லை. முற்றாக புறக்கணித்தன. கூட்டாக முடிவெடுத்தன. காரணம் அவற்றை பதிவு செய்தது யார்? தேர்தலுக்கு நெருக்கமாக அவற்றை இணையத்தில் வெளியிட்டவர்கள் யார்? அவர்களின் அரசியல் உள்நோக்கம் என்ன என்பதும் அவற்றுக்கு முறையாக யாருமே பொறுப்பேற்காத, உரிமைகோராத நிலையில் அந்த காணொளிகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு சேர்ப்பதும் அதை தேர்தல் நேர பொதுவிவாதப்பொருளாக மாற்றத் துணைபோவதும் அடிப்படை ஊடக அறங்களுக்கு முரணானது; தவறானது; யாரோ முகம்தெரியாத ஒரு தரப்பின் அரசியல் agendaவுக்கான ஊதுகுழலாக தாங்கள் மாறக்கூடாது என்பதில் (ட்ரம்ப் ஆதரவு ஊடகங்கள் உட்பட) பெரும்பான்மை அமெரிக்க மையநீரோட்ட ஊடகங்கள் தெளிவாக இருந்தன. அந்த காணொளிகளை அவை ஒளிபரப்பவும் இல்லை. அவை குறித்து அவை விவாதிக்கவும் இல்லை. முற்றாக புறக்கணித்தன. அமெரிக்க ஊடகங்களின் அந்த முடிவு சரியா தவறா என்பது குறித்த விவாதங்கள் இன்றுவரை நீடிக்கின்றன. மிகப்பெரிய ஊடக/கருத்து சுதந்திர ஆதரவாளர்கள் மத்தியில் அதன் சாதக பாதகங்கள் குறித்த விவாதம் இன்றும் நீடிக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் இந்த விவகாரத்தில் என்ன செய்தன? எப்படி நடந்துகொண்டன? ஆ ராசா பேசாத ஒன்றை பேசியதாகக்கூறி அதிமுக/பாஜக உற்பத்திசெய்த அயோக்கியத்தனமான காணொளியை பரப்ப ஒத்து ஊதின. ஒரு திட்டமிட்ட பொய்யை பரப்ப துணை போயின. கேவலமான அவதூற்றை பரப்பும் கூட்டுக்களவாணிகள் ஆயின.
ஒரு திட்டமிட்ட பொய் பரப்பப்படுகிறது என்றால் ஒன்று அந்த பொய்பிரச்சாரத்தை முற்றாக புறக்கணித்திருக்கவேண்டும். பொய்யை பரப்புவது எங்கள் வேலையல்ல என்று தெளிவாக அறிவித்திருக்கவேண்டும்.
அல்லது அது பொய் என்று ஊடகங்கள் உரத்த குரலில் சொல்லியிருக்கவேண்டும். அந்த பொய்யை பரப்புபவர்களிடம் ஏன் இவ்வளவு கேவலமான அவதூற்றை செய்கிறீர்கள் என்று நேருக்கு நேர் கேள்வி எழுப்பியிருக்கவேண்டும். பொய்யை பரப்பும் தரப்பை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி விசாரித்திருக்க வேண்டும்.
அந்த இரண்டையும் செய்யாமல் ஒரு திட்டமிட்ட அவதூற்றை பரப்ப/விவாதப்பொருளாக மாற்ற நீங்கள் துணைபோக என்ன காரணம்? அரசு தொலைக்காட்சியில் உங்கள் செய்தித்தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பாக வேண்டும்; அரசாங்க விளம்பர காசும் அதிமுக கட்சியின் விளம்பர காசும் தொடர்ந்து வாங்கியாக வேண்டும். காசுக்காக எதையும் செய்யலாம் என்பதா உங்களின் ஊடக அறம்? அதற்குப்பெயர் வேறாயிற்றே?
இப்படியான பொய்பிரச்சாரங்களை உடனுக்குடன் சரிபார்த்து திட்டமிட்ட பொய்பிரச்சாரங்களை தடுக்க மேற்குலக ஊடகங்கள் FACT-CHECK என்கிற ஒரு வழிமுறையை கையாள்கின்றன. அரசியல்வாதிகள், கட்சிகளின் வாக்குறுதிகள்; குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அவற்றின் சரி தவறுகளை தெளிவாக விளக்குகின்றன. அமெரிக்கத்தேர்தலில் மையநீரோட்ட ஊடகங்கள் இந்த உத்தியை பரவலாகக்கையாண்டன. அதனால் அங்கே இந்த தேர்தலில் பொய்பிரச்சாரத்தின் வீச்சு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டு ஊடகங்கள் எவையும் அப்படியெல்லாம் பொறுப்புணர்வோடு தகவல்சரிபார்ப்பிலோ பொய்பிரச்சாரத்தடுப்பிலோ ஈடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. குறைந்தபட்சம் பொய்யை பரப்ப துணைபோகாமல் இருந்தாலே போதும். ஆனால் அரசாங்க விளம்பர காசுக்காக தம்மை விற்றுக்கொள்ளத்தயாராக இருக்கும் ஒரு துறையிடம் அந்த குறைந்தபட்ச நேர்மையைக்கூட எதிர்பார்க்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம்? எப்பேற்பட்ட சீரழிவு?
