Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் தீர்வு தொடர்பான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன்மொழிவுகள்:மகிந்த புதுடில்லி பயணம் !

09.11.2008.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன் மொழிவுகளைக் கொண்ட யோசனைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசவிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை மாலை புதுடில்லியில் இரு தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. அந்தச் சந்திப்பின் போதே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன்மொழிவுகள் அடிப்படையிலமைந்த யோசனையை முன்வைத்து மன்மோகன் சிங்குடன் மகிந்த ராஜபக்ஷ கலந்துரையாடவிருக்கின்றார்.

இலங்கை அரசு காலதாமதமின்றி அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டுமென புதுடில்லி இரண்டு வாரங்களுக்கு முன்னர் வலியுறுத்தியிருந்தது. இந்தியாவின் இந்த வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாத நிலையில் இலங்கை அரசு அரசியல் தீர்வு விடயத்தில் கூடுதல் கரிசனைகாட்டத் தொடங்கியது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் அரசியல் தீர்வு முன்மொழிவுகளை காலம் தாழ்த்தாது தமக்கு கிடைக்கச் செய்யுமாறு அவசரப்படுத்தியிருந்தார்.

இதன் பிரகாரம் கடந்த வாரத்தில் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு இரண்டு தடவைகள் கூடி ஆராய்ந்தது. இரண்டு வருடங்களில் 86 தடவைகள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாகவே இக்கூட்டங்களில் ஆராயப்பட்டுள்ளது.

எனினும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கும் அப்பால் சென்றேனும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் கவனம் செலுத்த அரசாங்கம் அக்கறை காட்டிவருகிறது. இதற்கு இந்தியாவின் அண்மைக்கால அழுத்தமே காரணமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் போர் நிறுத்தம் குறித்து புதுடில்லிக்கு வற்புறுத்தல்களைக் கொடுத்த போதிலும் மத்திய அரசு அது குறித்து கூடுதல் அக்கறை காட்டாத போதிலும் போர் முனைப்பை தவிர்த்து கூடிய விரைவில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசைக் கேட்டிருக்கின்றது. இந்தியாவின் இந்தக் கோரிக்கையை புறக்கணிக்க முடியாத நிலையிலேயே சர்வகட்சிக்குழுவின் முன்மொழிவுகள் அடிப்படையில் தீர்வு யோசனை குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு தெளிவு படுத்தவிருக்கின்றார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன்மொழிவுகள் அறிக்கை இன்று அல்லது நாளை திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படலாமென அறிய வருகின்றது. இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் கலந்துரையாட விருப்பதாகவும் தெரியவருகின்றது.

இலங்கை அரசு முன்வைக்கும் அரசியல் தீர்வு முன்மொழிவுகளை அறிந்து கொண்டதன் பின்னர் புதுடில்லி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கருத்துகளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்திருக்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு திருப்பியதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி விஜயத்தை மேற்கொள்வாரென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணிலின் புதுடில்லி விஜயம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இதுவரையில் திகதி நிர்ணயிக்கப்படவில்லையெனவும் புதுடில்லியிலிருந்து தகவல் கிடைத்ததும் எதிர்க்கட்சித் தலைவரின் பயணம் தீர்மானிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஏ.எம்.நிலாம் (Thinakural)

Exit mobile version