Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் உறுதி இல்லாமையினால் அரசியல் தீர்வு சாத்தியமில்லை:வ.திருநாவுக்கரசு .

03.09.2008.

சென்றவாரம் கதிர்காமத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தின் 65 மில்லியன் ரூபா நிதி உதவியோடு நிர்மாணிக்கப்பட்டதாகிய நூதன சாலை மற்றும் கலாசார நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறிய விடயங்கள் எமது கவனத்தை ஈர்த்திருந்தன. அதாவது, (அ) கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக பயங்கரவாதிகளால் நாடு பேரழிவைச் சந்தித்துள்ளதோடு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை முற்று முழுதாக சீர்குலைக்கப்பட்டுள்ளது. (ஆ) பயங்கரவாதிகளுக்குத் துணைபோகும் தென் இலங்கை அரசியல் சக்திகள் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மற்றும் (இ) கதிர்மாமத்தில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு இலக்கணமாக அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பனவே ஜனாதிபதி ராஜபக்ஷ கூறிவைத்த விடயங்களாகும்.

நாடு அந்நிய ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்து 6 தசாப்தங்களாகி விட்டது. ஜனாதிபதி கடந்த 3 தசாப்தங்களாக நாட்டுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டினைக் கூறிவைத்துள்ள அதேவேளை, அதற்கு முந்திய 3 தசாப்தங்களாக என்ன நடந்தது என்பது பற்றி ஒரு வார்த்தையாவது கூறியதாக அறிய முடியவில்லை. இது ஒரு வகையில் அந்தக்காலப்பகுதியின் வரலாற்றினை இருட்டடிப்புச் செய்வதுபோலவும், மறுபுறத்தில் எய்தவன் இருக்க அம்பை நோவது போலவும் காணப்பட வேண்டியுள்ளது. அதாவது “”பயங்கரவாதிகளால் நாடு பேரழிவைச் சந்தித்துள்ளது’ என ஜனாதிபதி கூறும்போது தமிழீழ விடுதலைப்புலிகளே அதன் சூத்திரதாரிகள் என்பதையே அவர் அர்த்தப்படுத்தியுள்ளார் என்பதை இங்கு மேலும் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த நாடு சுதந்திரம் அடைந்ததற்குப்பின் வரலாறு விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்ற காலப்பகுதியிலிருந்தே படிக்கப்படவேண்டுமென்றதொரு சிந்தனையே பரந்துபட்ட சிங்கள மக்கள் மனதில் இருத்தப்பட்டுள்ளது என்பதையே இது தொட்டுக் காட்டுகிறது என்றால் அது நிச்சயமாக மிகையல்ல

இதற்கு களம் அமைத்த சிறு எண்ணிக்கையிலான சிங்கள பேரினவாதிகளின் கைங்கரியம் காரணமாகவே நாடு இன்று பாரிய இக்கட்டான நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒரு புறத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பலத்த துன்பதுயரங்களையும் அவலங்களையும் சந்தித்து வரும் அதேவேளை, மறுபுறத்தில் நாட்டின் ஏனைய மக்களும் பலதரப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அவற்றையெல்லாம் ஓரளவேனும் விபரமாக இக்கட்டுரையில் வடித்து விடுவது சாத்தியமற்றதாகும். ஆனால், ஒரு அதிமுக்கியமான உதாரணத்தைக் குறிப்பிடலாம். அதாவது, யுத்தமயக்கத்தில் உறங்கியிருக்கும் தென்னிலங்கை மக்கள் வரலாறு காணாத வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாக அநேகமான குடும்பங்களைப் போஷாக்கின்மை ஆக்கிரமித்துள்ளதைக் கண்டு கொள்ளவில்லை. அதாவது ஏற்கனவே 50.7 % மக்கள் அருந்தும் உணவில் போதிய “”கலரி’ கள் (Calories) காணப்படவில்லையென ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை அதிகரிப்பதோடு, போஷாக்கின்மை நிலைமேலும் மோசமடையும் வாய்ப்புகளே காணப்படும். இன்றைய நிலைமையில் பணம்படைத்த மேற்றட்டிலுள்ளவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து இன, மத மக்களினதும் எதிர்காலமும் எதிர்கால சந்ததியினரின் தலைவிதியும் பரிதாபமானதாகவே அமையப்போகின்றது எனலாம். இது தான் நாடு முகம் கொடுத்துள்ள பாரிய சாபக்கேடு என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

பயங்கரவாதத்திற்கு துணைபோகும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் எவை?

