நிறுவனங்களின் நலன்களைக் காக்கும் வகையில் அணு விபத்து நஷ்ட ஈடு மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.இது குறித்து கட்சிப் பத்திரிகையில் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் எழுதியுள்ளதாவது:இந்தியாவில் அணு உலைகளை நிறுவ உள்ள அமெரிக்க நிறுவனங்கள், தங்களுக்கு சாதகமான வகையில் அணு விபத்து நஷ்ட ஈடு மசோதாவை மாற்ற முயற்சிக்கின்றன.போபாலில் விஷவாயு வெளியானதன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால், யூனியன் கார்பைடு நிறுவனம் வெறும் ரூ.713 கோடி கொடுத்து தப்பித்துக் கொண்டது.அணு உலைகள் மூலம் விபத்து நேரிட்டால், போபால் விஷவாயு விபத்து போல பல மடங்கு பாதிப்பு ஏற்படக் கூடும்.அணு உலைகள் மூலம் விபத்து நேரிட்டால் அதிகபட்சம் ரூ.2,140 கோடி நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அதிலும் அதிக அளவு மத்திய அரசுதான் கொடுக்க உள்ளது.ஆனால், அணு உலைகளை நிறுவுவதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கத் துடிக்கும் அமெரிக்க நிறுவனங்கள், விபத்து ஏற்பட்டால் சிறு தொகை கூட வழங்கத் தயாராக இல்லை.எனவே, அணு விபத்து நஷ்ட ஈடு மசோதாவில் திருத்தம் கொண்டு வர அமெரிக்க நிறுவனங்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்று எழுதியுள்ளார் காரத்.