01.04.2009.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் உதவி வேண்டாமெனக்கூறி எமது நட்பு நாடுகளின் உதவியே போதுமென்றது. இப்போது எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளாது ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு அரசு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் விண்ணப்பித்துள்ளது. இக்கடனை பெறுவதற்கு காரணம் வடக்கு,கிழக்கு அபிவிருத்தி எனக் கூறுகின்றனர். இதற்கு தனியார் மயமாக்கல் நிவாரண வெட்டு மற்றும் பல நிபந்தனைகளை முன்வைப்பர்.இதனால் பாதிக்கப்படுவது நாடே யாகும்.
எனவே நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அரசு மேற்கொள்ளும் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தை நிறுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நிவாரணங்களை அளிக்குமாறு கோருகின்றோம் .
கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கா கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கை 1929 க்கு பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் தாக்கம் பாரியளவில் ஏற்படுவதற்கு காரணம் 1977 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையேயாகும்.
நாடு 80 ஆண்டுகளின் பின் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எதனையும் எடுக்காதிருக்கின்ற நிலையில் இதற்கு பதிலளிக்கும் முகமாக நாட்டை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிடும் மூன்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதாவது மக்கள் மேல் வரியை சுமத்துவது, கடன் பெறுவது மற்றும் அரச சொத்துக்களை விற்பதே இந்த மூன்று நடவடிக்கையாகும். முதலாவதாக அரசாங்கம் மக்கள் மீது இது தொடர்பில் விதித்துள்ள வரிகளை பார்க்கும் போது இவ்வாண்டு நிலையான தொலைபேசிக் கட்டண வரியை 10% அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் தமது கைத்தொலைபேசி முதல் நிலையான தொலைபேசி பாவனையை கைவிடவேண்டி ஏற்பட்டுள்ளது.
அதுபோல் 2009 பெப்ரவரி 13 ஆம் திகதிய 1588/20 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நீர்க்கட்டணம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் தற்போது 120 ரூபாவாக விற்கப்படும் நிலையில் உலகசந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சி கண்டதன் பிரகாரம் 38 ரூபாவாக விற்கவேண்டும். ஆனால், அரசாங்கம் இதற்கு வரியை விதித்து 120 ரூபாவாக விற்கின்றது.
இதேவேளை, அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக வரி விதித்ததன் காரணமாக பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 25 ரூபாவாலும், உருளைக்கிழங்கு ரூ.25, கடலை ரூ.25, வெள்ளைச் சீனி ரூ.16, கறுப்புச் சீனி ரூ. 12,செத்தமிளகாய் ரூ. 40, மிளகாய்த் தூள் ரூ. 50, ரின் மீன் ரூ.40, அதிகரித்து விற்கப்படுகிறது. அதாவது உலக சந்தையில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் போது அவற்றின் விலைகளை உயர்த்தும் அரசாங்கம் தற்போது அங்கு விலை குறைந்துள்ள நிலையில் குறைக்காமல் பொருட்களின் விலையை குறையவிடாது வரிகளை விதித்துள்ளது.
நெத்தலிக்கும் 25 ரூபா வரியை மேலதிகமாக விதித்துள்ளது.பால்மா கிலோ ஒன்றுக்கு 55 ரூபாவால் மேலதிகமாக வரி அறவிடப்படுகிறது. இதனால் சிறுவர் முதல் வயோதிபர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விலையுயர்வு காரணமாக தமது பாவனையை குறைத்துள்ளனர்.
இதேவேளை, புதிதாக விதிக்கப்பட்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி வருமான எதிர்பார்ப்பு 17,000 மில்லியனாகவுள்ள நிலையில் இவற்றுக்கு மேலாக 2002 இல் கொண்டு வரப்பட்ட துறைமுக மற்றும் விமான நிலையவரி 3 லிருந்து 5 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர நாட்டின் உற்பத்தியை பாதிக்கும் வகையிலான வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர உணவுப்பொருட்களுக்கு வரியை விதிக்கும் அதேநேரம் மனித கழிவகற்றலுக்கான வரியையும் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அதேபோல் ஒரு குடும்பம்,5 கால்நடைகள் இறைச்சிக்காக வளர்க்கப்படின் அதற்கு வரியை அறவிடவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், உற்பத்தியை பாதிக்கும் அதேநேரம் நாட்டை சிக்கலுக்குள் தள்ளிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்புவதற்கு அரசு சொத்துகளை தனியாருக்கு விற்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது. புல்மோட்டை கனிய வள கூட்டுத்தாபனம் விற்கப்பட்டுள்ள அதேநேரம் மன்னாரில் எண்ணை அகழ்வை இந்தியாவிடம் கையளித்துள்ளது.எமது இராணுவத்தினர் மன்னாரை கஷ்டப்பட்டு மீட்டுள்ளனர்.இந்நிலையில் 10 பரலை அகழும்போது இந்தியா ஒரு பரலைமட்டுமே வழங்குமென்பதால் எமது வளம் நாசமாக்கப்படுகிறது. இதுபோல் மின்சார சபையின் ஒரு பகுதியை அரசு விற்க தயாராகவுள்ளது. இதனால் நாடு பாரிய சிக்கலுக்குள் தள்ளப்படும் சூழல் எழுந்துள்ளது.