Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் இலாபத்திற்காக இடைத்தங்கல் முகாம் வாழ் மக்களைப்பயன்படுத்தும் இலங்கை அரசு : ரில்வின் சில்வா

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை நீண்ட நாட்களுக்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைத்திருப்பது, இலங்கையைத் தோல்வியுற்ற ராஜ்ஜியமாக சர்வதேசம் பிரகடனப்படுத்த காரணமாக அமைந்துவிடும்.

அரசியல் இலாபத்திற்காக வடக்கில் இடைத்தங்கல் முகாம் வாழ் மக்களைப் பயன்படுத்திக் கொள்வதால் இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் மீறல் போன்ற கடுமையான சர்வதேச சட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் தோன்றியுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கலின் ஊடாக மீண்டும் இலங்கையில் பிரிவினைவாத யுத்தமொன்றை உள்நாட்டில் தோற்றுவிக்க இடமளியோம். எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி.யின் தலைமையில் மக்கள் போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார். தீர்வுத்திட்டம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

தற்போது இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ளதால் மக்கள் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த வேண்டும். ஏனெனில், சர்வதேசம் இலங்கை தொடர்பில் கூடிய அவதானத்துடனேயே உள்ளது. 2005ஆம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதில் அப்போது இருந்த அரசாங்கம் தோல்வி கண்டதால் அமெரிக்க அமைப்பொன்று இலங்கையை தோல்வியடைந்த இராஜ்ஜியமாக பிரகடனப்படுத்தியது. இதேபோன்ற ஒரு சூழ்நிலை தற்போது இலங்கைக்கு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணியைத் துரிதப்படுத்தாமல் அரசாங்கம் அரசியல் இலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு, வடக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் தேர்தல்களை முன்னெடுத்துச் செல்கின்றது. இந் நிலையானது, இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தின் தலையீடுகளை அதிகரிக்கக் காரணமாக அமைந்து விடும். மனித உரிமைகள் மீறல், போர்க் குற்றம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தற்போதும் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் உள்ளது. இவ்வகையானதொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கவனயீனமாக செயல்படுவது இலங்கையின் எதிர்காலத்திற்கு சிறப்பாக அமையாது எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்

Exit mobile version