அருந்ததி ராய், ஹுரியத் மாநாட்டு இயக்கத் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஆகியோர் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுசில் பண்டிட் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மூலம் இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று பேசிய அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலத்தை சொந்தம் கொண்டாட இந்தியாவிற்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.
அவருடன் பேசிய ஹுரியத் மாநாட்டு தலைவர் கிலானியும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.
இந்த கருத்தை வன்மையாக கண்டித்த பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை தேவை என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
சுசில் பண்டிட் மனு மீது கருத்து தெரிவித்திருந்த டெல்லி நீதிமன்றம், பிரிவினைவாதி எழுச்சிகளுக்கு கலவரம் ஏற்படுத்துவது ஒரு அளவுகோல் அல்ல என்று கூறி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து அருந்ததி ராய், கிலானி மீது நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்தது, பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் குறைந்தது ஒரு ஆண்டிற்கு பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இருவரையும் காவல்துறையினர் எந்த நேரத்திலும் கைது செய்யக் கூடும் என தெரிகிறது.