அல்ஜீரியாவில் 19 வருட காலமாக அமுலில் இருந்து வரும் அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசாங்கத்திற்கு நேர்ந்த நிலைமை அல்ஜீரியா அரசுக்கு ஏற்படலாம் என்ற அச்சத்தின் மத்தியிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்னும் சில நாட்களில் அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மௌரட் மெடெல்சி தெரிவித்துள்ளார்.
டியூனீசியா, எகிப்தைத் தொடர்ந்து அல்ஜீரியா ஆர்ப்பாட்டக்காரர்களும் அவசரகால நிலையைத் தளர்த்துமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் அதிகளவானோர் காயமடைந்திருந்த நிலையில் பொலிஸாரின் தடையையும் மீறி தலைநகர் அல்ஜியர்ஸில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு, தாழ்ந்த மட்டத்திலுள்ள வாழ்க்கைத் தரம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றுக்கு எதிராகக் கடந்த ஜனவரியிலிருந்து இங்கு ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து வரும் அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கத்தில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி அப்டிலாஷிஸ் போரெவ்லிகா திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.