ஈ.பீ.டீ.பீ அமைப்பின் தென்மராட்சி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளருமான சாள்ஸ் என்றழைக்கப்படும் அலெக்ஸ்சாண்டர் சூசைமுத்து மற்றும் யாழ் மாநகர சபையின் துணை முதல்வரான றேகன் என்றழைக்கப்படும் துரைராஜா இளங்கோ ஆகிய இருவருக்கும் எதிராகவே கொலைமுயற்சி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே குறித்த இருவரும் ஆயதங்கள் சகிதம் அப்பகுதியில் நடமாடி உள்ளமை மற்றும் நீதவானின் வாசஸ்தலத்தில் உட்பிரவேசிக்க முற்பட்டமை தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கடிதங்கள் மூலம் சாவகச்சேரி நீதிமன்றிற்குத் தகவல் அனுப்பி உள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக இன்று நீதிமன்றில் பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க சாவகச்சேரி பொலிசாருக்கு நீதவான் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு ஈபிடிபியினரும் நீதிவான் வசிக்கும் பாண்டியன் தாழ்வு பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமை முதல் ஆயுதங்களுடன் நடமாடினர் தெரிவிக்கப்ப்பட்டது..
இதே வேளை நீதவான் வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாவகச்சேரியை சேர்ந்த மாணவனான திருச்செல்வம் கபில்தேவை கடத்திச்சென்று கொலை செய்தமை தொடர்பில் ஏற்கனவே கடந்த மார்ச் 29 ஆம் திகதியன்று ஈபிடிபி உறுப்பினர் ஜீவன் என்பவரை கைது செய்யுமாறும் அவர் நாட்டில் இருந்து தப்பிச்செல்வதை தடுக்குமாறும் நீதிவான் பிரபாகர் உத்தரவிட்டிருந்தார்
கொலை செய்யப்பட்ட மாணவனின் நண்பர் வழங்கிய தகவல்படி ஜீவனே கடத்தலுக்கும் கொலைக்கும் முக்கிய பொறுப்பாளி என்பது தெரியவந்துள்ளது
ஜீவன் கடந்த 8 வருடங்களாக தென்மாராச்சி நுணாவில் ஈபிடிபி முகாமில் இருந்து வருகிறார்
இந்த முகாமுக்கே சார்ல்ஸ் எனப்படும் அலெக்சாண்டர் சூசைமுத்து பொறுப்பாக உள்ளார்
இதேவேளை தமது அமைப்புக்கும் கபில்தேவ் என்ற மாணவனின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் இன்று தமது உத்தரவை யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நீதிச்சேவைகள் ஆணைக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோருக்கு அறிவிக்குமாறும் நீதிவான் பிரபாகர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.