இலங்கை அரசால் ஏவப்பட்ட குண்டர் குழுவினரே இத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனப்பரவலாகச் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 100 இற்கும் மேற்பட்ட குண்டர் படையினர், சிரச அலுவலகத்தைப் பாரிய கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குண்டர்களால் வீசப்பட்ட கற்களால் அலுவலகக் கண்ணாடிகள், சொத்துக்கள் மட்டுமன்றி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன், சக்தி நிறுவன ஊழியர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
இலங்கை அமச்சர் மேர்வின் டீ சில்வாவுடன் தொடர்புடைய குண்டர்களே இத் தாக்குதலை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளைப் பெறுவதற்காக அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பொதுமக்களின் பெயரில் ஊடகங்கள் மீது தாக்குதலை நடத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகக் கருதப்படலாம் என இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறான தாக்குதல்களை இனிப் பரவலாக எதிர்பார்க்கலாம் என மேலும் தெரிவித்த அவர், பாக்கியசோதி சரவணமுத்து, வெலியமுன போன்றோரும், Transparency International, CPA போன்ற தன்னார்வ அமைப்புக்களும் அரசின் அடுத்த இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.