Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அம்மாவிடமிருந்து மகளைப் பிரித்து வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்: மனோ கணேசன்

JAYA_DAUGHTERநாடகம் ஆடும் இந்த அரசாங்கம் மக்களை இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
ஜெயக்குமாரியை விடுதலைசெய்யக் கோரும் பிரசார அமைப்பினால் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாபெரும் ஜனநாயகப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஜெயக்குமாரி விடயத்தில் இந்த அரசாங்கம் கண்மூடித்தனமாக இயங்குகிறது. அம்மாவிடமிருந்து மகளையும் மகளிடமிருந்து அம்மாவையும் பிரித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.
இதுபோல் கொடூரம் எங்கேயும் நிகழுமா? இந்த விடயம் கண்டிக்கப்படவேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது.
இந்த அரசாங்கம் குடுகாரர்களையும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் தலையில் தூக்கிச் சுமக்கின்றது. இதற்கு ஏற்றதுபோல் சில விஷமிகளும் உந்து சக்தியாக விளங்குகிறார்கள். இவை அனைத்தும் நாட்டை பாதாளத்திற்குள் தள்ளும் செயல்களாக விளங்குகின்றன என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி, ஐக்கிய சோசலிஷக் கட்சியின் பொதுச் செயலளார் சிறிதுங்க ஜயசூரிய, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் உட்பட அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள், அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கைதிகள், காணாமல்போனோரின் உறவுகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஜெயக்குமாரியை விடுதலை செய்யக்கோரி கோஷமெழுப்பியமையுடன், சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், இராணுவ ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும், ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Exit mobile version