அரசாங்கம் இந்த ஏற்பாட்டை மேற்கொள்வதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் தேவைப்படுகிறது. இதற்காக எதிரணியைச் சேர்ந்த 19 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாக அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படுமென அரசாங்கம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவித்திருந்த நிலையில் விமல் வீரவன்ச இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு பின்னர் மறுநாள் பெப்ரவரி5 இல் பாராளுமன்றம் கலைக்கப்படலாமென எதிர்வு கூறப்படுகிறது. ஆனால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னராக பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபடவுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்ததாக “சண்டே ரைம்ஸ் இணையத்தளச் செய்திச் சேவை தெரிவித்தது.
தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசம் 55 உறுப்பினர்களும் பங்காளிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியின் 01 உறுப்பினரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் 2 உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்களும் நுவாவின் 2 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு அரசுக்கு ஆதரவளிக்கும் 5 உறுப்பினர்களும் இ.தொ.கா.வின் 8 உறுப்பினர்களும் மலையக மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி.யின் 1 உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் 8 உறுப்பினர்களும் ஐ.தே.க.விலிருந்து வெளியேறி அரசுக்கு ஆதரவளிக்கும் 24 உறுப்பினர்களும் தேசிய சுதந்திர முன்னணியின் 12 உறுப்பினர்களுமாக மொத்தம் 128 எம்.பி.க்கள் உள்ளனர்.
ஆனால், ஜனாதிபதி தேர்தல் சு.க.எம்.பியான அர்ஜுனரணதுங்க, சேகுஇஸ்ஸதீன் எம்.எஸ்.செல்லச்சாமி, சச்சிதானந்தன் ஆகிய நான்கு உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளனர். இதனால் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் 124 ஆக இருக்கின்றது. 225 எம்.பி.க்கள் கொண்ட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் தேவையாயின் 150 எம்.பி.க்களின் ஆதரவு தேவையாகும். இந்நிலையில், எதிரணியின் 19 எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்றுவதற்கு அதாவது பழையதொகுதிவாரி தேர்தல் முறையை மீளக்கொண்டு வருவதற்கு சிறிய கட்சிகளும் இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி போன்ற சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், அரசின் பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணியிடமிருந்து இந்தக் கருத்து நேற்று வெளிப்பட்டிருக்கிறது.