வவுனியா பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த வன்னிப் பிராந்தியத்தைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் பணம் கொடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது அரசியல் கட்சிகளாகச் செயற்படும் அரச சார்பு முன்னாள் போராளிக் குழுக்கள், பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்களுக்கு தப்பிச் செல்ல உதவியுள்ளதாக அந்தச் செய்தியிலும் மேலும் கூறப்பட்டுள்ளது.
முகாம்களை விட்டு வெளியேற ரூபா ஒரு இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபா வரை அகதிகள் இலஞ்சமாகக் கொடுத்துள்ளதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெறுவதாக கூறப்படுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் உறுதிப்படுத்தியதாக எக்ஸ்பிரஸ் நியூஸ் சேவை நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.
இதேவேளை கடந்த இரு மாதங்களில் பலர் தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஞாயிறு ஐலன்ட் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். எனினும் அவர் எண்ணிக்கை தொடர்பாக குறிப்பிட்டிருக்கவில்லை.
இந்த விடயம் குறித்த விசாரணை நடத்துமாறு வவுனியா காவல்துறையினருக்கு காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், தப்பியோடியவர்கள் பலரில் புலி உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும், இவர்கள் மக்கள் குடியிருப்புக்களில் ஊடுருவியிருக்கலாம் என்றும், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றும் இதனால் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அகதி முகாம்களிலிருந்து விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவிக்க சில சக்திகள் முன்வந்தமை குறித்து பாதுகாப்பு செயலாளர் தெரிவித்ததாக ஞாயிறு ஐலன்ட் பத்திரிகை அவரை மேற்கோள் காட்டியிருந்தது. தப்பிச் சென்றோரில் சிலர் அந்தப் பகுதியிலுள்ள இராணுவ, பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததன் மூலம் தப்பிச் சென்றுள்ளனர். இதை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாக எக்ஸ்பிரஸ் நியூஸ் தெரிவித்தது.
இதேவேளை தப்பிச் சென்ற அகததிகள் மத்தியில் லக்ஸ்மன் கதிர்காமர், ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை, கடற்படை அதிகாரி திகம்பதன ஆகியோரின் படுகொலைகளுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.