இத்தனைக்கும் தமிழ்நாட்டு ஊடகங்கள் ஆ ராசா மீது அபாண்டமான பழியை சுமத்தி அவதூறு பிரச்சாரம் செய்வது இது முதல் முறையல்ல. 2ஜி விவகாரத்திலும் இதே ஊடகங்கள் இதே போன்ற அபாண்டத்தை அவர் மீது சுமத்தின. ஒரு நாள் இரண்டுநாட்களல்ல. ஆண்டுக்கணக்கில் தொடர்ச்சியான அவதூறுகள். வழக்கு விவரங்களைக்கடந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரை குடும்ப உறுப்பினர்கள் அவரது குழந்தை வரை படம்போட்டு அவதூறு பரப்பின. அதன் உச்சகட்டமாக ஆ ராசா மீதான தங்களின் அவதூறுகளையெல்லாம் தொகுத்து புத்தகமாகவே வெளியிட்டு காசுக்கு விற்ற கயமைத்தனம் செய்தது விகடன் நிறுவனம். அந்த கயமைத்தனத்தை செய்தவர்கள் ஆனப்பெரிய முற்போக்கு பத்திரிக்கையாளர்கள் என்பதும் அவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதும் யாரிடம் சம்பளம் வாங்குகிறார்கள் என்பதும் பேசப்போனால் மல்லாக்கப்படுத்து மார்மேல் துப்பிக்கொண்ட கதையாக முடியும். அதனால் தவிர்க்கிறேன்.
ஏற்கனவே 2ஜி விவகாரத்தில் ஆ ராசாவுக்கு எதிராக அபாண்டமாய் எழுதியும் பேசியும் அறம் தொலைத்து காலத்தால் நேர்மைமிகு நீதிபதி ஷைனியின் தீர்ப்பால் அசிங்கப்பட்ட தமிழ்நாட்டு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மீண்டும் அதே ராசாமீது அதைவிட பெரிய அவதூறை அபாண்டத்தை பரப்ப துணைபோகிறீர்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? ஒருதடவை செய்தால் அது தவறு. அவசரத்தில் ஆத்திரத்தில் அறியாமல் நேர்ந்த பிழை. இரண்டாவது முறையும் அதே தவற்றை அதைவிட மோசமாக செய்தால் அதற்கு பெயர் பிழையல்ல; தவறுமல்ல; குற்றம். ஆம் ஆ ராசாமீதான உங்களின் தொடர்ச்சியான அவதூறான தாக்குதல்கள் மூலம் அதிமுகவோடு நீங்களும் குற்றவாளிக்கூண்டில் நிற்கிறீர்கள் என்பதை ஊடகவியலாளர்களே உணருங்கள். முடிந்தால் திருந்துங்கள். மறுத்தால் காலமும் உங்கள் மனசாட்சியும் உங்களை தண்டிக்கும். தயாராக இருங்கள்.
பிகு: திராவிடத்துக்கு ஆதரவாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வேகமாக களமாடும் கணினி தொழில்நுட்ப வல்லுனர்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான பணி ஒரு நல்ல FACT-CHECK அமைப்பை உருவாக்குங்கள். தற்காலிகமாக அல்ல. நிரந்தரமாக. சர்வதேச சமூக ஊடக விதிகள்; இணையவிதிகள் தெரிந்த தொழில்நேர்த்தி மிக்கவர்கள் பத்தே பத்துபேர் இருந்தால் இப்படி ஒரு அமைப்பை நீங்கள் நிறுவ முடியும். நீங்கள் அப்படி ஒரு அமைப்பை நிறுவி நிலைநிறுத்தப்பாருங்கள். திராவிடத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் வலிமையும் திறனும் அதன் அமைப்புகளுக்கும் அதில் இருக்கும் தலைவர்களுக்கும் இன்னும் வலுவாகவே இருக்கிறது. ஆனால் தங்கள் மீதான அவதூறுகளை உரிய முறையில் உரிய வேகத்தோடு உடனுக்குடன் தடுக்கும் வல்லமையும் அதற்கு பயன்படக்கூடிய தொழில்நேர்த்தி மிக்க அமைப்புகளும் திராவிடத்தின் சார்பில் இல்லை. அந்த வெற்றிடம் தான் எந்த கேடுகெட்டவனும் எந்த கேவலத்தையும் திராவிடத்துக்கு எதிராக மிக சுளுவாக பரப்ப முடிகிறது. இணைய தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் அதற்கு துணையாக பயன்படுகின்றன. அந்த இரண்டையும் நீங்கள் நேர்மையாகவே சட்டவிதிகளுக்கு உட்பட்டே எதிர்கொள்ள முடியும். அதற்குத்தேவை உங்கள் மத்தியில் வலுவான, நேர்மையான, தொழில்திறன்மிக்க FACT-CHECK செய்யும் முறையான அமைப்பும் ஆட்களும். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகில் மையநீரோட்ட ஊடகங்களே அதை செய்கின்றன. ஆனால் இந்தியாவில் ஊடகங்கள் அத்தகைய அமைப்புகளை உருவாக்கவில்லை. மாறாக RSS கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளே FACT-CHECK அமைப்புகளாக இந்தியாவெங்கும் இருக்கின்றன. இயங்குகின்றன. விளைவு அவற்றின் செயல்பாடுகள் ஊடகங்களைவிட மோசமான பக்கசார்போடு இருக்கின்றன.
Exit mobile version