30.03.2009.
கிழக்கில் ஒரு குழு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததாக வெளி உலகுக்குக்காட்டிய வண்ணம் அரசு ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களும், அங்குழுவுக்கு எதிரான தமிழ் மக்களும் பெரும் அச்சம் பீதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
யுத்த வெற்றிப்பேரிகை முலக்கத்தின் மூலம் அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான உணர்வுகளைத்தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் வெளியிட்டார்.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ?இஸ்லாமும் பன்மைத்துவமும் எனும் கருப்பொருளிலான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டில் நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 300 பேராளர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது;
எமது நாடு இன்று பல்வேறு பட்ட சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இத்தகையதொரு மாநாடு இடம் பெறுவதானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நாம் கருத வேண்டியுள்ளது. சிறுபான்மை மக்கள் கூடுதலாக வாழ்கின்ற நாடுகளில் ?பன்மைத்துவம்? பற்றிப் பேச வேண்டிய அவசியம் இன்றைய உலகுக்கு மிக முக்கியமானதாகவே நோக்க வேண்டபியுள்ளது. இலங்கையில் மட்டுமன்றி தென்னாசியாவில் வாழுகின்ற சிறுபான்மைச் சமூகங்களின், முக்கியமாக முஸ்லிம் சமூகத்தின் நிலைகுறித்து கூடுதல் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
சர்வதேசத்தின் கவனம் இன்று தென்னாசியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் பக்கம் திருப்பப்பட்டிருப்பதை காணலாம். அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் அண்மைய அறிக்கையையும், அமெரிக்க இராணுவத்தின் அறிக்கையும் தென்னாசிய சிறுபான்மை முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், ஆயுதப் போராட்டக் குழக்களாகவும் பார்க்கின்ற ஒரு போக்கையே காண முடிகிறது. மேற்குலக போக்கு உலகில் முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்பதாகவே உள்ளது. இது இஸ்லாமிய உலகம் இன்று எதிர் கொண்டிருக்கும் பெரும் சவாலாகவே காணப்படுகின்றது.
இது இவ்விதமிருக்க இலங்கையிலும் காலத்துக்குக்காலம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மை கலாசாரத்தின் பக்கம் புகுந்து விடாமலும் மேலாதிக்க தேசியவாதத்துக்கு அடிபணியாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதுமே ஆயதப் போராட்டத்துக்கு முயற்சிக்கவுமில்லை. அதற்குத்துணைபோகவுமில்லை. தெற்கில் முஸ்லிம்களும், சிங்களவரும் சமாதானமாகவும், சகிப்புத்தன்மையுடனும், புரிந்துனர்வுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.. இதேபோன்று வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம்களும், தமிழரும் ஒன்றாக ஒரு தாய்பெற்ற பிள்ளைகள் போன்று சமர சமாகவும், புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் பேரினவாதச் சக்திகள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர் மனங்களில் நச்சுவிதையை விதைக்கும் வேலையை தொடங்கினர். இதன் மூலம் படிப்படியாக தமிழ் மக்களுக்கு எதிரான போக்கு வளர்க்கப்பட்டது. இதன் தாக்கத்தை வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் உணரத்தலைப்பட்டனர். தேசிய அரசியலிலிருந்து தமிழர் ஓரங்கட்டப்படுவதை உணரத் தொடங்கியதும் அந்தச் சமூகத்தின் இளைஞர்கள் தங்களது உரிமைக்காக ஆயுதமேந்த முன்வந்தனர்.
இதேபோன்று இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் அங்கு வாழும் தமிழ் மக்களால் ஓங்கட்டப்படுமோ என்ற அச்சமும் இன்று உருவாகியுள்ளது.
