Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அம்பின் சொந்தக்காரனும் எய்தவனும் இருக்க அம்பை நோவதேன்: செங்கோடன்

arrowவிடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை இராணுவத்தினரால் வீழ்த்தவே முடியாது என்கிற நிலையில் இருந்து விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவ பலத்தால் முற்றாக அழித்தொழிக்கப்பட்டனர் என்ற செய்தி அறிந்தபோது சாதாரண ஈழத் தமிழர்களால் அதனை நம்பவும் முடியவில்லை; ஏற்றுகொள்ளவும் முடியவில்லை. விடுதலைப்புலிகள் தமிழர்களிற்கான விடுதலையை எப்படியாவது பெற்றுதந்துவிடுவார்கள் என நம்பியிருந்த பெரும்பாலானவர்களுக்கு இலங்கை இராணுவத்தால் மட்டும் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடியாது என்பதும் தெரியும்.

விடுதலைப்புலிகளின் திடீர் அழிவிற்கு காரணம் என்ன? இருபத்தியொரு நாடுகள் இலங்கை அரசின் பின் நின்றிருந்தாலும், நிச்சயமாக தமிழர்களின் துரோகத்தனம் இல்லாது அவர்களை இலங்கை இராணுவம் வென்றிருக்க ஒருபோதும் சாத்தியமில்லை. அப்படியாக ஆராய்ந்ததில் இலங்கை இராணுவத்திற்கு மேலாக பண பதவி ஆசை கொண்ட தமிழ் வியாபாரிகளின் துரோகத்தனமே விடுதலைப்புலிகளை அழிப்பதற்குரிய பாரிய பண பலத்தையும் ஆட் பலத்தையும் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது. மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுதலும் போராடுதலும் மக்களில் தங்கியிருப்பதும் என்ற அரசியல் மூலோபாயத்திலிருந்து போராட்டம் விலகிச் சென்றது என்பது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.
2005ல் இராஜபக்ச அரசை பதவிக்கு கொண்டுவருவதற்கான தேர்தல் நிதி வழங்கியதில் இருந்து புலிகளிற்கான ஆயுத, நிதி, மருத்துவ, சர்வதேச உதவிகள் கிடைப்பதை முற்றிலுமாக தடுப்பது வரை ஈழ தமிழ் பல்தேசிய வியாபாரிகள் தமது வியாபார இலாபங்களிற்காக இந்த துரோகத்தனங்களை மக்கள் பிணங்களின் மேல் ஏறிநின்று புரிந்துள்ளனர்.

மொத்தத்தில் சொல்லபோனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எய்த அம்பு ஈழ தமிழ்வியாபாரிகளிற்கு சொந்தமானது, எய்தவர்கள் பேராசை கொண்ட ஈழதமிழ் பல்தேசிய வியாபார மிருகங்கள். இலங்கை இராணுவம் வெறும் அம்பாக மாத்திரம் தான் செயற்பட்டது. இதனை தமிழர்கள் நன்றாக விளங்கிகொண்டு இதில் இருந்து பாடங்களை கற்றுகொண்டு அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும். எமது சமூகத்தில் இருக்கும் பண,பதவி பேராசைகொண்ட முள்ளிவாய்க்கால்படுகொலைக்கு துணைபோன ஓநாய்கள் எமது சமூகத்தில் இருந்து அடித்து துரத்தவேண்டும். ( இவ்வளவும் படுகொலைகளை புரிய துணை போனவர்கள் என தெரிந்த பின்பும் லைக்கா, லிபரா விளம்பர பதாகைகளை களற்றி எறியாதது வெட்கி தலைகுனியத்தக்கது )
தோல்விதான் வெற்றிக்கு முதல்படி. நாம் அவற்றை நினைத்து தொடர்ந்தும் துவண்டுகொண்டிருக்ககூடாது. மீண்டும் தெளிவான பார்வையுடன் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு எழுச்சிகொள்ள வேண்டும். மண்டபத்துக்குள்ள போயிட்டு பூவை வாங்கி கடமைக்கு வச்சிட்டு அப்புறம் கொத்த வாங்கி சாப்பிட்டுகொண்டு ஊர்காரர கண்டு புதினம் கதைக்கிறதுக்கு பெயர் எழுச்சியல்ல.
மக்கள் தமது விடுதலைப்போராட்டம் ஏன் ( அனந்த கிருஸ்ணன், லைக்கா, லெபரா, வேதாந்தா போன்ற பல்தேசிய வியாபாரிகளின் நலனுக்காக ) எப்படி ( பல்தேசிய நிறுவனங்களின் ஆளுமைக்கு உட்பட்ட நாடுகளின் உதவியால் ) எதற்காக ( வளங்களை கொள்ளையடிப்பதற்காகவும், பதவிகளிற்காக்கவும் ) அழிக்கப்பட்டது என்ற தெளிவுடன் மாவீரர்களின் விலை மதிப்பற்ற தியாகங்களை எழுச்சிக்கான மற்றோர் முனையாகக் கருதி புரட்சிகர முற்போக்கு சக்திகளோடு உலகம் முழுவதும் கைகோர்த்துக்கொண்டு மீண்டும் எழுச்சி கொள்வதே விடுதலைக்கான வழி. தெற்காசியாவில் சிறிய நிலப்பாரப்பான ஈழம் உலகம் முழுவதற்கும் புரட்சிக்கான முன்னுதாரணமாக அமையும். எமது அனுபவங்களும், இழப்பும், கனல் தெறிக்கும் போராட்ட உணர்வுகளும் மாபெரும் சக்தியாக முன்னெழும்.

Exit mobile version