இந்தியாவின் 14வது அரசுத் தலைவருக்கான வேட்பாளர்களாக, காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பாக பிரணாப் முகர்ஜியும், அவரை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதன் கள்ளக் கூட்டாளிகளான ஜெயலலிதா, பிஜுபட்நாயக், மம்தா பானர்ஜி ஆதரவு பெற்ற பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். தகுதியும் திறமையும் வாய்ந்த, மரியாதைக்குரிய யாரையாவது அரசுத் தலைவராக்க வேண்டும் என்று நாட்டின் இருபெரும் அணிகளுமே கருதவில்லை.
வரும் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்களில் எந்த அணியும் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல், தொங்கு நிலை நாடாளுமன்றம்தான் அமையும் என்பதை அவை நன்கு உணர்ந்தே உள்ளன. அவ்வாறான நிலைமை ஏற்படும்போது, தமக்குச் சாதகமான முடிவுகள் எடுத்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய நபரை அரசுத் தலைவராகத் தெரிந்தெடுப்பதிலேயே அந்த அணிகள் குறியாக இருந்தன.
இந்த நோக்கில், வேட்பாளரைத் தெரிவு செய்யும் நிலையிலேயே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்து விட்டது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிச இந்து மதவெறியன் நரேந்திர மோடி தலைமையில், ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் மௌனம் சாதித்து துணை நின்ற சுயநலக்காரியவாதியும், அப்போதைய அரசுத் தலைவருமான அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கட்சி முயன்றது. ஆனால், அரசுத் தலைவர் வேட்பாளர் தெரிவின்போதே பிரதமர் பதவிக்கான வேட்பாளர் தெரிவில் போட்டியும் தே.ஜ.கூட்டணிக்குள் கூர்மையடைந்துவிட்டது.
அக்கூட்டணி மிகவும் நம்பியிருந்த அப்துல் கலாமும் இரண்டாவது முறையாக நயவஞ்சகச் செயலைச் செய்துவிட்டார்; பெரும்பான்மை ஆதரவு இருந்தால்தான் அரசுத் தலைவர் தேர்தலில் நிற்பது என்ற தனது கொள்கை காரணமாக, தோல்வி நிச்சயமாகி விட்ட நிலையில் தானே விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டார். வேறு வழியின்றி, பின்னாளில் ஜெயா-பிஜுவுடனான கூட்டணியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு சங்மாவை ஆதரிப்பது என்று முடிவு செய்தது, தே.ஜ.கூட்டணி.
பிரணாப் முகர்ஜி அடுத்த அரசுத் தலைவராவது உறுதியாகி விட்டதென்று சொல்லலாம். ஐ.மு.கூட்டணி மற்றும் உற்ற துணைவர்களான முலாயம், மாயாவதி, லல்லு ஆகியோர் மட்டுமல்ல; போலி இடதுசாரிகள் மற்றும் எதிர்த்தரப்பிலிருந்து சிவசேனா உட்பட பெரும்பான்மையினர் ஆதரவு நிச்சயமாகிவிட்டது. இதற்காகவும், எப்போதும் பிரதமர் பதவிக்கான ஆசையை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த பிரணாப் முகர்ஜியை அரசுத் தலைவராக்கி, ராகுல் காந்திக்கான பாதையை உறுதியாக்கிக் கொண்டதற்காகவும் சோனியாமன்-மோகன் கும்பல் மகிழ்ச்சியடையலாம்.
ஆனால், பிரணாப் முகர்ஜி ஒரு பழம் பெருச்சாளி. “பக்கா” அரசியல்வாதி; எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் தனது கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் பார்ப்பனிய நரி. நமது நாட்டில் மட்டுமல்ல, அந்நியநாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான ‘உறவு’ கொண்டிருப்பவர். அம்பானி குடும்பம் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிற்கழக முதலைகளின் விசுவாசி. இந்தத் ‘திறமை’களையும் செல்வாக்கையும் நாட்டு நலனுக்கும் மக்கள் சேவைக்கும் ஒருபோதும் பயன்படுத்தியவர் அல்ல. அமெரிக்காவுடன் அவர் கைச்சாத்திட்ட பல இரகசிய ஒப்பந்தங்களும், ஈழ இனப் படுகொலையை அரங்கேற்றி ராஜபக்சேவுடன் சேர்ந்து நடத்திய தந்திரங்கள், கருணாநிதியுடன் சேர்ந்து ஆடிய நாடகங்கள் போன்றவை பிரணாப் முகர்ஜியின் பார்ப்பனிய நரித்தனத்துக்குச் சான்றுகள். இந்திரா காந்தியிடம் அரசியல் பாடம் கற்ற பிரணாப் முகர்ஜி, அவசியமாகும்போது தனது சுயநலத்துக்காக, அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் குடைக்கவிழ்ப்புகளையும் அரங்கேற்றத் தயங்கமாட்டார்.
__________________________________________
– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.