சதாசர்வகாலமும் சண்டை போட்டுக் கொண்டு இருக்காமல், அம்மா முன்னிலையில் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளுஙகள் என அம்பானி சகோதரர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.
கிருஷ்ணா-கோதாவரி படுகையில் இருந்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்துக்கு காஸ் சப்ளை செய்வது தொடர்பாக முகேஷ், அனில் அம்பானிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விவகாரம் மும்பை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஜே.என். படேல், கே.கே. டாடேத் ஆகியோர், “அம்பானி சகோதரர்கள் தங்கள் தாயார் கோகிலா பென்னை அணுகி பிரச்னை குறித்து பேசலாமே எனறனர்.
இவர்கள் பிரச்னையை சட்டப்பூரவமாக தீர்த்துக் கொண்டே இருப்பது கடினம். பேசாமல் இவர்கள் தாயாருடன் அமர்ந்து, பேசித் தீர்க்கலாம். இவ்வளவு பெரிய நிறுவனங்களை நடத்தும் அம்பானி சகோதரர்கள், எப்போதும் மோதிக் கொண்டே இருந்தால் அது நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதற்கு முன்பாகவும் ஒரு நீதிபதி, இந்த யோசனையை கூறினார். ஆனால் அப்போது இரு சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் நீதிமன்றத்தின் யோசனையை ஏற்றுக் கொள்வதாக அனில் அம்பானி தரப்பு வழக்கறிஞர் முகேஷ் ரோஹத்ஜி தெரிவித்தார். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் முகேஷ் அம்பானியை சந்திக்க அனில் அம்பானி தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால் முகேஷ் தரப்பு வழக்கறிஞர், தாம் முகேஷின் கருத்துக்காக காத்திருப்பதாகத் தெரிவித்தார்.