அடுத்ததாக, பயங்கரவாதிகளுக்குத்துணைபோகும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் விடயத்தில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி கூறும்போது, யுத்தத்தை நிறுத்தி புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கு நம்பகத்தன்மையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனக் குரல் கொடுப்பது கூட ஆட்சியாளரால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றா அர்த்தம் கற்பிக்கப்படவுள்ளது என்ற கேள்வி எழவே செய்கின்றது. அதாவது, அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்றின் மூலம்தான் பயங்கரவாதம் என்பதை ஒழிக்க முடியுமே ஒழிய, இராணுவ நடவடிக்கை அல்லது இராணுவ ரீதியான வெற்றிகள் கூட நிரந்தரமான முடிவைக் கொண்டுவர முடியாது எனும் நிலைப்பாட்டினை எடுப்பவர்கள் தண்டனைக்குரிய தவறிழைப்பவர்கள் என்றே ஜனாதிபதி கருதுகின்றாரா? இலங்கையின் சமகால அரசியல் இராணுவ நிலைமை தொடர்பாக அண்மைக் காலமாக தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வருபவரும் முன்னாள் இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரியும் இந்திய அமைதிப்படை என்றழைக்கப்பட்ட (IPKF) இராணுவம் இலங்கையில் செயற்பட்ட காலத்தில் கடமை புரிந்தவருமாகிய கேணல் ஹரி ஹரன் “”மாகாணசபைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியானது யுத்தத்திற்கானதா? சமாதானத்தை நாடியதா?’ என்ற தலையங்கமிட்டு அண்மையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப் பார்ப்போம்.

“”கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வெற்றியென்பது நிச்சயமாக களமுனை வெற்றிகளுக்கும் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கும் அப்பாலேயே உள்ளதாயிருக்க வேண்டும். விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு இவை அவசியமானவையாயினும் மக்களின் மனங்களை வெல்லக்கூடியதான அவர்களின் ஆற்றலை அகற்றினால் ஒழிய இலங்கை அரசாங்கம் ஈட்டும் இராணுவ வெற்றிகள் நிலையானவையாயிருக்க முடியாது. விடுதலைப்புலிகளின் ஆயுதக் கிளர்ச்சியைத் தேவையற்றதாக்குவதற்குரிய ஒரு சமாதான கட்டமைப்பின் ஊடாக மட்டுமே அவற்றை அர்த்தமுள்ளதாக்க முடியும்.’

இவ்வாவாறு ஹரிஹரன் கூறியதோடு நின்று விடாமல், இரு மாகாணங்களும் வழங்கியுள்ள தீர்ப்பானது, “”அரசாங்கமும் பாதுகாப்பு படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடுங்கோலின் கீழ் உள்ள மக்களை விடுவித்து சமாதானத்தை கொண்டுவருவதற்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆணையாகும்’ என மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா கூறியுள்ளதை மேற்கோள் காட்டியதோடு, அது அவரின் கட்சி ஈட்டியவெற்றியின் குதூகலத்தைப் பிரதிபலிக்கின்றதே தவிர, அதன் தாற்பரியங்களை அல்ல எனவும் அவர் (ஹரிஹரன்) கூறியுள்ளார். ஏனென்றால் அரசாங்க கட்சிக்கு எதிராக வாக்களித்த 40% மக்கள் யுத்தத்தை எதிர்த்து சமாதானத்திற்குச் சமிக்ஞை காட்டியுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தல்கள் யுத்தத்திற்கான கருத்துக் கணிப்பு என்று கூறிவிடமுடியாது என்றும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்த்தனா 1977இல் பதவிக்கு வந்த பின்பு தமிழருக்கு எதிராக இனக்கலவரத்தைத் தூண்டி விட்டதோடு, “”தமிழருக்குச் சமாதானம் வேண்டும் என்றால் சமாதானம், யுத்தம் வேண்டுமென்றால் யுத்தம்’ என முழுங்கியவர். சிங்கள மக்களின் தோல்விகண்ட தலைவராக தான் வரலாற்றில் இடம் பெறவிரும்பவில்லை என்று கூட ஒரு சந்தர்ப்பத்தில் கூறிவைத்தவர். அதுபோலவே இன்றைய சிந்தனைகளும், நிழலாடிக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. வரலாற்றறிஞர் கே.எம்.டி.சில்வா, ஜே.ஆர்.ஜயவர்தன பற்றி நிறைய எழுதியுள்ளார். இலங்கை அரசியலில் ஏறத்தாழ 50 வருடகாலமாக உழைத்தவரும் இறுதி 11 வருட காலப்பகுதியில் 1 வருடம் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் பணியாற்றியவராகிய ஜயவர்த்தன ஒரு நாட்டுத்தலைவர் (Statesman) என்பதற்கு இலக்கணமாகச் செயற்பட்டவர் என்றொரு வரலாற்றுப்பதிவு இருக்க முடியாது. இது டி.எஸ்.சேனநாயக்க முதல் ஏனைய எல்லாத்தலைவர்களுக்கும் பொருந்தும்.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது எவ்வாறு?