இன்று கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து அரசுடன் இணைந்து கொண்டு ஜனநயாக நீரோட்டத்துக்கு வந்துவிட்டதாக உரத்துக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் ஒருகுழுவினர் அரசின் ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக்கொண்டுடே இயங்கிக்கொண்டிருகின்றனர். இதனால் கிழக்கல் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களும், இக்குழுவினருக்கு எதிரான தமிழ் மக்களும் பெரும் அச்சம், பீதி கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நாட்டில் இனக்கலவரத்தின் ஆரம்பமானது ஒரு நூற்றாண்டை நிறைவு செய்ய இன்னும் ஆறுவருடங்களே உள்ளன. 1915 இல் தென்பகுதியில் ஆரம்பமான இனக்கலவரமானது வர்த்தகப் போட்டி காரணமாகவே ஏற்பட்டது. முஸ்லிம் சமூகம் வர்த்தகத்தில் மேலோங்கி வரவதை சகித்துக்கொள்ள முடியாத பேரினவாத சக்திகள் முஸ்லிம்களுக்கெதிராக சிங்கள சமூகத்தைத் தூண்டிவிட்டு பெரும் இனக்கலவரத்தை தோற்றுவித்தது.
அன்று ஆரம்பித்த இந்த வர்த்தகப் போட்டி மனப்பான்மையானது இன்று வரையில் நீடித்துக்கொண்டே இருப்பதைக்காண முடியும். தென்னிலங்கையில் எந்தப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்படுமானாலும் அது வர்த்தகத்தை மையமாகக் கொண்டே ஆரம்பிக்கப்படுகின்றது. இது வரலாற்று ரீதியான உண்மையாகும்.
இதேபோன்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிடப் பயன்படுத்தப்பட்ட கருவி தமிழ் மக்கள் கல்வியில் மேலோங்கிக்காணப்பட்டதாகும். இது பிரதான காரணியாகும். தமிழர்கள் அளவுகடந்த நிலையில் அனுபவிப்பதாக பேரினவாதிகள் பொறாமை கொண்டு சிங்கள சமூகத்தைத் தூண்டிவிட்டனர். அது மட்டுமன்றி ஆரிய, திராவிட வழித்தோன்றல் வரலாறுகளும் தமிழர்களை சிங்களவரின் எதிரியென்ற அந்நியப்படுத்தலுக்கு வழி வகுத்தது.
இவைதான் எமது தேசத்தின் சிறுபான்மை சமூகங்கள் ஓரங்கட்டப்படுவதற்கும், அவர்கள் மீதான பொய் முத்திரை குத்தப்படுவதற்கும் காரணங்களாக அமைந்தன.
ஏன் இன்று அரசு பிரலாபித்துவரும் யுத்த வெற்றிப் பேரிகை முழக்கத்தின் மூலம் சிங்கள மக்களுக்கு என்ன செய்தியை சொல்லவிளைகின்றது. பேரினவாதத்துக்குத் துணை போயுள்ள அரசாங்கம் சிங்கள மக்களின் உணர்வுகளை சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகப்பாரதூரமானவையாகவே அமையலாம். இதுதான் தமிழ், முஸ்லிம், மக்கள் அச்சமும், பீதியும் கொள்ளக் காரணமாகும்.
இத்தகையதொரு நெருக்கடி மிக்க காலகட்டத்தில் இஸ்லாம் பற்றியும் பன்மைத்துவம் பற்றியும் பேசமுற்பட்டிருப்பது மிகப் பொருத்தமுடையதாகவே நாம் காண்கின்றோம். பன்மைத்துவத்தின் அடிப்படையே சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என்பவையாகும். இதனை மேற்குலகம் தெரிந்து வைத்திருந்தாலும் கூட முஸ்லிம் உலகை தன் காலடிக்குக் கொண்டுவர வேண்டுமென்பதற்காக தென்னாசியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாத முத்திரை குத்தி செயற்பட முனைகின்றது. பாகிஸ்தானைப் பயங்கரவாதத்தின் மோட்சம் எனக்காட்ட மேற்குலகம் முனைகிறது எனவும் ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.