இவர்களைப் பயன்படுத்தி இன்று அரசாங்கம் வடக்கில் கழிவு எண்ணெய் அரசியல் செய்கிறது. மன்னார் கடலில் எண்ணெய் ஆய்வு நடத்தும் இந்திய நிறுவனங்கள் இனிமேல் யாழ்ப்பாண நிலப்பரப்பிலும் எண்ணெய் அகழ்வு வேலைகளை ஆரம்பிக்கலாம்.
அடுத்த வாரம் இலங்கை வரும் சிவ்சங்கர் மேனனுக்கு இந்த ஆலோசனையை நாம் வழங்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இந்த விவகாரம் இன்று சந்தி சிரிக்கும் உண்மையாகிவிட்டது.
மக்களின் ஜனநாயக சாத்வீக போராட்டங்களுக்கு எதிரான, இந்த வெட்கங்கெட்ட கழிவு எண்ணெய் அரசியலை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
வடக்கில் பொதுமக்கள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தமது மண் உரிமைக்காக சாத்வீக போராட்டம் செய்ய விளையும் மக்கள் மீது கழிவு எண்ணெய் வீசப்படுகிறது. அவர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் தாக்கப்படுகின்றன. ஊழல்களை வெளிக்கொணரும், அரசு அதிகாரிகள், வைத்தியர்கள் வாழும் வீடுகள் மீது கழிவு எண்ணெய் வீசப்படுகிறது.
தமது சமுதாயத்தின் நாளைய தலைவர்களான பல்கலைக்கழக மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களது மண்டைகள் உடைக்கப்படுகின்றன. இது தொடர்ச்சியாக நடக்கின்றது.
வெட்கங்கெட்ட முறையில் கழிவு எண்ணெய் வீசுவது, முகமூடி போட்டுக்கொண்டு சந்தியில் வைத்து தாக்குவது, வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பது, மாணவர்களின் மண்டைகளை உடைப்பது, தொலைபேசியில் அழைத்து பயமுறுத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்.
தெற்கிலும் இதுதான் இரண்டு தினங்களுக்கு முன்னர் அம்பாந்தோட்டையிலும் நடந்தது. எதிர்க்கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஒரு பெண்ணும், இளைஞனும் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்.
நாடு முழுக்க நடைபெறும் அனைத்து சம்பவங்களிலும், அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை எதிர்க்கும் பொது மக்களும், எதிர்க்கட்சி ஆதரவாளர்களும்தான் தாக்கப்படுகின்றார்கள்.
எனவே இந்த அரசாங்கம் இனியும், இவற்றை யார் செய்கிறார்கள் என்பது எமக்கு தெரியாது, நாம் விசாரணை செய்கிறோம் என்ற பதில்களை கூறமுடியாது.
இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்கள், தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டங்களை தடுத்து நிறுத்தி விட முடியாது. இதன் மூலம் நமது ஜனநாயக போராட்டம் மேன்மேலும் வலுப்பெறும் என்பதை விரைவில் அரசாங்கம் உணரும்.