நிற்க, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு இலக்கணமாக கதிர்காமத்தில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளமை நன்றாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். “”வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது ஒரு சீரிய தத்துவமாகும். கதிர்காமத்தில் காணப்படும் வேற்றுமையில் ஒற்றுமையானது எல்லா இன, மத மக்களினதும் சமத்துவத்துடன் கூடிய உண்மையான ஒற்றுமையா என்பதை சுயாதீனமான ஆய்வாளர்களாலேயே கூற முடியும். எவ்வாறாயினும் நாடளாவிய ரீதியில் உண்மையாகவே வேற்றுமையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என ஜனாதிபதி ராஜபக்ஷ இதய சுத்தியாக மனங்கொள்வாராயின், நாட்டின் பன்மைத்தன்மையினை மனமார ஏற்று ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒற்றுமை காண்பது அரிது, அரிது என்பதை தானாக ஆறஅமரச் சிந்தித்து ஏற்றுக்கொள்ளும் மனோநிலையை எட்டுவாராயின் அதுதான் நாட்டில் சமாதானத்தை மலரச்செய்வதற்கான ஆரம்பமாகும். அதுவே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கான ஒரே பாதையாகும். அதனை தென்னிலங்கையில் எடுத்துச்செல்வதற்குத் தடைக்கற்களாயிருக்கக்கூடிய சிங்கள கடும் போக்காளர் மற்றும் நாட்டு நலனில் அக்கறையற்ற பிரபல பேரினவாதக்கும்பலை முறியடித்துப் பயணிக்கவேண்டும். உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்றதற்கே அந்தக் கும்பல்தான் மிகப்பெரிய அளவிலான பங்களிப்பைச் செய்து வந்துள்ளது. அத்தகைய கும்பலொன்றுக்குத்தான் அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அடிபணிந்து பண்டாரநாயக்கசெல்வநாயகம் ஒப்பந்தத்தினை கிழித்தெறிந்தார். அப்படியிருந்தும்கூட அதே நாசகார சக்திகள்தான் 1959இல் அவரின் உயிரையுமே பறித்தன. மறுபுறத்தில் தமிழர் ஆயுதப்போராட்டம் பற்றிச் சிந்திக்க மறுத்து, சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலகட்டம் தான் அன்றைய நிலை. எனவே சிங்கள பேரினவாத சக்திகளைத்தடுத்தாளத் தவறினால் அவற்றின் பசியைத்தணிக்க முடியாது என்பது நன்கு உணரப்பட வேண்டும். அது தான் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த 2 மாகாணசபைத் தேர்தல்களிலும் வெற்றியை நிச்சயப்படுத்துவதற்காக அதனை யுத்தத்திற்கான மற்றுமொரு அங்கீகாரம் என தீவிரமான பிரசாரத்தினை மேற்கொண்டிருந்ததை யாரும் அறிவர். அடுத்து நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஏனைய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் சற்று பின்போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல், இவ்வருட முடிவுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவது பற்றியும் அரசாங்கத் தரப்பில் சமிக்ஞையொன்று காட்டப்பட்டிருந்ததாயினும் ஜனாதிபதி ராஜபக்ஷ அதற்கும் ஆப்புவைத்து விட்டார். விடுதலைப்புலிகள் திருகோணமலையில் சென்றவாரம் நடத்திய வான் தாக்குதல்கள் அதிகம் சேதங்களை ஏற்படுத்தவில்லை. அவற்றின் காரணமாக சற்று உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாயினும், அரசாங்கத்தின் யுத்த நிகழ்ச்சி நிரலில் எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லையென அரசாங்க தரப்பிலிருந்து அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்திடம் அரசியல் உறுதியில்லாத படியாலேயே அரசியல் தீர்வுக்கான மனோதிடம் இல்லாத படியாலேயே, கட்டுமட்டின்றி வளங்களைக் கொட்டி விடுதலைப்புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கில் யுத்தத்தை நடத்திவருகின்றதென அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

யுத்தத்திலேயே நாட்டங்கொண்டு, யுத்த ஜனாதிபதியாகவே ராஜபக்ஷ விளங்குகின்றார் என பிரபல சர்வதேச சஞ்சிகையாகிய “”த இக்கொனொமிஸ்ட்’ ( The Economis) அபிப்பிராயம் தெரிவித்துள்ளது. மற்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ “யுத்த ஜனாதிபதியா?’ அல்லது “சமாதான ஜனாதிபதியா ?’ என்ற கேள்வியும் சில வட்டாரங்களில் எழுப்பப்பட்டுள்ளது. இத்தகைய எதிர்மறையான பார்வைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து, நாட்டை வளப்படுத்தி சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கத்தக்க நிலைக்கு கொண்டு வருவதற்கே ஜனாதிபதி ராஜபக்ஷ தனது முழுப்பிரயத்தனத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். “”வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் அந்த தாரகமந்திரத்திற்குச் செயல்வடிவம் கொடுப்பதே அவர்மீதுள்ள வரலாற்றுப் பொறுப்பு ஆகும்.

THANKS:THINAKKURAL.

Exit mobile version