
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்த பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. அரச படைகளால் பாலியல் வன்முறைகளுக்கும் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்படுவதாக இவ்வறிக்கை கூறுகிறது. அரச அதிகாரிகளும், இராணுவத்தினரும் இரவு நேரங்களில் சிவில் உடையில் வீடுகளுக்குச் சென்று துன்புறுத்துவதாகவும், பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. எது எவ்வாறாயினும் பாதுகாவல் மற்றும் கண்காணிப்பு ஆய்வுகள் இவ்வாறான சம்பவங்கள் இன்னமும் முறைபாடுகள் இன்றியே காணப்படுவதாகவும், இதற்கு இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரின் மிரட்டல் வன்முறைகள் அதிகரிக்கலாம் என்பதே காரணம் என்றும் தெரிவிக்கின்றன.
இந்த மாவட்டங்களில் அரசின் துணை இராணுவக் குழுக்கள் அரசபடைகளோடு இணைந்து செயற்படுவதும், புலம்பெயர் நாடுகளிலிருந்து சில தமிழ்க் குழுக்கள் சார்பானவர்கள் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்தாவது ஆண்டறிக்கை இன்றைய அவல நிலை குறித்த சம்பவங்களைச் சுட்டிக்காடுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என மேலும் குறிப்பிடப்படுகிறது.