Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசு;தீர்வுத் திட்டத்துக்கு கையை விரிக்கப்போகின்றதெனத் தெரிந்தும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசுக்கு ஆதரவு வழங்கி பலப்படுத்துகின்றன:முஸ்லிம் காங்கிரஸ்

யுத்தம் முடிவை அண்மித்துக் கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதமற்ற சூழ்நிலை ஏற்பட்டதும் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனை வரைபு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ள நிலையில், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஏகோபித்த கருத்தொருமைப்பாட்டுக்கான சாத்தியம் இல்லை என்பதை அக்குழுவிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருப்பதுடன், அவ்வாறு ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டாலும் அது ஆளும் கட்சியின் நிலைப்பாட்டை அடியொற்றியதாகவே இருக்கும் என்றும் அதனால் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள், அபிலாசைகள் நிறைவேறுமென எதிர்பார்க்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன்அலி, உண்மையில் தீர்வொன்றை முன்வைக்க அரசு விரும்பியிருந்தால் யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அதனை செய்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தற்போது ஆளும்தரப்பிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளைத் தவிர வெளியேயுள்ள கட்சிகளாக முஸ்லிம் காங்கிரஸும் ஜனநாயக மக்கள் முன்னணியுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் எவ்வேளையிலும் முஸ்லிம் காங்கிரஸ் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து வெளியேறிவிடும் என்று எச்சரித்திருப்பதாகவும் கூறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இப்போது இல்லை, ஜே.வி.பி. யும் இல்லை. ஏனைய பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கும் குறைவான அதிகாரப் பகிர்வையே வலியுறுத்தி வருகின்றன.

சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 13 ஆவது திருத்தத்திற்கும் அதிகமானவற்றை வலியுறுத்துகின்றன. எண்கணிதப்படி பார்த்தால் +13 (13)=0 ஆகும். நடைமுறையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஏனையகட்சிகளை தனது நிலைப்பாட்டுக்கு இழுத்துவிடும் நிலைமையே காணப்படுகிறது. அதனால் சிறுபான்மையினர்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வுகாணும் யோசனை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என்று ஹசன் அலி தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்ட யோசனை 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லுமென அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவினதும் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாகவே இதனை அரசு தெரிவிக்கின்றது. உண்மையில் பெரும்பான்மையினர் 13 ஆவது திருத்தத்துக்கு குறைவானதையே வழங்க விரும்புகின்றனர்.

அரசாங்கம் இது தொடர்பில் நம்பகத்தன்மையுடன் செயற்படவில்லையென்பதை நாம் அவதானிப்போம். இதையடுத்து இந்த குழுவிலிருந்து நாம் எந்நேரத்திலும் வெளியேறுவோம் எனத் தெரிவித்துள்ளோம். இன்றைய அரசு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் அமைக்கப்பட்டதாகும். அக்கட்சி அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்த தமது யோசனையில் அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லையெனத் தெரிவித்துள்ளது. மற்றைய கட்சிகளின் கருத்தினைப்பெற்று இதனைக் கேட்டு பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கும் யோசனையில் அரசு இல்லை. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு 100 க்கு மேற்பட்ட தடவை கூடியுள்ளபோதும் யோசனையை முன்வைக்கவில்லை.

அவ்வாறான யோசனை இருந்தால் யுத்தத்தை நடத்திக்கொண்டே அரசியல் தீர்வினை அரசு முன்வைத்திருக்கும். வெற்றியின் பின்னர் குறைந்தளவிலான உரிமைகளையே முன்வைக்கப் பார்க்கின்றது. இந்த அரசு ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமயவுடன் தலதாமாளிகையில் செய்யப்பட்ட உடன்படிக்கையின் படி சரியான தீர்வினை முன்வைக்கமுடியாது.

இந்நிலையில், அரசாங்கம் சரியான தீர்வுத் திட்டத்துக்கு கையை விரிக்கப்போகின்றதெனத் தெரிந்தும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசுக்கு ஆதரவு வழங்கி பலப்படுத்துகின்றன. இதற்கு அவர்கள் பதில் கூற வேண்டியவர்களாகவுள்ளார்கள்.

சிறுபான்மை சமூகத்துக்கு பாதகமான உள்ளூராட்சி திருத்தச் சட்டத்தை தடுப்பதற்கு நாம் நீதிமன்றம் சென்றோம். இவ்வாறு அரசு சிறுபான்மையினருக்கு பாதகமான செயற்பாட்டில் ஈடுபடும்போது அதற்கு ஆதரவளிக்கும் சிறுபான்மை கட்சிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

Exit mobile version