Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘அம்பாறையில் தொடரும் அச்ச நிலைமை’

   
 இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் உட்பட தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் அச்ச சூழல் நிலவுவதாக அம்மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புதிதாக நாடாளுஅமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொடியப்பு பியசேன BBC- தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தான் உட்பட பலர் அங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். நள்ளிரவு நேரங்களில் வீடுகள் தாக்கப்படுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இதன் காரணமாக மக்கள் அச்சத்துடன் வாழ்வாதகவும் அவர் தெரிவிக்கிறார்.

தனக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் உதவி தேடி வரும் மக்களுக்கு தன்னால் உதவ முடியாத நிலையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பியசேன கூறுகிறார்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தங்களது பாதுகாப்பு குறித்து அங்குள்ள மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காவல்துறையின் பாதுகாப்பில்லாமல் தன்னால் வீட்டில் கூட இருக்க முடியாத ஒரு இறுக்கமான சூழல் உள்ளது என்றும் த.தே.கூ வின் உறுப்பினர் பொடியப்பு பியசேன BBC- தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

தமது பகுதியிலுள்ள மக்கள் இது தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடு செய்வதில் துளியளவும் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

காவல்துறையிடம் முறைப்பாடு செய்யும் போது, யார் மீது புகார் செய்யப்படுகிறதோ அவரிடம் புகார் குறித்த தகவல் சென்றுவிடும் என்கிற அச்சம் காரணமாகவே மக்கள் புகார் செய்ய முன்வருவதில்லை என்றும் பியசேன கூறுகிறார்.

தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள், தான் வீட்டை விட்டு வெளியே செல்வது உசிதமில்லை என்றும் அவ்வாறு சென்றால் தங்களால் பாதுகாப்பு வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

ஆனால் இந்தப் புகார்களில் உண்மை ஏதும் இல்லை என்று அம்பாறை பகுதி முழுவதிலும் அமைதி நிலவி வருகிறது என்றும் இலங்கையின் காவல்துறை பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி கூறுகிறார்.

அம்பாறையில் அச்ச சூழல் நிலவுகிறது என்று கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் தேர்தலுக்கு பிறகு அப்பகுதியிலிருந்து தமக்கு ஒரு முறைப்பாடு கூட வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏதாவது சிக்கல் இருக்குமாயின் அவர் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் செய்யலாம் என்று கூறும் காவல்துறை பேச்சாளர், அம்பாறையில் எந்தவிதமான சட்டவிதி மீறல்களும் இல்லை என்பதை தன்னால் உறுதியாகக் கூறமுடியும் எனவும் bbc  தமிழோசையிடம் தெரிவித்தார்

BBC.

Exit mobile version