இலங்கையில் தற்போது அரச பயங்கரவாதம், அடக்குமுறைகள் தலைவிரித்தாடுவதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாற்றியுள்ளார்.
இலங்கையிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதங்களும் துடைத்தழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் உரத்த குரலில் பீற்றிக் கொண்டாலும், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்கவில் நடைபெற்ற மறைந்த விஜய குமாரதுங்கவின் நினைவு தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நானும், விஜய குமாரதுங்கவும் அன்று தொடக்கம் ஜே.வி.பி.யினரின் பயங்கரவாதத்தை மட்டுமன்றி அரச பயங்கரவாதத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளோம் என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.
இன்றைய நிலையில் இலங்கையின் அரசியல் நிலவரம் பற்றி விஜய குமாரதுங்கா இருந்திருந்தால் பெரிதும் மனம் வருந்தியிருப்பார் என்றும் அந்தளவுக்கு அரச அடக்குமுறையும், அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நானும் என் கணவரும் இந்நாட்டின் நலனுக்காக மேற்கொண்ட பல செயற்திட்டங்கள் இன்று தலைகீழாக புரட்டப்பட்டுள்ளன என்றும் சந்திரிகா குற்றம் சாற்றியுள்ளார்.