Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அயர்லாந்தில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த் விசாரணை!

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத்தில் தமிழனப் படுகொலை நடத்திய சிறிலங்க அரசிற்கு எதிரான போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் மீது ‘நிரந்தர மக்கள் நடுவர் மன்றம்’ என்றழைக்கப்படும் பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில் வரும் 14, 15ஆம் தேதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ரோம் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நிரந்தர மக்கள் நடுவர் மன்றம், ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்றது அல்ல என்றாலும், இதன் விசாரணையும் கண்டுபிடிப்புக்களுக்கும் பன்னாட்டு அளவில் மிகுந்த மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது.

சிறிலங்க அரச படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிவற்றை விசாரிக்கப்போகும் இந்த நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் நீதிபதியாக இந்தியாவின் குறிப்பிடத்தக்க நீதிபதிகளில் ஒருவரான இராஜேந்திர சச்சார் அமர்கிறார்.

சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தினை அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடத்துகிறது. இதில் தமிழர்களுக்கு எதிரான போரில் நடந்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களையும், புகைப்படங்களையும் அளிப்பது மட்டுமின்றி, முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் எப்படிப்பட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை நேரில் கண்ட பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

சீனாவின் ஆக்கிரமிப்பிலுள்ள திபெத், மேற்கு சஹாரா, அர்ஜெண்டினா, எரித்திரியா, பிலப்பைன்ஸ், எல் சல்வடார், ஆஃப்கானிஸ்தான், கிழக்கு திமோர், ஜைர், குவாட்டமாலா, ஆர்மீ‌னிய இனப் படுகொலை, நிகராகுவாவில் அமெரிக்காவின் தலையீடு உள்ளிட்ட பல பன்னாட்டுச் சட்ட அத்து மீறல்களை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் நடந்த தமிழனப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. குரல் கொடுத்தாலும் அதற்கு சிறிலங்கா இணங்கவில்லை என்று கூறி, தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.நா.வும், இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகளும் மறைக்கும் சாட்சிகளற்ற அந்தப் போரில் நடந்த இனப் படுகொலை, போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை ஆதாரத்துடன் கொண்டு வரும் இந்த முயற்சி மனித உரிமை ஆர்வலர்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது.

இறுதிக்கட்டப் போர் நடந்த வன்னிப் பகுதியில் கடைசி மூன்று நாட்களில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிறிலங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை நிகழும் போது சிறிலங்கப் படைகளோடு இருந்த ஊடகவியலாளர்கள் தவிர, மற்றபடி நேரில் பார்த்த சாட்சியங்கள் அனைத்தும் தற்போது வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

படைகளோடு இருந்த அந்த ஊடகங்களும் சிறிலங்க அரசிற்கு சாதகமாக உண்மையை மறைத்து செய்திகளை வெளியிட்டன. இந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய இனப் படுகொலையை ஆதாரப்பூர்வமாக வெளிக் கொண்டுவரும் பெரும் முயற்சி இதுவாகும்

Exit mobile version