இதன் காரணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்வதற்கான ஒன்று கூடுகின்ற கூட்டங்கள், தீர்மானங்கள் எடுக்கப்படாமல் நிறைவடைகின்றன.
இறுதியாக நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து இது தொடர்பில் பேசிய போதும், இறுதியில் இதிலும் தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட வேண்டும் என கூட்டமைப்பின் சிலர் முன்வைத்த கோரிக்கையை புறந்தள்ளும் வகையிலேயே இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான தரப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பலர், தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கு வலியுறுத்துகின்ற போதும், இரா. சம்பந்தனே அதற்கு எதிராக இருப்பதாக இலங்கை அரசாங்க செய்தித் தரப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பிலும், மீண்டும் சந்திப்பதற்கான திகதி அறிவிக்கப்படாமல் கூட்டத்தை நிறைவு செய்த இரா. சம்பந்தன் வீயன்னாவுக்கு பயணம் செய்துள்ளார்.
இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற பிராந்திய செய்தித்தாளான வலம்புரியில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கம் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்வரும் தேர்தலில் பொது வேட்பாளராக நிற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக சிவாஜிலிங்கம் பாரிய பணத்தொகையையும் பெற்றுக் கொண்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில் இந்த அறிக்கைக்கு எதிராக கண்டனம் வெளியிட்ட சிவாஜிலிங்கம், யுத்தம் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அரசாங்கத்துக்கு எதிராக இந்தியாவில் வைத்து கருத்துக்களை வெளியிட்டதாகவும், இவ்வாறான பதிவுகளுக்கு மத்தியில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது திட்டமிடப்பட்ட பழிசுமத்தல் என தெரிவித்த அவர், சிவசக்தி ஆனந்தனும் இன்னொரு தமிழ் அரசியல்வாதியால் இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிவசக்தி ஆனந்தன் போன்றோரை இயக்குபவர் யார் என்பது குறித்தும் தமக்கு தெரியும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.