Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசாங்கத்திற்குள் அதிருப்திகொண்டிருக்கும் 20 பேரடங்கிய குழுவினர் எம்முடன் பேச்சு _

அரசாங்கத்திற்குள் அதிருப்தி கொண்ட இருபது பேரடங்கிய குழுவினர் எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

எனவே ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம் அமைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட மற்றும் இளம் தலைமைத்துவங்கள் இணைந்து எமது கட்சி இன்று பலம் பெற்றுள்ளது. மக்களின் பணம் அரசாங்கத்தின் சுகபோகங்களுக்காக செலவு செய்யப்படுகின்றது என்றும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே பதுளை மாவட்ட ஐ.தே.க. எம்.பி. ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை கண்காணிப்பதற்கு அரசு தரப்பு எம்.பி. க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்குள் உள்ள பெரும்பாலானோர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இவ்வாறு கண்காணிப்புக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு வாகனங்கள் கொடுப்பனவுகள், உத்தியோகத்தர் குழுவும் வழங்கப்படவுள்ளது.

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் 95 ஆக இருக்கையில், அதற்கும் மேலாக கண்காணிப்பாளர்களை நியமித்து சிறப்புரிமைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.

மக்களின் பணம் அரசாங்கத்தின் சுகபோகங்களுக்காக செலவு செய்யப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்குள் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையிழந்து அதிருப்தி கண்டுள்ளனர்.

இத்தகையவர்களில் 20 பேர் எம்மோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். எனவே ஜனவரி 26 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான தளம் அமைக்கப்படும். எதிர்வரும் மூன்று மாதங்களின் பின்னர் சிறந்த அரசியல் மாற்றங்களுக்கான நாடகங்கள் அரங்கேறும்.

 

Exit mobile version