சமீபத்தில் திமுக, காங்கிரஸ், சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பத்து தமிழக எம்பிக்கள் இலங்கை சென்று முகாம்களை பார்வையிட்டுத் திரும்பினர். இக்குழுவினர் இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்துப் பேசுகிறார்கள். இந்
நிலையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வசனக்கவிதை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பருவ மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல், இலங்கைத் தீவில் ஆடிக்காற்று வீசிக் கொண்டிருந்தது.அந்தி வானத்திலே சிவப்பு; அந்தப் பூமியெங்கும் பரவியிருந்தது. அந்த வண்ணத்தை அந்தத் தீவின் தெருக்களில் தீட்டுவதற்கு தமிழ் ஈழ உரிமைப் போரில் ஈடுபட்ட இலங்கை வாழ் மக்களின் படைவரிசை இருபக்கமும் நின்று குருதி பொழிந்தவண்ணம் இருந்தன.சகோதர யுத்தத்தை, பாண்டவர்கள்– கெளரவர்கள் கதையிலே படித்த மக்கள்; கடந்த சில ஆண்டுக்காலமாக காட்சியாகவே அந்த சின்னஞ்சிறு தீவில் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள் –அந்தோ; கொடுமை!.
எதிரியின் அடையாளங்கண்டு; ஏறிமிதிக்கப் புறப்பட்ட அணிவகுப்பு; திசைமாறித் திரும்பி தன் படை வரிசையையே குலைத்துக் கொண்ட கொடுமையை என்னவென்று கூறிக் குமுறி அழுவது!.அங்கே சண்டை நடந்தால்தான்; மண்டைகள் உருண்டால்தான்; அதுவும் தமிழினத்தின் பிணங்கள் குவிந்தால்தான்; ஒப்பாரிப் பாட்டு ஒலிக்கவே சுருதி சேருமென்று எதிர்பார்த்துக் காத்திருந்த எட்டப்பர்கள்– தாங்கள் விரும்பியவாறு அண்ணன் தம்பிகளை அந்த மண்ணில் சவமாகச் சாயவிட்ட பிறகே; சந்தோஷம் கொண்டார்கள் – மனச்சாந்தி பெற்றார்கள்.ஆனால், அய்யகோ; அந்த மயான அமைதிக்குப் பிறகும்– அந்த மண்ணில் திக்கற்றுத் தவிக்கும் தமிழ்க் குடும்பங்களைக் கைதூக்கி விட்டுக் காப்பாற்றும் முயற்சியிலாவது ஓரளவு வெற்றி பெற முடிந்ததே என்று மனம் ஆறுதல் பெறுகிறது.காங்கிரசார், கழகத்தினர் எனப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பேரரசின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு அனுப்பும்போதுகூட; இவர்கள் போய் என்ன செய்யப் போகிறார்கள்; ஏமாற்றத்தைத்தான் கப்பலேற்றி வந்து இங்கே இறக்குமதி செய்வார்கள் என்று எண்ணியவர்கள், எண்ணியதையெல்லாம் பேசியவர்கள், இன்று நாவடங்கி நாடறியாமல் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.நமது நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை சென்றபோது வாக்குறுதி வழங்கப்பட்டது. போர் முடிந்துவிட்டது; இனி அமைதியான அரசியல் தீர்வுதான்– என வாக்களித்தார்கள்.முகாம்களில் முள் வேலிக்குள்ளிருந்தோர்; நாளை முதல் நல்லமைதி கண்டோம் என்று நமை வாழ்த்துகின்றார்.வாக்குறுதி நிறைவேற்றியவர்களை நாமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.தொப்பூழ்க்கொடி உறவுகளைத் தொட்டுத் தழுவி; தொடர்கின்றோம் நமது லட்சியப் பயணத்தை.ரத்தம் சிந்திடும் இனத்தின் பரிதாப நிலை கண்டு விம்மி அழுத– அந்தநாள் எங்கே? இன்ப நாளிதே எனப் பாடிடும் இந்த நாள் எங்கே? சண்டை ஒழிந்தது– சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்!.இவ்வாறு கூறியுள்ளார்.