நிர்வகாத்தின் அலட்சியப் போக்கின் விளைவாக அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கப்போகிறார்கள் என முன்னாள் பிரதமரும் தற்போதைய நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான இரத்தினசிறி விக்கிரமநாயக்க கூறியிருக்கிறார். களுத்துறையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிNலுயே இவ்வாறு இரத்தினசிறி விக்கிரமநாயக்க கூறியிருக்கிறார். வைபவத்தில் தொடர்ந்து பேசிய இரத்தினசிறி விக்கிரமநாயக்க , முதலில் நாம் மக்கள் முன்சென்று எமது தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை அருகிக் கொண்டு போகிறது. எமது தவறுகளை நாம் திருத்துவோம் எனவும் கூறியிருக்கிறார். புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட சில சிரேஷ்ட அமைச்சர்களுக்கு அலுவலகமோ, செயலாளர்களோ நியமிக்கப்படாத அதிருப்தியினால் இரத்தினசிறி விக்கிரமநாயக்க இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இதே வேளை சமல் ராஜபக்ஷவும்; மக்கள் அரசு மீது அதிருப்தி கொண்டு வருவதாக பகிரங்கமாக விமர்சித்தும் இருக்கிறார். அமைச்சரவை நியமிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலம் கடந்து விட்ட நிலையிலும் சிரேஷ்ட அமைச்சர்கள் தங்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்காமல் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகி வருவதுடன் ‘அதிகாரத் தரப்பினர்’ மீது அதிருப்தி அடைந்தும் இருக்கிறார்கள். இதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திலும் பொதுத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்கள், எதிர்காலத்தில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 ஐத் தாண்டமாட்டாது எனக்கூறியிருந்தனர். ஆயினும் பாரிய அமைச்சரவை ஒன்றை அமைக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் பக்கம் சென்றுள்ள எதிரணி உறுப்பினர்கள் பலரும் அமைச்சரவைப் பதவிகளை எதிர்பார்த்து ஏமாந்து போயிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலலிடம் கேள்வி எழுப்பிய போது, அரசாங்கம் விமர்சனங்களைக் கண்டு பயப்படப் போவதில்லை. ஜனநாயக ரீதியில் யாரும் விமர்சிக்க உரிமை உண்டு. அரசாங்கத்திலிருக்கும் 162 பேரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டு மென்று எதிர்பார்க்க முடியாது. அவர்களில் இருவர்தானே தமது பார்வையில் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். அவர்களது விமர்சனம் தொடர்பில் தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் எனப் பதிலளித்திருக்கிறார். இதே வேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரத்திலுள்ள மஹ ரகம நகரசபையினதும் அநுராதபுரம் நகர சபையினதும் வரவு – செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. மஹ ரகம நகரசபையின் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆளும் கட்சியின் இரு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். அநுராதபுரம் நகர சபையின் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆளும் கட்சியின் ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்துள்ளார். ஏற்கனவே சில பிரதேச சபைகளின் வரவு – செலவுத் திட்டங்கள் இவ்வாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தமையால் தோல்வியடைந்துள்ளன.