Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் தீர்வுக்கு ராஜபட்ச உறுதி அளித்துள்ளார் – எஸ்.எம்.கிருஷ்ணா.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 7 இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்று மக்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார். மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் மேலும் கூறியிருப்பது: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கவும், போரில் பாதித்த மக்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் இந்திய அரசு ஏராளமான உதவிகளை செய்துள்ளது. இப்போதும் செய்து வருகின்றது.போரில் பாதித்த மக்களுக்கு 2600 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன. 70 ஆயிரம் வேளாண் பொருள்கள் அடங்கிய பைகள் அளிக்கப்பட்டன. போரினால் நசிந்துபோன விவசாயத் தொழிலுக்கு புத்துயிரூட்டும் நோக்கில் இவ்வுதவி அளிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு, மத்திய பிராந்தியங்களின் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளுக்கு இடையே மீண்டும் மக்கள் சகஜமாக சென்றுவரும் நோக்கில் 55 பஸ்கள் வழங்கப்பட்டன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான மருத்துவ சேவைகள் செய்யப்பட்டன. குறிப்பாக கை, கால்களை இழந்து முகாம்களில் தங்கியிருந்த அப்பாவி மக்களுககு செயற்கை கை, கால்களை பொருத்தும் முகாம் நடத்தப்பட்டது. ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையேயான சண்டையால் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க 4 லட்சம் சிமென்ட் மூடைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுதவிர, போரில் பாதித்த மக்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வுத் தொகையாக 500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஏற்படுத்தப்படும் ரயில்வே கட்டமைப்பு, துறைமுகம், திரிகோணமலையில் நிறுவப்படும் அனல்மின் நிலையம், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் கலாசார மையம் உள்பட இன்னும் ஏராளமான திட்டங்களுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டிவருகிறது. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளதன் மூலம் அங்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த இலங்கையின் கீழ் தமிழர் உள்பட இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மை பிரிவினரும் ஏற்கத்தக்க வகையில் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படுவது அவசியம். இதை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வந்திருந்த போதும் இதுகுறித்து அவரிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் நிரந்தர அரசியல் தீர்வு காணுவற்கான உறுதி அளித்தார் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார்.

Exit mobile version