Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசுக்கு எதிரான எதிர்கால போராட்டத்துக்கு உத்வேகம்

11 – July – 2008

தொழிற்சங்கங்கள் பூரண திருப்தி -எம்.ஏ.எம்.நிலாம்-
அரசுக்கு எதிரான அடையாள பொது வேலைநிறுத்தம் பெரு வெற்றியளித்ததாகத் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய தலைவருமான கே.டி.லால்காந்த, ஒட்டுமொத்தமாக நாடு பூராவும் 70 சதவீதமான அரச ஊழியர்கள் வேலைநிறுத்தத்திலீடுபட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியரின் சம்பள உயர்வுக் கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பமே இதுவெனவும் அரசுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம். இதை அரசு உணர்ந்து செயற்படத் தவறினால் முழு நாட்டையும் ஸ்தம்பிதமடையச் செய்யும் போராட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்றுக் காலை வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நிலைமைகளை விளக்குவதற்காக தேசிய நூலகச் சேவைக்கட்டிட கேட்போர் கூடத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
தொழிற்சங்கத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்தச் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த லால்காந்த கூறியதாவது;
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவில்லை. அரசுக்கு எதிராகவே நடத்தப்பட்டது. மக்களை பாதிக்கும் விதத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் இந்த ஆரம்பகட்ட போராட்டத்தில் எடுக்கவில்லை. இது ஒரு அடையாள பொதுவேலை நிறுத்தம் மட்டுமே ஆகும். ஒட்டுமொத்தமாக நாடு பூராவும் 70 சதவீதமான அரச, தனியார் தொழிலாளர்களும் ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இந்த வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. அச்சுறுத்தல்களைக்கூட விடுத்தது. அவற்றையிட்டு கவலைப்படாமல் 70 சதவீதத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்குகொண்டமை பெருவெற்றியாகும். அரச, தனியார் துறைசார்ந்த 366 தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். இதில் நாம் பல அனுபவங்களைப் பெற்றுக்கொண்டோம். நாம் அழைப்பு விடுக்காமலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜாதிக சேவக சங்கத்தின் தொழிலாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டமை வரவேற்கத் தக்கதாகும். அடுத்தகட்ட நடவடிக்கையின்போது நாடு முழுவதுமுள்ள 660 தொழிற்சங்கங்களினதும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.
நாடு முழுவதிலுமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி ஒட்டுமொத்தமாக 70 சதவீதத்தினர் வேலைநிறுத்தத்திலீடுபட்டுள்ளனர்.
பாடசாலைகளில் 70 சதவீதமான ஆசிரியர்கள் கடமையை பகிஷ்கரித்துள்ளனர். ரயில்வே ஊழியர்களில் 60 சதவீதத்தினரும் தேசிய வைத்தியசாலை, களுபோவில, பதுளை வைத்தியசாலைகளில் 80 சதவீதத்தினரும் ராகம வைத்தியசாலையில் 100 சதவீதத்தினரும் வேலை நிறுத்தம் செய்தனர்.
மின்சாரத்துறையில் 90 சதவீதத்தினரும் அரசாங்க அச்சகத்தில் 95 சதவீதத்தினரும் தலைமைத் தபாலகத்தில் 100 சதவீதத்தினரும் பட்டதாரி ஊழியர்கள் 80 சதவீதத்தினரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் தலா 40 சதவீதத்தினரும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் 75 சதவீதத்தினரும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் 100 சதவீதத்தினரும் வானிலை அவதான நிலையத்தின் 16 அவதானிப்பு நிலையங்களிலும் வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றியுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் களனி பல்கலைக்கழகத்தில் 40 சதவீதத்தினரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் 50 சதவீதத்தினரும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 20 சதவீதத்தினரும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருள் களஞ்சியத்தில் 40 சதவீதத்தினரும் கொழும்பு மாநகர சபையில் 50 சதவீதத்தினரும் வேலை பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
இதேவேளை, மலையகத் தோட்டப்பகுதிகளில் பரவலாகவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். அரச தரப்பின் கோரிக்கையை தோட்டத் தொழிலாளர்கள் முற்றாக நிராகரித்ததை காண முடிந்தது.
நுவரெலியாவில் 18 தோட்டங்களில் 100 சதவீதமும் பதுளை மாவட்டத்தில் 17 தோட்டங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டு தோட்டங்களிலும் மாத்தறை மாவட்டத்தில் 6 தோட்டங்களிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திலீடுபட்டனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களில் 10 சதவீதத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதோடு, அக்குரஸ்ஸ இ.போ.ச. டிப்போ ஊழியர்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கொழும்புத்துறைமுகத்தில் 20 சதவீதத்தினர் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் 80 சதவீதத்தினர் வேலை நிறுத்தத்திலீடுபடப் போவதாக முன்னறிவித்தல் கொடுத்திருந்த நிலையில், அரசு விடுமுறைகளை ரத்துச் செய்ததோடு, படையினரைக் கொண்டு ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டதால் பலர் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார்.
தபால் சேவை, மின்சாரம், தண்ணீர் மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளை இந்த அடையாள வேலை நிறுத்தத்தின் மூலம் முடக்கி மக்களை அசௌகரியத்துக்குள்ளாக்க நாம் முயற்சிக்கவில்லை. மின்சார சபை ஊழியர்கள் முழுமையாக வேலை நிறுத்தம் செய்தால் ஒரு நாள் மின்சாரத் துண்டிப்பை மீள வழமைக்குக் கொண்டு வருவதற்கு நான்கு நாட்கள் தேவைப்படலாம். அத்தகையதொரு முடிவுக்கு நாம் அவசரப்பட்டு போக விரும்பவில்லை.
அரசுக்கே நாம் நெருக்குதல் கொடுக்க முனைந்துள்ளோம். மக்களுக்கல்ல. இன்று நாம் மீண்டும் கூடி நிலைமையை ஆராயவிருக்கின்றோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிப்போம். அரசுக்கு இன்னும் 24 மணி நேர கால அவகாசம் இருக்கின்றது. அதில் சாதகமான சமிக்ஞை காட்டப்படாவிட்டால் நாம் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து அடுத்த கட்டப் பணியில் இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என்பதை எச்சரிக்கை செய்து வைக்கின்றோம் எனவும் லால்காத்த தெரிவித்தார்

Exit mobile version