இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில், ”அரசியல் மறுசீரமைப்பை விட அபிவிருத்திக்குத்தான் முதலிடம்” என்ற தனது வழக்கமான செய்தியையே அங்கும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால், இந்த அரசியல் மறுசீரமைப்புத்தான் நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தரும் என்று சிலர் கருதுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அவரது கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ஆரவாரத்துடனான வரவேற்பை ஜனாதிபதி எதிர்கொண்டார்.
ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் உள்ள இந்த மாவட்டம், யதார்த்தமாகவே அவரது ஆதரவாளர்கள் அதிகமுள்ளதாக அறியப்பட்ட ஒரு இடமல்ல.
யாழ்ப்பாணத்தில் அவரது கூட்டத்துக்காக கூடிய மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதுவும், ஒரு விளையாட்டு அரங்கில் அந்தக் கூட்டம் நடந்ததால், அந்தக் கூட்டம் மேலும் சிறிதாகவே தெரிந்தது. (வவுனியாவில் கூட்டம் பரவாயில்லை என்று கூறப்படுகின்றது.)
அங்கு கூடியவர்களில் பெரும்பாலானோர், ராஜபக்ஷவின் உள்ளுரில் உள்ள ஒரு கூட்டணிக் கட்சியின் ஆதரவாளர்கள்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி பெரும்பாலான நேரம் தமிழிலேயே பேசினார்.
இன்றுமுதல் இலங்கையில் இன வேறுபாடு கிடையாது என்றும், எல்லாரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் அவர் அங்கு பேசினார்.
எதிர்காலத்தில் இன அரசியலுக்கு இடம் கிடையாது என்று பெரிதும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசினார்.
”தமிழ்” அல்லது ”முஸ்லிம்” என்ற பெயருடன் இருக்கும் கட்சிகளை தடை செய்வது தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பபட்ட பிரேரணைக்கு அவர் மீண்டும் உயிர் கொடுப்பார் என்பதற்கான சாத்தியமான ஒரு சமிக்ஞையாக இது பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே வவுனியாவில் பேசிய அவர், பிரதேச மக்கள் சபைகளின் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஆயினும் இந்த மக்கள் சபை என்றால் என்ன என்பது பற்றிய விபரம் எதனையும் அவர் வெளியிடவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதியில் மக்களுக்கு பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் அங்கு உறுதி வழங்கியுள்ளார்.
அரசாங்கம் போரில் வெற்றிபெற்ற பின்னர் தமது ஊரில் வழமைநிலை திரும்பியுள்ளதாக பிபிசியிடம் பேசிய சில உள்ளூர் மக்கள் குறிப்பிட்டார்கள். அதனை அவர்கள் வரவேற்றார்கள்.
ஆனால், தமிழர்களுக்கு விசேடமான சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் வேறு சிலர் கூறினார்கள்.
BBC.