அத்துடன் மூன்று உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள பிரேரணைகள் கடுமையானவையாக இருப்பதால் அவற்றில் திருத்தங்களைச் செய்யும் படியும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச விசாரணை, முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம், நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலை என்று பிரகடனப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அரசுடன் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறி வுறுத்தினார் என்று அறிய முடிகிறது.
மக்களை வாக்குகளுக்காகவே பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகள் கூட்டம் இன்று அவலத்தில்வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் தலைமையை முழுமையாக ஆகிரமித்துக்கொண்டுள்ளது. ஒரு புறத்தில் கோழைத்தனமாக உலகின் கொலை அரசுகளுடன் இணைந்து குறுக்கு வழியில் சாதிக்கமுற்பட்டு காட்டிகொடுக்கும் புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டுப் பிழைப்புவாதிகளின் வெற்று முழக்கங்கள். மறுபுறத்தில் கோழைத்தனமாக மக்களை அணிதிரட்டிப் போராட வக்கற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சந்தர்ப்பவாதிகளின் கூட்டு. இரண்டுக்கும் நடுவில் மக்கள் நசிந்து மடிந்து போகின்றனர்.
கூட்டத்தில் மூன்று பிரேரணைகள் பற்றி நீண்ட நேரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட போரால் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்வைத்த, இலங்கையில் நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் இன அழிப்பு என்பதை சர்வதேசத்துக்குச் சுட்டிக்காட்டுகிறோம் என்னும் பிரேரணை, உறுப்பினர் அனந்தி சசிதர னால் முன்வைக்கப்பட்ட, வன் னியில் மாவட்டச் செயலர்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் காணாமற் போன ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் தொடர்பில் சரியான கணக்கெடுப்பை நடத்தி அதனை ஜெனிவாவிற்கு எடுத்துச் செல்லல் மற்றும் மன்னார் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் எனத் தெரிவிக்கும் பிரேரணை என்பன பற்றியே கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
சிங்கள, முஸ்லிம் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், வடகிழக்குத் தமிழர்கள் ஆகியோரால் வெறுத்து நிராகரிக்கப்படும் மகிந்த ராஜபக்ச அரசிற்கு எதிரான அணிகளை இவர்களில் எவரும் ஒன்றுதிரட்டிப் போராடத் தயாரில்லை. ஒன்றில் ஏகாபோக அரசுகளிடமோ அன்றி மகிந்தவிடமோ சரணடைவையே அவர்கள் முன்மொழிகின்றனர். புலிகளில் கணவர் உறுப்பினராகவிருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அனந்தி சசிதரனை தேசியத் தலைவி என்ற எல்லைக்கு இழுத்துச் சென்று புதிய மாயை ஏற்படுத்தி மக்களை மந்தைகளாக்க புலம்பெயர் பிழைப்புவாதிகள் தமது அரசியலை ஆரம்பித்துள்ளனர்.
ஆயினும் பிரேரணைகளை அரசிற்குப் பாதிப்பற்ற வகையில் திருத்துவதற்கு அனந்தி சசிதரனும், சிவாஜிலிங்கமும் உடன்பட்டனர். ரவிகரன் உடன்படவில்லை.