Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அருணாசலப் பிரதேசம் மீது இந்தியா சொந்தம் கொண்டாடுவது முறையல்ல :சீனா கடும் கண்டனம்.

14.11.2008.

பெய்ஜிங்: அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல, அதன் மீது இந்தியா சொந்தம் கொண்டாடுவது முறையல்ல என சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தி்ல் அருணாசலப் பிரதேசம் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தமானது, இந்த மாநிலம் 2 எம்பி்க்களை இந்திய நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வருகிறது, இந்திய அரசியல் அமைப்பின் கீழ் இயங்கும் சட்டசபையையும் இந்த மாநில மக்கள் தேர்வு செய்கிறார்கள். இதனால் இந்த மாநிலம் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என்றார்.

முகர்ஜியின் இந்தக் கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

அருணாசலப் பிரதேச எல்லை குறித்து இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக வரையப்பட்ட மெக்மோகன் எல்லைக் கோட்டை சீனா ஏற்கவில்லை. அந்த எல்லை வரையறை சட்ட விரோதமானது.

வரலாற்றை எல்லாம் மறந்துவிட்டு அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் என அந நாட்டு அமைச்சர் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது.

இந்த எல்லைப் பிரச்சனை இன்னும் முடியவில்லை. இந்த எல்லை விவகாரத்தில் சீனாவில் நிலை தெளிவாக உள்ளது, அதில் எந்த மாற்றமும் இல்லை.

மெக்மோகன் எல்லைக் கோட்டை (‘McMahon Line”) சீனாவின் எந்த அரசும் ஏற்றுக் கொண்டதில்லை, அது ஒரு சட்ட விரோத எல்லைக் கோடு, இது இந்தியாவுக்கும் நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.

இந்த எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version